Friday, April 10, 2015

‘தீ வினை அகற்று’ - ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிப் போட்டியில் வெற்றி பெற்றக் குறும்படம்


ரு சிறுகதை சொல்ல வருவதை நான்கு வரிக் கவிதையில் ஆழமாக மனதில் தைக்கும்படி  சொல்லி விட முடியும். அப்படிச் சொல்வதில் வல்லவரும் ஆவார் கவிஞர் ‘உழவன்’ நவநீதக் கிருஷ்ணன். அவருக்கு ஏற்ற பாதையே இந்தக் குறும்பட இயக்கம் . “M பிக்சர்ஸ்” என்ற பெயரில் இவர் ஆரம்பித்திருக்கும் நிறுவனம், “தீ வினை அகற்று” எனும் தனது முதல் குறும்படத்தை வெளியிட்டிருக்கிறது.  "புகை உயிருக்குப் பகை" என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சி அறிவித்திருந்த போட்டியில்
வெற்றிப் படமாகத் தேர்வாகி சென்ற ஞாயிறு இருமுறை ஒளிப்பரப்பும் ஆகியுள்ளது. குழுவினருக்குப் பாராட்டுகள்!

 இரண்டு நிமிடப் படம். நேரம் ஒதுக்கிப் பார்த்திடுங்கள்.ரு விடுமுறை நாள். வீட்டு வாசல் வராந்தாவில் மூன்று குழந்தைகள். சற்றே தள்ளி இரு பெரியவர்கள் சதுரங்க ஆட்டத்தில். உயிருக்குப் பகை, உடல் நலத்துக்குத் தீங்கு என அறிந்தே அலட்சியமாகப் புகைக்கும் பழக்கத்தைத் தொடரும் மனிதரின் மனோபாவத்துக்குப் பொருத்தமானதாக அமைந்திருக்கிறது, உயிர்களோடு விளையாடும் சதுரங்கத்தை ஆடுவதாகக் காட்டியிருப்பது. எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள் குழந்தைகள். ஓவியம் தீட்டிய படியே, மாற்றி மாற்றி ரூபிக் க்யூப் புதிரை விடுத்தபடி இருப்பதும் இந்த இடத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறது.

சதுரங்க ஆட்டத்தின் நடுவில் ஏற்படும் சிறிய டென்ஷனுக்குப் புகையை நாடுகிறவன் சுற்றி இருப்பவருக்கும் அது கேடு எனும் சிந்தனை இல்லாதவனாக இருக்கிறான். உற்றுக் கவனிக்கும் குழந்தை என்ன செய்கிறது, அதைப் பார்க்கிற அவன் தடுமாறி என்ன செய்கிறான் என்பதுதான் படம். இதனால் அவன் திருந்தி விட்டான் என எடுத்துக் கொள்ள முடியாதுதான். ஒருவேளை திருந்தலாம். திருந்தாமலும் போகலாம். ஆனால் அடுத்த தலைமுறையைப் பாதிக்கிறோமே என எழுகிற சிறிய குற்ற உணர்வு போதும், அவர்களையேனும் காப்பாற்ற. விட்டுத் தொலைக்க முடியாதவர்கள் குழந்தைகள் கண் எதிரிலே புகைப்பதையாவது விட்டுத் தொலைக்கட்டும் என்பதாகக் காட்டியிருக்கிறார்கள்.

குழந்தைகள் விகாஷ், அகமதி வெண்பா, அஸ்வின் மூவரும் வெகு இயல்பாக தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். கதைக் களத்திற்கான இடத் தேர்வு அருமை. நடுவில் இருக்கும் தடுப்பு கம்பிகள், பெரியவர்-குழந்தைகள் உலகைப் பிரித்துக் காட்டுவதாக, ‘குழந்தைகளுக்குத் தாங்களே முன் மாதிரி, தங்களை எந்நேரமும் குழந்தைகள் கவனித்துக் கொண்டேயிருக்கிறார்கள்’ என்பதை மறந்து போனவர்களுக்கு அதைக் கட்டம் கட்டிக் காண்பிப்பதாக கோணங்களை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. கோணங்கள் சிறப்பாக இருந்தாலும் ஒளிப்பதிவில் இன்னும் சற்றுக் கவனம் காட்டியிருக்கலாம் என்பது என் எண்ணம். குறிப்பாக லைட்டிங், மற்றும் முடிவில் மேலும் தெளிவான க்ளோஸ் அப் காட்சிகள் அமைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

ஒரே நாளில், போட்டிக்கு அனுப்பவதற்காகச் சிந்தித்து, அவசரமாக எடுத்து, எடிட் செய்து அனுப்பப்பட்ட படம் எனத் தெரிய வந்தது. மேலும் முதல் முயற்சி என்பதால் இனி வரும் படங்களில் இவற்றில் கவனம் செலுத்துவார்கள் என நம்புவோம். தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘செல்ஃபி சூழ் உலகு’க்குக் காத்திருப்போம்.

வெகு விரைவில்..
இந்த அறிவிப்பில் பயன்படுத்தப்பட்டிருப்பது
நான் எடுத்த நிழற்படம் என்பது
ஒரு சிறிய தகவல்:).

சமூக சிந்தனையோடு கை கோர்த்திருக்கும் இந்த இளைஞர் கூட்டணி மேலும் சாதிக்க வாழ்த்துகள்!

***

14 comments:

 1. பார்த்தேன். நல்ல செய்தி சொல்லும் குறும்படம். பாராட்டுகள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. வணக்கம்
  நிச்சயம் பார்க்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. பார்த்துட்டேன். ரெண்டேநிமிசத்தில் அழுத்தமாச் சொல்லி இருக்காங்க. பாராட்டுகள்.

  ReplyDelete
 5. அருமையான பதிவு. நன்றி. வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. சீரிய செய்தி சொல்லும் குறும்படம்.

  குழுவினருக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 7. பார்த்தேன். படமும் விமர்சனமும் நன்று. பாராட்டுகள், பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin