Thursday, August 18, 2016

தூக்கணாங்குருவிகளும் செம்மீசைச் சின்னான்களும்..

சில வாரங்களுக்கு முன் வீட்டுத் தோட்டத்தில் தினசரி மணிக்கணக்கில் தூக்கணாங்குருவிகளின் உற்சாகக் கச்சேரி. முருங்கை மரத்தில் கூடு கட்டத் துவங்கின. மளமளவென ஒன்றல்ல மூன்று கூடுகள் ஒருசில தினங்களுக்குள் முழுமை பெற்றன. எந்நேரமும் அதில் ஊஞ்சலாடிக் கொண்டு தலைகீழாகத் தொங்கிக் கொண்டு பாட்டுப் பாடியபடி இருந்தன. கேமராவுடன் பால்கனி பக்கம் சென்றால் விர்ரென அடுத்த வீட்டு மரங்களுக்கு விரைந்தன. கிளைகளுக்குள் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்த்து கண்ணாமூச்சி ஆடின. சரி இனி தொந்திரவு செய்ய வேண்டாமெனக் கேமராவைக் கையில் எடுக்காமல் அவற்றின் விளையாட்டுகளை நாளும் பொழுதும் இரசித்தபடி இருக்கையில் திடீரென அவற்றைக் காணவில்லை. ஐந்தாறு நாட்களாக நடந்து வந்த இசைத் திருவிழா நின்று போய் மரத்தில் பேரமைதி. குருவிகளின் சங்கீதத்தைக் கேட்க முடியாத வருத்தத்தில் கிளைகளும் இலைகளும் கூட அசையாதிருந்தன. 
#3

எங்கே சென்றிருக்கும் அவை? எங்கெங்கிருந்தோ குச்சிகளை, புற்களைச் சேகரித்து வந்து இத்தனை பொறுமையாக, இத்தனை அழகாக தேர்ந்த கட்டிடக் கலை நிபுணர்களைப் போல கட்டிய கூடுகளை அத்தனை எளிதாக ஒதுக்கித் தள்ளி விட்டுப் போய் விட்டனவா? தங்கையிடம் சொன்ன போது, ஒருவேளை உள்ளே முட்டைகள் இட்டிருக்கும், திரும்பி வருமென்றாள். அப்படியும் நடக்கவில்லை. அதன் பின் சென்ற மாத இறுதியில் அடைமழையில் கூடுகள் பேய்க்காற்றில் அலைபாய்ந்தபோது ‘முட்டைகள் இருக்குமோ.. அவை என்னாகுமோ..’ எனக் கவலையுடன் கவனித்தேன். எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் குருவிகள் நிச்சயம் அவற்றை நிர்க்கதியாய் விட்டுப் போயிருக்காதே? அவற்றின் வாழ்க்கை முறை பற்றி இணையத்தில் தேடினேன்.

சுவாரஸ்யமான பல விஷயங்கள் கிடைத்தன.
விருப்பமானவர்கள் விக்கிப் பீடியாவில் இங்கும்https://en.wikipedia.org/wiki/Baya_weaver இங்கும் விரிவாகப் பார்க்கலாம். http://weavers.adu.org.za/educ.htm இந்தத் தளத்திலும் பல தகவல்கள் கிடைத்தன. [பறவைகளைப் படம் எடுக்க 200mm focal length வரையிலான லென்ஸ் இப்போது எனக்குப் போதுமானதாக இல்லை:). விரைவில் அதற்கேற்ற கருவி வாங்க வேண்டியுள்ளது. எடுத்தவரையில் சுமாராக வந்திருக்கும் படங்கள் சிலவற்றோடு அறிந்து கொண்ட பல தகவல்கள்: 

தூக்கணாங்குருவியின் உயிரியல் பெயர் Ploceus philippinus. ஆங்கிலத்தில் weaver bird (Baya weaver). 
#3
அளவிலும் உடலமைப்பிலும் ஊர்க்குருவியை ஒத்திருந்தாலும் இதன் தலையும் மார்பும் மஞ்சளாக இருக்கும். வயல்வெளியை ஒட்டிய இடங்களில் திரள்களாகக் கூடி வாழும். ஈச்சமரம் ,கருவேலமரம், இலந்தை மரம், பனை மரம் ஏன் மின் கம்பிகளிலும் கூடு கட்டும். எங்கள் வீட்டில் முருங்கை மரத்தில் கட்டியிருந்தது. 

பார்ப்பவர்களை வியக்க வைக்கும் இந்த சுரைக்காய் வடிவக் கூடுகளை புற்களின், பயிர்களின், இலைகளின், நெற்கதிர்களின் நரம்புகள் நார்களைக் கொண்டு கட்டுகின்றனவாம். ஒவ்வொரு நாரும் சுமார் 20 முதல் 60 செ.மீ நீளம் கொண்டதாக இருக்குமாம். ஒரு கூட்டைக் கட்டி முடிக்க  500 முறைகள் மேலும் கீழுமாக பறக்குமாம் ஆண் பறவை. கூட்டைக் கட்ட பதினெட்டு நாட்கள் ஆகுமென்றும், நடுவிலிருக்கும் ஹெல்மட் வடிவத்தைக் கொண்டு வர மட்டுமே எட்டு நாட்கள் பிடிக்குமென்றும் சொல்லப்பட்டிருக்கிறது என்றாலும் நான் பார்த்த கூடுகள் அதைவிட விரைவாகவே கட்டப்பட்டன.


இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் கூட்டைக் கட்டும் ஆண்குருவி அதில் தலை கீழாகத் தொங்கி ஆடிய படியும், கூவிய படியும் கடந்து செல்லும் பெண் குருவிகளுக்கு அழைப்பு விடுமாம்.  பெண் பறவை கூட்டைப் பார்த்து பிடித்திருப்பதாகச் சொன்னால்தான் தொடர்ந்து நீண்ட கீழ்பாகம் வரை, weaver bird எனும் தன் பெயருக்கேற்ப அழகாக நெய்து முடிக்குமாம் ஆண் பறவை. 
#4
பெண்குருவிகளும் தம் இரசனைக்கேற்ப கூடுகளை மேம்படுத்தும்.  கூட்டின் பக்கவாட்டில் களிமண்ணை அப்பி மின்மினிப்பூச்சிகளை ஒட்டி அழகு படுத்தும். இப்படியாக ஒப்புதல் அளித்த பெண்குருவியுடன் ஆண்பறவையின் வாழ்க்கை தொடங்கும்.

கூட்டின் உள்ளே தளம் அமைத்து 2-4 வரை வெள்ளை முட்டைகள் இட்டு அடை காக்கும் பெண் குருவிகள்.  14-17 நாட்களில் வெளிவருகிற குஞ்சுகள் 17 நாட்களில் வளர்ந்து கூட்டை விட்டுப் பறந்து சென்று விடுகின்றன. சில ஆண்பறவைகள் குஞ்சுகளுக்கு உணவளிப்பதில் உதவுகின்றன. குஞ்சுகள் வளரும் போதே பக்கத்தில் அரைகுறையாக அடுத்த கூடுகளைக் கட்ட ஆரம்பித்து விடுமாம் ஆண்பறவைகள். குஞ்சுகள் வெளியேறிய பின்புதிய கூடுகளில் தொங்கியபடி புதிய இணைகளைத் தேட ஆரம்பித்து விடுமாம். விரிவாக இங்கே வாசிக்கலாம்.

இவற்றின் ஆயுட்காலம் 10 முதல் 14ஆண்டுகள். கிராமத்து தூக்கணாங்குருவிகளே 14 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. பிடித்து வைத்து வளர்க்கப்படும் கிராமத்துப் பறவைகள் 24 ஆண்டுகள் வரை கூட வாழ்வதாகத் தெரிகிறது.

எல்லாம் சரி. நான் பார்த்த இந்தக் கூடுகள் ஏன் திடீரெனக் காலியாகி விட்டன. ஐயோ பாவம் ஆண்பறவை. ஒரு பெண் பறவைக்கும் கூடுகள் பிடிக்கவில்லை போலும்:)!
#5

*******************
சென்ற மாத இறுதியில் தொடர்ந்து பெருமழை பெய்து கொண்டிருந்தது பெங்களூரில். அப்படியான ஒரு பெருமழை இரவின் மறு காலை. தோட்டத்து வேலியில் சிறு பறவைக் குஞ்சு. மலங்க மலங்க விழித்தபடி, அங்குமிங்கும் பார்த்தபடி.
#6
இறக்கைகள் முளைத்திராத, வர்ணம் சரிவரப் புலப்படாத அதனை எந்தப் பறவையின் குழந்தை என முடிவு செய்ய இயலவில்லை. ஒருசில நிமிடங்களில் அதன் பக்கத்தில் வந்து நின்றது இந்த புல்புல்.
#7


தமிழில் செம்மீசைச் சின்னான் அல்லது செம்மீசைக் கொண்டைக்குருவி என அறியப்படும் இந்த Red-whiskered Bulbul பறவையின் உயிரியல் பெயர் Pycnonotus jocosus. 

https://en.wikipedia.org/wiki/Redwhiskered_bulbul#Behaviour_and_ecology இங்கிருந்தும், http://birds.thenatureweb.net/red_whiskered_bulbul.aspx இங்கிருந்தும் மேலும் சில தகவல்கள்: 

#8

சுமார் ஏழரை அங்குல உயரத்துடன், உடலின் கீழ்ப்பாகம் வெண்ணிறத்திலும் மேல்பாகம் பழுப்பு நிறத்திலுமாகவும் இருக்கும் புல்புல். ஆயுட்காலம் 11 ஆண்டுகள் வரையிலும். மரக்கிளைகளில் மறைந்திருந்து குரல் எழுப்ப வல்லவை எனக் கூறப்பட்டாலும் நான் பார்த்த வரையிலும் இவை சுதந்திரமாக வீட்டுத் தோட்டத்துப் புல்வெளியிலும், மரக் கிளைகளிலும் அமர்ந்து பாடுகின்றன. 

மலைக்காடுகளிலும், நகர் புறத்திலிருக்கும் தோட்டங்களிலும் பரவலாகக் காணப்படுகிற இப்பறவைகள் பெரும்பாலும் இங்கே ஜோடியாகவே வருகின்றன. ஒரு காலத்தில் இவை இந்தியாவின் பல பகுதிகளில் விரும்பி வளர்க்கப்படும் கூண்டுப் பறவையாக இருந்ததாம். எளிதாகப் பிடிக்க முடிவதாலும், பயமற்றவை என்பதாலும் மக்களால் விரும்பப்பட்டிருக்கிறது. கைகளின் மேல் அமரப் பழக்க முடியுமாகையால் சந்தைகளில் அதிகமாகப் பார்க்க முடிந்திருக்கிறது. இப்போதும் தெற்காசியாவில் அதிக அளவில் கூண்டுப் பறவைகளாக இவை விரும்பி வளர்க்கப்படுகின்றன.

இவற்றின் கூடுகள் கோப்பை வடிவிலானவை. சுள்ளிகள் வேர்கள் புற்களைக் கொண்டு சுவர்களிலும் புதர்களிலும் சிறிய மரங்களிலும் கூடு கட்டுகின்றன. பெரிய மரப்பட்டைகள், காகிதங்கள், பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு வசதிபடுத்திக் கொள்கின்றன. குஞ்சுகளை இரு பாலினப் பறவைகளுமே பராமரிக்கின்றன. பிறந்த புதிதில் புழு, பூச்சிகளையும், சற்று வளர்ந்த பின் விதை, பழங்களையும் உணவாகக் கொடுக்கின்றன. 

 குஞ்சுகள் இறக்கைகளின்றிப் பிறக்கின்றன. புல்புல்லின் முட்டைகளையும் குஞ்சுகளையும் காகங்களும் செம்போத்துப் பறவைகளும் வேட்டையாடுமாம். இந்த இடத்தில் இன்னொன்றைப் பகிர்ந்து கொள்கிறேன். வீடு மாறிய இந்த மூன்று மாதங்களில் ஒருமுறை கூட இந்தத் தோட்டத்தில் காகம் காணக் கிடைக்கவில்லை. ஆனால் செம்போத்து (செம்பகம் அல்லது செங்காகம்) பறவைகளின் நடமாட்டம் அதிகமாய் உள்ளது. 

சரி, புல்புல் குஞ்சினைப் படமாக்கிய சம்பவத்திற்கு வருகிறேன். தாய்ப்பறவையை அருகில் கண்டதுமே அது புல்புல்லின் குழந்தை எனப் புரிந்தது. தாய் (தந்தையாகவும் இருக்கலாம்) அதன் அருகே சென்று ஏதோ சொல்வதும் மீண்டும் பறப்பதுமாக இருந்தது. சிலமுறைகள் பூச்சிகளைப் பிடித்து வந்து ஊட்டியது. சிலமுறைகள் சற்று தள்ளியிருந்தே ‘கவனம். கவனம்..’ ‘பத்திரம். பத்திரம்..’ என்பது போல ஏதோ சொல்லி விட்டு, கவலையுடன் சுற்றுமுற்றும் பார்த்து குஞ்சின் பாதுகாப்பை உறுதிப் படுத்திக் கொண்டு பின் கிளம்பிச் செல்வதுமாக இருந்தது.
#9

அதன் பதட்டத்திலிருந்து நானாக ஊகித்தது. இரவு முழுவதும் சுழன்றடித்த புயல் காற்றில் புல்புல் தனது கூட்டை இழந்திருக்க வேண்டும். அதில் எத்தனை குஞ்சுகள் இருந்தனவோ, தெரியாது :( . பிழைத்த இக்குஞ்சினை பத்திரப்படுத்த வேறிடத்தில் வேறு கூடு கட்டிக் கொண்டிருக்க வேண்டும், வேலைக்கு நடுவே வந்துவந்து இதன் நலத்தையும் பார்த்துச் செல்கிறது போலும் என்றெண்ணினேன். ஒரு முறை அது குஞ்சிடம் பேசிச் சென்ற இடைவெளியில் சற்று அருகே சென்று ஓரிரு படங்கள் எடுத்தேன். தாய்ப்பறவைக்குக் கவலை தராமல் உடனடியாக அகன்று விட்டேன்.
#10

ஆனால் பறக்கத் தெரியாத குஞ்சினை அது எப்படி அழைத்து வந்து வேலியில் அமர வைத்தது..., மீண்டும் எப்படி அழைத்துச் செல்லப் போகிறதெனப் பார்க்க ஆவலாக இருந்தது. எவ்வளவு நேரம் காத்திருக்க? வெளியில் சென்று விட்டு நான்கைந்து மணிகள் கழித்து வீடு திரும்பிய போது தாயும் சேயும் அங்கிருக்கவில்லை. நம்பிக்கையோடு மனம் இன்றைக்கும் நினைத்துக் கொள்கிறது, அன்று தோட்டத்துக்கு செம்போத்து வந்திருக்கவே வந்திருக்காது என்று.., சர்ப்பம் எதுவும் (இரு முறைகள் பார்த்திருக்கிறேன்) கடந்து சென்றிருக்காது என்று.., அத்தனை பதைபதைப்புக்கும் நடுவே, தானே உழைத்து உருவாக்கிய தன் புதிய கூட்டுக்கே புல்புல் கூட்டிச் சென்றிருக்கும் தன் குஞ்சினை என்று. ஆம், அவசரத்துக்கும் கூட அடுத்தவர் உழைப்பைப் பயன்படுத்திக் கொள்ளாத ஒரு நேர்மை. வேலியில் எங்கே குஞ்சினை வைத்திருந்ததோ அதற்கு நேர்மேலே தொங்கிக் கொண்டிருந்தன தூக்கணாங்குருவிகள் விட்டுச் சென்ற காலிக் கூடுகள்.
#1

**************** 
பறவை பார்ப்போம் (பாகம் 6)
என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 3)


‘தெரிஞ்சுக்கலாம் வாங்க..'  வரிசையில் முந்தைய சில பதிவுகள்:18 comments:

 1. ஹைய்யோ!!!! அந்தக் குஞ்சு எப்படிச் செல்லம்போல் பார்க்குது! புல்புல் குஞ்சை இப்பத்தான் முதல்முறையாப் பார்க்கிறேன்.

  மனைவிக்குப் பிடிக்கலைன்னா எவ்ளோ கஷ்டப்பட்டுக் கட்டுன வீடா இருந்தாலும் வேணவே வேணாம்! மனுசனா என்ன சொத்து சுகத்துக்குப்பின்னாடியே போக!

  அந்தக் காலிக்கூடு மரத்தில் இருந்து விழுந்தால் எடுத்து நம்ம கைக்கு எட்டும் தூரத்தில் செடிகளில் கட்டி விடலாம். அது ஒரு அழகுதான். கேரளாப் பயணத்தில் நாம் தங்கி இருந்த மரியா ரிஸார்ட்டில் பார்த்தேன்.
  புது வீட்டுத் தோட்டம் அட்டகாசமா இருக்கு போல! கட்டாயம் ஒருமுறை வந்து பார்க்க ஆசையா இருக்கு! பார்க்கலாம்..... நாம் வர்ற அன்னிக்கு பாம்ப்ஸ் வராம இருக்கணும். கோபால்... அவ்ளோதான்... பய விஸ்கியாக்கும் கேட்டோ:-)

  ReplyDelete
  Replies
  1. காலிக் கூடுகள் மரத்திலேயே காய்ந்து போயின. அடுத்த முறை பெங்களூர் வரும் போது அவசியம் வாருங்கள். பயம் வேண்டாம், சத்தமின்றி வேகமாகக் கடந்து சென்று விடுகின்றன சர்ப்பங்கள். எப்போதுமே தோட்டத்துக்குள் நுழையும் போது சுற்றி வர பார்வையை வீசி விட்டுப் போனால் போதுமானதாய் இருக்கிறது:).

   Delete
 2. அந்த புல்புல் குழந்தையின் நலத்துக்கு நானும் பிரார்த்திக்கிறேன். அதன் நேர்மை பிரமிக்க வைக்கும் ஒன்று. ஆனால் அடுத்த பறவையின் கூட்டில் எப்போதும் சொந்தக்காரர் வந்துவிடும் ஆபத்து இருக்கலாம். வேறு எந்த ஜீவனாவது தற்சமயம் அங்கு குடியிருக்கும் என்கிற எச்சரிக்கை உணர்வு இருக்கலாம்.

  பாவம் அந்த ஆண் பறவை. அங்கும் பெண் பறவைகளுக்கு டிமாண்ட் போலும்!

  சுவாரஸ்யமான தகவல்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஒரே இடங்களில் வசிக்கும் பறவைகளுக்கு மற்ற பறவைகளின் வாழ்க்கை முறை தெரிந்திருக்கலாம்.. என்றெண்ணினேன். குறிப்பாக அதன் நேர்மை ஏன் பிடித்ததெனில் காட்டு மைனாக்கள் மரங்கொத்தி மற்றும் கிளிகள் சிரமப்பட்டு உருவாக்கிய மரப்பொந்துகளை அபகரித்துக் கொள்ளுமாம். ஆனால் சில வருடங்களுக்கு முன் அம்மா வீட்டு வேப்ப மரத்தில் மைனாக்கள் வசித்த கூட்டை ஒரு கிளிக்குடும்பம் அபகரித்துக் கொண்டது. அதை ஒரு கவிதையிலும் சொல்லியிருந்தேன். போலவே, குயில்கள் மற்ற பறவைகளின் குறிப்பாகக் காகங்களின் கூடுகளில் முட்டையிட்டு விட்டுச் செல்வதும் உண்டே.

   எல்லா உயிரினங்களின் வாழ்க்கை முறையும் சுவாரஸ்யமாக மட்டுமின்றி பல தகவல்கள் வியக்க வைப்பதாகவும் உள்ளன.

   நன்றி ஸ்ரீராம் :).

   Delete
 3. அருமையான தகவல்கள்
  அற்புதமானப் படங்கள்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 4. படங்களும் தகவல்களும் வெகு சிறப்பு. ஒரு முறை அலஹாபாத் நகரிலிருந்து தில்லிக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தபோது ரயில் அதிகாலை நேரத்தில் ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தது. வழியில் மின்சாரக் கம்பிகளில் ஏதோ பிரச்சனை என்றும் நான்கு ஐந்து மணி நேரத்திற்கு வண்டி அந்த இடத்தினை விட்டு அகலாது என்றும் தகவல். அப்போது ரயில் பாதையின் இருந்த மரங்களில் இப்படி நிறைய கூடுகள் - அவற்றைப் பார்த்தபடியே பொழுது போனது - கூடுகளில் பறவைகள் இல்லை!

  ReplyDelete
  Replies
  1. ஆம். கூட்டமாக அவை வாழும் இடங்களில் அருகருகே பல கூடுகளை இப்படிப் பார்க்க முடியும். இணையத்தில் சில படங்கள் அப்படி உள்ளன. நீங்கள் அக்காட்சியைப் படம் எடுக்க வில்லையா?

   பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

   Delete
 5. சிறப்பான படங்களும்...தகவலும்..நன்றி..

  ReplyDelete
 6. சிறப்பான படங்கள்...
  அருமையான தகவலும்...
  அருமை அக்கா..

  ReplyDelete
 7. எனக்கு ஒரு முறை வந்திருந்த மின் அஞ்சலில் இவை கூடு கட்டும் அழகு படங்கள் இருந்தனா. எனக்கு அதை ஒரு பதிவரோடு பகிர்ந்த நினைவு. தேடினேன் கிடைக்கவில்லை

  ReplyDelete
  Replies
  1. எத்தனை நேர்த்தியாகக் கட்டுகின்றன! இணையத்தில் கிடைக்கலாம். தேடிப் பார்க்கிறேன். நன்றி GMB sir.

   Delete
 8. அழகான ரசிக்க வைக்கும் படங்கள்! அத்துடன் பறவைகளை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்! அசத்தலான பதிவு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. அன்பு ராமலக்ஷ்மி,

  அழகிய படங்கள்.

  கூட்டை விட்டு வெளியே வந்த குஞ்சுக்காக எந்தப் பறவையும் மீண்டும் கூடு கட்டி ஆதை அங்கு கொண்டு வைக்காது. குஞ்சின் சிறாகுகளின் அளவைப்பார்த்தால் அது கூண்டில் இருந்து வெளிப் பட்டு பறக்கக் கற்றுக் கொள்ளும் நிலையில் இருப்பதாகத்தான் காண்கிறது.

  செம்மீசை புல் புல் ஒரு மிக அழகான குரல் கொண்ட பாடகன்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொன்னால் அது மிகச் சரியாக இருக்கும். தகவலுக்கு நன்றி கல்பட்டு sir.

   ஆம் புல்புல்லின் பாடலை அடிக்கடிக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஜோடியாகவே புல்வெளியில் மேய்கின்றன. பாடும் போது மரக்கிளையிலோ சுவரிலோ அமர்ந்திருக்கின்றன. நாம் தோட்டத்துக்குள் நுழையப் பார்த்தால் உடனே விர்ரெனப் பறந்து விடுவதால் அருகே சென்று படம் எடுக்க முடிவதில்லை.

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin