வியாழன், 24 செப்டம்பர், 2009

இல்லாதாரும் இலவசங்களும்...


ழுத்தாலோ எண்ணத்தாலோ
செயல்படுத்தும் திட்டத்தாலோ
எழும்பும் விளைவுகள்
எளியவனை இயலாதவனை
எழுந்துநிற்க வைத்தால்
எத்தனை நலம்?
ஏங்கிநிற்கிறான் என்பதற்காக
கூனியே கையேந்தவிடுவதா
அவன்வாழ்க்கைக்கு பலம்?

'னியொரு விதி செய்வோம்
அதைஎந்த நாளும் காப்போம்
தனியொருவனுக்கு
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்!'-
பசித்தவன் கேட்டுவிட்டு
பரவசப் படட்டுமென்றா
பாடினான் பாரதி?
இல்லாதவன் கேட்டுவிட்டு
இங்கெமக்குக் குரல்கொடுக்க
இனியொரு நல்லவன்
இதுபோலப் பிறப்பானா என
நன்றியில் நனைந்து போக
வேண்டுமென்றா
எண்ணினான் பாரதி?
பாரதம் தன்னிறைவு கண்டு
பார்புகழத் தலைநிமிர்ந்து
எழுந்துநிற்க அல்லவா
எழுதினான் அந்தமகாக்கவி!

முற்றிலும் முடியாதவனா
தவறில்லை போடலாம்சோறு!
ஆனால்..
முடிந்தும் முயற்சியற்றவனா
இயன்றால்
வேளாவேளைக்குக்
கூழோகஞ்சியோ கிடைத்திட
வேலைக்கு வழிசெய்து-
உழைப்பின் உயர்வை
உன்னதத்தை
உணர்த்திடப் பாரு!
அது விடுத்துத்
தானம் என்றபெயரில்
தந்துதந்து அவனை
தன்மானம் மறக்கச்
செய்வதிடலாமா கூறு!

ல்லாதவனிடம் கொள்ளும்
இரக்கமும்
கலங்கிநிற்பாரிடம் காட்டும்
கருணையும்..
அவரை
முன்னேற்றப் பாதையில்
செல்லத் தூண்டும்
முயற்சியை வேகத்தை-
ஆர்வத்தைத் தாகத்தைக்
கொடுக்க வேண்டியது
அவசியம்.
முட்டுக்கட்டையாய்
அயற்சியை சுயபச்சாதாபத்தை
அலட்சியத்தை சோம்பலைத்
தராமல் பார்த்திடல்
அத்யாவசியம்!

னியொருவனுக்கு உணவில்லாத
ஜகத்தினை அழித்திடும்
சாத்தியம் இல்லாது போனாலும்-
சாதிக்க வேண்டிய ஜகம்
இலவசங்களால்
சக்தி இழந்திடாதிருக்க
சிந்திப்போமே!
பொன்னான பொழுதினைத்
தூங்கியே கழிப்போரையும்-
செல்லும்பாதையில் களைத்துத்
துவண்டு விழுவோரையும்-
தூக்கி நிறுத்தும்
தூண்டுகோலாய் நாமிருக்க
யோசிப்போமே!
தத்தமது காலாலே
வீறுநடை போட்டிடத்தான்
பழக்கிடுவோமே!
*** **** *** **** ***

படம்: இணையத்திலிருந்து..

*17 ஏப்ரல் 2003 திண்ணை இணைய இதழில் 'இரண்டு கவிதைகள்' தலைப்பின் கீழ் வெளிவந்த ஒரு கவிதை.

*தொடர்கின்ற இலவசங்கள், இல்லாதாரை இருக்குமிடத்திலேயே இன்னும் அழுத்தி இருத்துவது தொடர்கதையாவது கண்டு.. இதைத் தேடி எடுத்துப் பதிவிடத் தோன்றியது.
*இங்கு வலையேற்றிய பின் 2 நவம்பர் 2009 வார்ப்பு கவிதை வாராந்திரியிலும்..

59 கருத்துகள்:

  1. பசித்தவனுக்கு மீன் தருவதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடு என்று சொல்வது நினைவுக்கு வந்தது.
    /*ஏங்கிநிற்கிறான் என்பதற்காக
    கூனியே கையேந்தவிடுவதா
    அவன்வாழ்க்கைக்கு பலம்?*/
    இல்லை...இலவசங்களை அள்ளிக் கொடுத்து கெடுக்கும் அரசை என்ன சொல்வது?

    பதிலளிநீக்கு
  2. //தானம் என்றபெயரில்
    தந்துதந்து அவனை
    தன்மானம் மறக்கச்
    செய்வதிடலாமா கூறு//

    புரிவதில்லை பலருக்கும்

    புரியவைப்பதில்லை பலரும்

    :(

    பதிலளிநீக்கு
  3. /
    இல்லாதவனிடம் கொள்ளும்
    இரக்கமும்
    கலங்கிநிற்பாரிடம் காட்டும்
    கருணையும்..
    அவரை
    முன்னேற்றப் பாதையில்
    செல்லத் தூண்டும்
    முயற்சியை வேகத்தை-
    ஆர்வத்தைத் தாகத்தைக்
    கொடுக்க வேண்டியது
    அவசியம்./

    நச்! அருமையாக இருக்கிறது முத்துச்சரம்!!

    பதிலளிநீக்கு
  4. //ஏங்கிநிற்கிறான் என்பதற்காக
    கூனியே கையேந்தவிடுவதா
    அவன்வாழ்க்கைக்கு பலம்?//

    சாட்டைய‌டி கேள்வி ராம‌ல‌க்ஷ்மி மேட‌ம்... ஆனாலும், அதுதானே நிக‌ழ்கால‌த்தின் நிஜ‌ம்... ஆட்சியாள‌ர்க‌ளின் சூழ்ச்சி...

    //இல்லாதவன் கேட்டுவிட்டு
    இங்கெமக்குக் குரல்கொடுக்க
    இனியொரு நல்லவன்
    இதுபோலப் பிறப்பானா //

    இதுதானே ந‌ம் அனைவ‌ரும் ஏக்க‌மும்.... ஒரு ந‌ல்ல‌வ‌னாவ‌து ஒரு நாளாவ‌து ஆட்சி செய்ய‌ மாட்டானா என்று தானே நாம் அனைவ‌ரும் ஏங்குகிறோம்...

    //பாரதம் தன்னிறைவு கண்டு
    பார்புகழத் தலைநிமிர்ந்து
    எழுந்துநிற்க அல்லவா
    எழுதினார் அந்தமகாக்கவி!//

    க‌ன‌வு மெய்ப்ப‌ட‌ வேண்டும்... கைவ‌ச‌மாவ‌து விரைவில் வேண்டும்... த‌ன‌மும் என்ப‌தும் வேண்டும்...த‌ர‌ணியிலே பெருமை வேண்டும்... ம‌ன‌தில் உறுதி வேண்டும்...

    //முற்றிலும் முடியாதவனா
    தவறில்லை போடலாம்சோறு!
    ஆனால்..
    முடிந்தும் முயற்சியற்றவனா
    இயன்றால்
    வேளாவேளைக்குக்
    கூழோகஞ்சியோ கிடைத்திட
    வேலைக்கு வழிசெய்து-
    உழைப்பின் உயர்வை
    உன்னதத்தை
    உணர்த்திடப் பாரு!
    அது விடுத்துத்
    தானம் என்றபெயரில்
    தந்துதந்து அவனை
    தன்மானம் மறக்கச்
    செய்வதிடலாமா கூறு!//

    நெத்தி அடி... உன் கையை ந‌ம்பி உயர்ந்திட‌ பாரு... உன‌க்கென‌ எழுது ஒரு வ‌ர‌லாறு... உன‌க்குள்ளே ச‌க்தி இருக்கு... அதை உசுப்பிட‌ வ‌ழி பாரு என்று வைர‌முத்து "ப‌டைய‌ப்பா" ப‌ட‌த்தில் எழுதினார்... நானும் இதே க‌ருத்தை வ‌லியுறுத்தி ஒரு க‌விதையில் பின்வ‌ருமாறு எழுதிய‌து நினைவுக்கு வந்த‌து...

    தந்தானே தானா, தில்லாலே லேலோ

    புள்ளைங்கள படிக்க வைப்போம் தந்தானே தானா
    அந்த படிப்பறிவும் நாட்ட வளர்க்கும் தில்லாலே லேலோ

    படிக்காத நாட்டுக்குள்ள தந்தானே தானா
    பகுத்தறிவு கொரஞ்சிருக்கும் தில்லாலே லேலோ

    படிச்சுப்புட்டு சும்மா இருந்தா தந்தானே தானா
    சோத்துக்கு நீ என்ன செய்வ, தில்லாலே லேலோ

    நீ படிச்ச படிப்புக்குத்தான் தந்தானே தானா
    ஒரு வேல கெடைக்கும் தேடிப்பாரு தில்லாலே லேலோ

    இலவசமா ஏதும் தந்தா தந்தானே தானா
    வேணாமின்னு சொல்லிடுவோம் தில்லாலே லேலோ

    ஓட்டு எல்லாம் போட்டு புட்டு தந்தானே தானா
    நல்லவங்கள தேர்ந்தெடுப்போம் தில்லாலே லேலோ

    நல்லவங்கள தேர்ந்தெடுத்தா தந்தானே தானா
    நல்லாட்சி நமக்கு கெடைக்கும் தில்லாலே லேலோ

    //முட்டுக்கட்டையாய்
    அயற்சியை சுயபச்சாதாபத்தை
    அலட்சியத்தை சோம்பலைத்
    தராமல் பார்த்திடல்
    அத்யாவசியம்!//

    என் ப‌திவின் தொட‌ர்ச்சியே இத‌ற்கு ப‌திலாய் வ‌ருகிற‌து மேட‌ம்...

    அன்னாடம் பகல் பொழுதில் தந்தானே தானா
    ஓயாமத்தான் உழைச்சிடனும் தில்லாலே லேலோ

    ஒன் உழைப்பை நம்பி வாழ்ந்து பாரு தந்தானே தானா
    இந்த ஊரு, ஒலகம் ஒன்ன மெச்சும் தில்லாலே லேலோ

    உழைக்காத திரியறவங்கள தந்தானே தானா
    சோறு கேட்டு அலைய வைப்போம் தில்லாலே லேலோ

    இந்த பதிவும் எப்போதும் போல‌ ந‌ல்லா இருக்கே... வாழ்த்துக்க‌ள்...மேட‌ம்...

    பதிலளிநீக்கு
  5. //சாதிக்க வேண்டிய ஜகம் இலவசங்களால் சகதி இழந்திடாதிருக்க
    சிந்திப்போமே.//

    இல்லாதாருக்கு இலவசமாய் கைத்
    தொழில் கற்றுக் கொடுக்கலாம்.

    ”கைத் தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
    கவலை உனக்கு இல்லைஒத்துக்கொள்”

    அவர்களை சக்தி இழந்திடாதிருக்க
    செய்வோம்.

    நல்ல கவிதை.

    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  6. //சாதிக்க வேண்டிய ஜகம்
    இலவசங்களால்
    சக்தி இழந்திடாதிருக்க
    சிந்திப்போமே!//

    கலைஞர் அவர்களே நோட் திஸ் பாய்ன்ட் ;-)

    பதிலளிநீக்கு
  7. உண்மையில் இல்லாதாருக்கு மட்டும் கொடுத்தா பரவாயில்லப்பா.. இருக்கவங்களும் இல்லைன்னு கையெழுத்துப்போட்டு வாங்கறதை என்ன சொல்றது.. :(

    பதிலளிநீக்கு
  8. உணர்வு பொங்கும் உங்கள் கவிதை வரிகள், பாரதியின் எண்ணங்களைப் படம் போட்டு

    உறுதியைத் தூண்டுவதாய்
    உண்மைகள் அமைந்திருக்கின்றன.
    வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  9. அருமையான கவிதை ராமலக்ஷ்மி

    //தனியொருவனுக்கு
    உணவில்லையெனில்
    ஜகத்தினை அழித்திடுவோம்!//

    :-))

    பதிலளிநீக்கு
  10. ***எழுத்தாலோ எண்ணத்தாலோ
    செயல்படுத்தும் திட்டத்தாலோ
    எழும்பும் விளைவுகள்
    எளியவனை இயலாதவனை
    எழுந்துநிற்க வைத்தால்
    எத்தனை நலம்?
    ஏங்கிநிற்கிறான் என்பதற்காக
    கூனியே கையேந்தவிடுவதா
    அவன்வாழ்க்கைக்கு பலம்?***

    சொல்ல வேண்டியதை இதில் தெளிவா சொல்லீட்டீங்க!

    இப்போ "தானம்" செய்பவர்கள் வந்து அதை சரினு சொல்ல நினைத்தாலும், சொல்ல முடியாது.

    தானம் வாங்குபவர்கள் இங்கே வந்து "ஏழைகள்" பற்றி உங்களுக்கென்ன தெரியும்னு சொல்லவும் போவதில்லை!

    தானம் வாங்கிப் பழகிட்டா, வாங்குவதுதான் "எளிதாகிவிடும்". மானம்லாம் போயிடும்.

    தானம் செய்வது ஒரு பெரிய தொண்டாக நினைப்பவர்கள் நினைப்பவர்கள், அது உண்மையல்ல, அவர்கள் செய்கிற தவறும்கூடனு ஒத்துக்கொள்வார்களா?

    பதிலளிநீக்கு
  11. வாஸ்த்தவமான எண்ணம்.வெளிப்பாடு!நல்லா இருக்குங்க.

    பதிலளிநீக்கு
  12. எல்லாமே நல்லா இருக்கு அக்கா.. இதில் எந்த முத்தை தேர்ந்தெடுக்க...

    பதிலளிநீக்கு
  13. அப்பா, எப்படி எழுத முடியுதுங்க இந்த மாதிரி, பொறாமையா இருக்கு !!!!

    பதிலளிநீக்கு
  14. சொல்ல வந்த கருத்து நச்......... நல்ல கவிதை அக்கா

    பதிலளிநீக்கு
  15. அமுதா சொன்னதே எனக்கும் தோன்றியதால் அவங்களை வழிமொழிகிறேன். வழக்கம் போல செறிவான சிந்தனை ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  16. அருமை! மீன் பிடிக்க கற்றுத்தா, மீனை கொடுக்காதே என்ற ஜேம்ஸ் ஆலன் கருத்தை ஒட்டிய கவிதை. என் வீட்டில் கூட ஒரு இலவச டிவி:-))எங்கே வைபதுன்னு தெரியலையே!

    பதிலளிநீக்கு
  17. //எளியவனை இயலாதவனை
    எழுந்துநிற்க வைத்தால்
    எத்தனை நலம்?//

    மிகவும் நலம்....

    பதிலளிநீக்கு
  18. //'இனியொரு விதி செய்வோம்
    அதைஎந்த நாளும் காப்போம்
    தனியொருவனுக்கு
    உணவில்லையெனில்
    ஜகத்தினை அழித்திடுவோம்!'-//

    பாரதி இன்று இருந்திருந்தால்

    இனியொரு விதிசெய்வோம்
    அதை எந்த நாளும் காப்போம்

    தனியொருவனுக்கு
    குடிக்க நீர் இல்லையெனில்
    ஜகத்தினை அழித்திடுவோம்

    என்று பாடியிருப்பார்

    அந்த அளவுக்கு குடிக்கவே நீர் இல்லை
    எனும் நிலைக்கு நாம் சென்றுவிட்டோம்..

    பதிலளிநீக்கு
  19. //தானம் என்றபெயரில்
    தந்துதந்து அவனை
    தன்மானம் மறக்கச்
    செய்வதிடலாமா கூறு!//

    உண்மையான கருத்து...

    பதிலளிநீக்கு
  20. தாமதத்துக்கு மன்னிக்கவும். உங்கள் கவிதையின் கருத்து அருமை. கவிதை அழகு.
    தொடருங்கள் தோழி.

    பதிலளிநீக்கு
  21. இலவசங்களுக்காக கூட்டத்தோடு கூட்டமாய் வரிசையில் நிற்பதைக்கூட பெருமையாய் நினைக்கும் அளவிற்கு நம்மை அரசியல் மாற்றிவிட்டது.
    வியர்வை மணம் கமழும் அழகிய கவிதை.

    பதிலளிநீக்கு
  22. அமுதா said...

    //பசித்தவனுக்கு மீன் தருவதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடு என்று சொல்வது நினைவுக்கு வந்தது.//

    அழகாய் சொல்லிவிட்டீர்கள் அமுதா.


    ***//*ஏங்கிநிற்கிறான் என்பதற்காக
    கூனியே கையேந்தவிடுவதா
    அவன்வாழ்க்கைக்கு பலம்?*/

    இல்லை...இலவசங்களை அள்ளிக் கொடுத்து கெடுக்கும் அரசை என்ன சொல்வது?/***

    நாட்டை நல்ல பாதையில் கொண்டு செல்லுமா தேவையற்ற இலவசங்கள் என சிந்திக்க வேண்டும் அரசு.

    கருத்துக்கு நன்றி அமுதா.

    பதிலளிநீக்கு
  23. ஆயில்யன் said...
    //புரிவதில்லை பலருக்கும்

    புரியவைப்பதில்லை பலரும்

    :(//

    நன்றாகச் சொன்னீர்கள் ஆயில்யன்!
    நாட்டைப் பற்றிய கவலை..
    வோட்டை வாங்கியதும் முடிந்தது அவருக்கு;
    வோட்டைப் போட்டதோடு மறந்தது
    இவருக்கு!

    இது அரசியலில்.

    தனிப்பட்ட வாழ்விலும் ‘பாத்திரம் அறிந்து..’ பழமொழியை நினைவில் கொள்ளலாம் தானம் தருகையில்!

    பதிலளிநீக்கு
  24. சந்தனமுல்லை said...

    //நச்! அருமையாக இருக்கிறது முத்துச்சரம்!!//

    நன்றி முல்லை.

    பதிலளிநீக்கு
  25. R.Gopi said...

    //நெத்தி அடி... உன் கையை ந‌ம்பி உயர்ந்திட‌ பாரு... உன‌க்கென‌ எழுது ஒரு வ‌ர‌லாறு... உன‌க்குள்ளே ச‌க்தி இருக்கு... அதை உசுப்பிட‌ வ‌ழி பாரு என்று வைர‌முத்து "ப‌டைய‌ப்பா" ப‌ட‌த்தில் எழுதினார்...//

    அப்பாடலைக் கேட்காதவர் இருக்க முடியாதே:)!

    //நானும் இதே க‌ருத்தை வ‌லியுறுத்தி ஒரு க‌விதையில் பின்வ‌ருமாறு எழுதிய‌து நினைவுக்கு வந்த‌து..//

    மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் கோபி. அத்தனை வரிகளும் அசத்தல். முடித்தவிதம் இன்னும் அழகு:
    ***ஒன் உழைப்பை நம்பி வாழ்ந்து பாரு தந்தானே தானா
    இந்த ஊரு, ஒலகம் ஒன்ன மெச்சும் தில்லாலே லேலோ

    உழைக்காத திரியறவங்கள தந்தானே தானா
    சோறு கேட்டு அலைய வைப்போம் தில்லாலே லேலோ***

    வாழ்த்துக்கள் கோபி. இது போல இன்னும் நிறைய எழுதுங்கள்.

    உங்கள் விரிவான கருத்துக்களுக்கும், பதிந்த பாடலுக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  26. கோமதி அரசு said...

    ****/ //சாதிக்க வேண்டிய ஜகம் இலவசங்களால் சகதி இழந்திடாதிருக்க
    சிந்திப்போமே.//

    இல்லாதாருக்கு இலவசமாய் கைத்
    தொழில் கற்றுக் கொடுக்கலாம்.

    ”கைத் தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
    கவலை உனக்கு இல்லைஒத்துக்கொள்”

    அவர்களை சக்தி இழந்திடாதிருக்க
    செய்வோம். /****

    கருத்துக்கு நன்றி. இதனால் ஏற்படும் தன்னம்பிக்கையே அவர்களுக்கு புதிய சக்தியைக் கொடுத்திடும் என்பதில் ஐயமில்லை.

    //நல்ல கவிதை.

    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோமதி அரசு.

    பதிலளிநீக்கு
  27. கிரி said...

    ****/ //சாதிக்க வேண்டிய ஜகம்
    இலவசங்களால்
    சக்தி இழந்திடாதிருக்க
    சிந்திப்போமே!//

    கலைஞர் அவர்களே நோட் திஸ் பாய்ன்ட் ;-)/****

    காலத்துக்கும் பயனளிக்கப் போவது இலவசங்கள் அல்ல. அவர்களுக்கு உழைப்பின் உன்னததைத்தை உணர்த்துவதே வரும் தலைமுறைகளும் வளம்பெற வழிவகுக்கும். நமது சொல் அம்பலம் ஏறுமா:)?

    நன்றி கிரி!

    பதிலளிநீக்கு
  28. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    //உண்மையில் இல்லாதாருக்கு மட்டும் கொடுத்தா பரவாயில்லப்பா.. இருக்கவங்களும் இல்லைன்னு கையெழுத்துப்போட்டு வாங்கறதை என்ன சொல்றது.. :(//

    அப்படிச் செய்வதைக் கேவலமாக கருதாதவரை எதுவும் செய்வதற்கில்லைதான்:(! உழவனின் கருத்தைப் பாருங்கள்!

    பதிலளிநீக்கு
  29. Mrs.Menagasathia said...

    //அருமையான கவிதை!!//

    முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேனகாசத்யா!

    பதிலளிநீக்கு
  30. வல்லிசிம்ஹன் said...

    // உணர்வு பொங்கும் உங்கள் கவிதை வரிகள், பாரதியின் எண்ணங்களைப் படம் போட்டு உறுதியைத் தூண்டுவதாய்
    உண்மைகள் அமைந்திருக்கின்றன.
    வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

    கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  31. சிங்கக்குட்டி said...

    //அருமையான கவிதை ராமலக்ஷ்மி//

    நன்றி சிங்கக்குட்டி!

    பதிலளிநீக்கு
  32. வருண் said...
    // சொல்ல வேண்டியதை இதில் தெளிவா சொல்லீட்டீங்க!//

    நன்றி.

    //இப்போ "தானம்" செய்பவர்கள் வந்து அதை சரினு சொல்ல நினைத்தாலும், சொல்ல முடியாது.//

    ஒருவரின் வாழ்க்கைக்கு எது தரும் பலம் என்கிற சிந்தனை வேண்டும்தானே?

    //தானம் வாங்குபவர்கள் இங்கே வந்து "ஏழைகள்" பற்றி உங்களுக்கென்ன தெரியும்னு சொல்லவும் போவதில்லை!//

    இங்கே வரப் போவதில்லை என்பதாலே நாம் எது வேண்டுமானாலும் சொல்லிவிட மாட்டோம்தானே:)?

    உதவி எந்த இடத்தில் எவருக்கு எந்த விதத்தில் தேவைப்படுகிறது என்பதை அறிந்து செய்வதுதான் என்றைக்கும் உண்மையான உதவியாக இருக்க முடியும்.

    //தானம் வாங்கிப் பழகிட்டா, வாங்குவதுதான் "எளிதாகிவிடும்". மானம்லாம் போயிடும்.//

    எளிய வழியே போதுமென்றும் ஆகி விடும்.

    //தானம் செய்வது ஒரு பெரிய தொண்டாக நினைப்பவர்கள் நினைப்பவர்கள், அது உண்மையல்ல, அவர்கள் செய்கிற தவறும்கூடனு ஒத்துக்கொள்வார்களா?//

    தெரியாது. சந்தேகம்தான். சற்றேனும் சிந்தித்தால் நல்லது.

    கருத்துக்களுக்கு நன்றி வருண்!

    பதிலளிநீக்கு
  33. தியாவின் பேனா said...

    //நல்ல இணைப்புக்கு நன்றி//

    நன்றி தியா.

    பதிலளிநீக்கு
  34. பா.ராஜாராம் said...

    //வாஸ்த்தவமான எண்ணம்.வெளிப்பாடு!நல்லா இருக்குங்க.//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜாராம்.

    பதிலளிநீக்கு
  35. ஆதிமூலகிருஷ்ணன் said...

    // நன்று அக்கா.!//

    நன்றி தாமிரா!

    பதிலளிநீக்கு
  36. சுசி said...

    //எல்லாமே நல்லா இருக்கு அக்கா.. இதில் எந்த முத்தை தேர்ந்தெடுக்க...//

    எல்லாக் கருத்துக்களுடன் ஒத்துப் போவதற்கு நன்றி சுசி:)!

    பதிலளிநீக்கு
  37. சின்ன அம்மிணி said...

    //அப்பா, எப்படி எழுத முடியுதுங்க இந்த மாதிரி, பொறாமையா இருக்கு !!!!//

    நன்றி சின்ன அம்மிணி:)!

    பதிலளிநீக்கு
  38. அத்திரி said...

    //சொல்ல வந்த கருத்து நச்......... நல்ல கவிதை அக்கா//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அத்திரி!

    பதிலளிநீக்கு
  39. மூன்று செய்திகளை நினைவூட்டியது உங்கள் அழகிய கவிதை வரிகள்.

    நினைத்தேன். கரெக்டா அமுதா சொல்லிட்டாங்க.

    //பசித்தவனுக்கு மீன் தருவதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடு என்று சொல்வது நினைவுக்கு வந்தது. //

    இரண்டாவது, பாரதிக்கு மரியாதை: இதுபோல பாரதி பற்றி கூறுகையில், கொஞ்சம் உரிமை எடுத்து 'சொன்னான், எழுதினான்' என்றே எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதுவே நம்மில் இருந்து அவரை (கவனிக்க) சற்று விலக்கி வைப்பதாகிவிடுகிறது.

    மூன்றாவது, கவிதைப் பொருள்:

    //சாதிக்க வேண்டிய ஜகம்
    இலவசங்களால்
    சக்தி இழந்திடாதிருக்க
    சிந்திப்போமே!//

    இலவசங்கள் படுத்தும் பாட்டை என்னவென்று சொல்வது ? இத்தனை அழகாக சொன்னதற்கு வாழ்த்துக்கள். அரசியல்வாதிகளும், விளம்பரதாரர்களுமா திருந்த வேண்டும் ?? இல்லை, இல்லை, சாட்சாத் நாமே !!!!

    பதிலளிநீக்கு
  40. ராமலக்ஷ்மி!

    எதை எதையோ எழுதி ரொம்ப குழப்பி(ம்பி)விட்டேன்னு நினைக்கிறேன்.:))) திருப்தியா இல்லை. அதனாலின்னும் கொஞ்சம் குழப்புறேன் :))))

    நான் என்ன சொல்ல் வந்தேன்னா...

    தானம் வாங்குறவங்கலயும் மற்றும் கொடுக்கிற இரக்ககுணம் உள்ள நல்லவர்களிலும்ல நிச்சயம் "ஜெனியூன் கேஸெஸ்" இருக்கத்தான் செய்கிறார்கள்.அவர்களை நாம் குறை சொல்லக் கூடாதுதான்.சொல்லவும் இல்லை.

    சாதாரண நண்பர்கள், சொந்தக்காரர் களில் கூட பலவகையான மனிதர்கள் இருக்காங்க. அதேபோல்தான் "தானம் வாங்குறவங்களையும்" பலவகைகள் உள்ளார்கள்னு நினைக்கிறேன்.

    அந்தப்பலவகைகளில் நீங்கள் சொல்ல வந்ததும், நான் சொல்லுவதும் தானம் வாங்குவதை தவிர்க்க முடிந்தவர்களை த்தான். தவிர்க்க முடிந்தவர்கள் தானம் வாங்குவதும், அவர்களுக்கு தானம் செய்து அவர்களை கெடுப்பதும் தவறு என்று!

    பெரியவர்கள் குழப்புவது...

    ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
    ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று - ஒளவையார்

    ஈதல் இசைபட வாழ்தல், அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” - வள்ளுவர்

    ஆனால் அவர்கள் ஜெனியூன் கேஸானு கண்டுபிடிக்க நம்ம முயன்றோம்னு வச்சுக்கோங்க, நமக்கு கஷ்டகாலம்தான்!

    சரி, நான் இதோட நிறுத்திக்கிறேங்க! :)

    பதிலளிநீக்கு
  41. கவிநயா said...

    //அமுதா சொன்னதே எனக்கும் தோன்றியதால் அவங்களை வழிமொழிகிறேன். வழக்கம் போல செறிவான சிந்தனை ராமலக்ஷ்மி!//

    அமுதா அழகாய் சொன்னதை அன்புடன் வழிமொழிந்தமைக்கு நன்றி கவிநயா!

    பதிலளிநீக்கு
  42. அபி அப்பா said...

    //அருமை! மீன் பிடிக்க கற்றுத்தா, மீனை கொடுக்காதே என்ற ஜேம்ஸ் ஆலன் கருத்தை ஒட்டிய கவிதை.//

    நன்றி அபி அப்பா. அமுதாவின் கருத்தை எல்லோரும் போல ஏற்று வழிமொழிந்தமைக்கு.

    //என் வீட்டில் கூட ஒரு இலவச டிவி:-))எங்கே வைபதுன்னு தெரியலையே!//

    சரியாப் போச்சு:))! எப்படியோ என் கருத்தை ஏற்றுக் கொண்டீர்களே, நன்றி:)!

    பதிலளிநீக்கு
  43. பிரியமுடன்...வசந்த் said...

    ****/ //எளியவனை இயலாதவனை
    எழுந்துநிற்க வைத்தால்
    எத்தனை நலம்?//

    மிகவும் நலம்.... /****

    **** //தானம் என்றபெயரில்
    தந்துதந்து அவனை
    தன்மானம் மறக்கச்
    செய்வதிடலாமா கூறு!//

    உண்மையான கருத்து.../****

    நன்றி வசந்த்!

    //தனியொருவனுக்கு
    குடிக்க நீர் இல்லையெனில்
    ஜகத்தினை அழித்திடுவோம்

    என்று பாடியிருப்பார்//

    புன்னகைக்க வைத்தாலும் சுத்தமான குடிநீருக்கே மக்கள் அல்லாடும் நிலைமை வருத்தத்துக்குரியது.

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி வசந்த்!

    பதிலளிநீக்கு
  44. ஜெஸ்வந்தி said...
    // உங்கள் கவிதையின் கருத்து அருமை. கவிதை அழகு.
    தொடருங்கள் தோழி.//

    தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெஸ்வந்தி!

    பதிலளிநீக்கு
  45. " உழவன் " " Uzhavan " said...

    //இலவசங்களுக்காக கூட்டத்தோடு கூட்டமாய் வரிசையில் நிற்பதைக்கூட பெருமையாய் நினைக்கும் அளவிற்கு நம்மை அரசியல் மாற்றிவிட்டது.//

    வருத்தமான உண்மை.

    //வியர்வை மணம் கமழும் அழகிய கவிதை.//

    நன்றி உழவன்!

    பதிலளிநீக்கு
  46. சமீபத்தில் படித்தவற்றில் முத்தான, சத்தான எழுத்து உங்களுடையது.

    (அமுதா said...)
    //பசித்தவனுக்கு மீன் தருவதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடு என்று சொல்வது நினைவுக்கு வந்தது.//

    எவ்வளவு அர்த்தமுள்ள பின்னூட்டம்.

    இரக்கம் தேவைதான். ஆனால் அது அவனை உள் இழுக்கும் புதை குழியாக்க அனுமதித்து விடக்கூடாது.

    இறைவன் எனக்கு இணையம் மூலம் இலவசமாய்க் கொடுத்த வாகனமும், மடிக்கணினியும், என்னை முன்னோக்கி அழைத்துச் செல்வதில் முக்கியப் பங்காற்றுவதை, ஈரம் கசியும் நன்றிகளுடன் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

    இது போன்ற சமுதாய முன்னேற்றத்துக்கான படைப்புகள் நிறைய தேவைப் படுகின்றன.

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  47. சதங்கா (Sathanga) said...

    // நினைத்தேன். கரெக்டா அமுதா சொல்லிட்டாங்க.//

    அழகாய் வ(அமை)ந்த முதல் பின்னூட்டம் அது.
    -------------------------
    //இரண்டாவது, பாரதிக்கு மரியாதை: இதுபோல பாரதி பற்றி கூறுகையில், கொஞ்சம் உரிமை எடுத்து 'சொன்னான், எழுதினான்' என்றே எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதுவே நம்மில் இருந்து அவரை (கவனிக்க) சற்று விலக்கி வைப்பதாகிவிடுகிறது.//

    டன்! எடிட் செய்து விட்டேன். “அவன் இவன் என்ற ஏகவசனம் தேவையில்லை. அவையடக்கத்தோடு கேட்டால் தக்க பதில் தரப்படும்” என நக்கீரன் சிவனிடம் சொல்வது நினைவுக்கு வந்து அச்சுறுத்தினாலும் இறைவனையே நெருக்கத்துடன் ‘ன்’ போட்டுப் பாடப்பட்ட பாடல்கள்தான் எத்தனை இல்லையா:)?
    ---------------------------
    // மூன்றாவது, கவிதைப் பொருள்:

    //சாதிக்க வேண்டிய ஜகம்
    இலவசங்களால்
    சக்தி இழந்திடாதிருக்க
    சிந்திப்போமே!//

    இலவசங்கள் படுத்தும் பாட்டை என்னவென்று சொல்வது ? இத்தனை அழகாக சொன்னதற்கு வாழ்த்துக்கள்.//

    நன்றி!

    // அரசியல்வாதிகளும், விளம்பரதாரர்களுமா திருந்த வேண்டும் ?? இல்லை, இல்லை, சாட்சாத் நாமே !!!!//

    இதுதான் நெத்தியடி. இலவசங்களுக்கு இல்லாதவர் மட்டுமா ஆசைப்படுகிறார்கள்? 'இதற்கு இது இலவசம்' என்றால் தேவையில்லாவிட்டாலும் அப்பொருளை வாங்குவோர் எத்தனைபேர்:)?

    விரிவான கருத்துக்களுக்கு நன்றி சதங்கா!

    பதிலளிநீக்கு
  48. நசரேயன் said...

    // நல்லா இருக்கு //

    நன்றி நசரேயன்.

    பதிலளிநீக்கு
  49. வருண் said...
    //எதை எதையோ எழுதி ரொம்ப குழப்பி(ம்பி)விட்டேன்னு நினைக்கிறேன்.:)))//

    நிச்சயமாய் இல்லை. இப்போது நீங்கள் விவரித்திருக்கும் கருத்துக்களைதான் அப்போதும் முன் வைத்தீர்கள் என்ற புரிதலுடன்தான் பதிலளித்தேன் என்றாலும், நான் சொன்ன விதத்தில் உங்களைக் குழப்பி விட்டேன் என நினைக்கிறேன்:)!
    ---------------------------------

    //தானம் வாங்குறவங்கலயும் மற்றும் கொடுக்கிற இரக்ககுணம் உள்ள நல்லவர்களிலும்ல நிச்சயம் "ஜெனியூன் கேஸெஸ்" இருக்கத்தான் செய்கிறார்கள்.அவர்களை நாம் குறை சொல்லக் கூடாதுதான்.சொல்லவும் இல்லை.//

    சமுதாயத்தில் இருந்து நாம் பெறும் நன்மைகளை நமக்குக் கீழே இருப்பவருக்கும், (நீங்கள் சொன்ன மாதிரி ஜென்யூனாக) சில சங்கடங்களில் தவிப்பவருக்கும் திருப்பி செய்ய வேண்டியது ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள தார்மீகக் கடமையே.
    --------------------------------

    //அந்தப்பலவகைகளில் நீங்கள் சொல்ல வந்ததும், நான் சொல்லுவதும் தானம் வாங்குவதை தவிர்க்க முடிந்தவர்களை த்தான். தவிர்க்க முடிந்தவர்கள் தானம் வாங்குவதும், அவர்களுக்கு தானம் செய்து அவர்களை கெடுப்பதும் தவறு என்று!//

    அதேதான்!
    -------------------------------

    //ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
    ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று - ஒளவையார்

    ஈதல் இசைபட வாழ்தல், அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” - வள்ளுவர்//

    //பெரியவர்கள் குழப்புவது...//

    அல்லது அவர்கள் சொன்னதன் அர்த்தத்தை நாம் குழப்பிக் கொள்வது:)?
    ------------------------------

    //ஆனால் அவர்கள் ஜெனியூன் கேஸானு கண்டுபிடிக்க நம்ம முயன்றோம்னு வச்சுக்கோங்க, நமக்கு கஷ்டகாலம்தான்!//

    இதையும் ஆமோதிக்கிறேன். சில சமயங்களில், பொய் சொல்லி என்பதை விடவும் (கட்டுக்)கதை அளந்து உதவி பெற்றிடுவார் சிலர். உண்மை தெரியவருகையில் ‘ஏமாற்றப்பட்டு விட்டோம்’ என்கிற ஆயாசம் ஒருகணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லைதான். ‘நாம் நல்லது நினைத்துதானே செய்தோம். விடு’ என்பார் கணவர்.

    தங்களை மறுபடி நீண்ட விளக்கம் கொடுக்க வைத்து விட்டேன் என்றாலும், அருமையான விளக்கங்களுக்கு நன்றி வருண்!

    பதிலளிநீக்கு
  50. +VE Anthony Muthu said...

    // சமீபத்தில் படித்தவற்றில் முத்தான, சத்தான எழுத்து உங்களுடையது.//

    சரியான புரிதலுடன் தங்களிடமிருந்து இப்படியொரு பாராட்டு வந்ததற்கு மகிழ்கிறேன்.
    ----------------------------------

    (அமுதா said...)
    //பசித்தவனுக்கு மீன் தருவதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடு என்று சொல்வது நினைவுக்கு வந்தது.//

    எவ்வளவு அர்த்தமுள்ள பின்னூட்டம்.

    இரக்கம் தேவைதான். ஆனால் அது அவனை உள் இழுக்கும் புதை குழியாக்க அனுமதித்து விடக்கூடாது.//

    அதுவேதாங்க நான் சொல்ல வந்ததும்.
    --------------------------------

    //இறைவன் எனக்கு இணையம் மூலம் இலவசமாய்க் கொடுத்த வாகனமும், மடிக்கணினியும், என்னை முன்னோக்கி அழைத்துச் செல்வதில் முக்கியப் பங்காற்றுவதை, ஈரம் கசியும் நன்றிகளுடன் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.//

    இலவசமாக என்று குறிப்பிடாதீர்கள் அந்தோணி. அது நண்பருக்கு ஆற்ற வேண்டிய கடமையாகக் கருதி அன்புடன் செய்யப்பட்ட உதவி. அதை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி முன்னோக்கி சென்றபடி, எல்லோருக்கும் முன்னோடியாக, சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.
    --------------------------------

    //இது போன்ற சமுதாய முன்னேற்றத்துக்கான படைப்புகள் நிறைய தேவைப் படுகின்றன.

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.//

    கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அந்தோணி!

    பதிலளிநீக்கு
  51. // தனியொருவனுக்கு
    உணவில்லையெனில்
    ஜகத்தினை அழித்திடுவோம்!'-
    பசித்தவன் கேட்டுவிட்டு
    பரவசப் படட்டுமென்றா
    பாடினான் பாரதி? //


    பாரதி ரொம்ப உணர்ச்சிவசப் பட்டுட்டார்....!! அவர் இப்போ உயிரோடு இருந்திருந்தா ரொம்ப வேதனை பட்டிருப்பாறு....!!



    ரொம்ப அழகா இருக்கு கவிதை நடை...!! வாழ்த்துக்கள் சகோதரி...!!

    பதிலளிநீக்கு
  52. /சாதிக்க வேண்டிய ஜகம்
    இலவசங்களால்
    சக்தி இழந்திடாதிருக்க
    சிந்திப்போமே!/

    /ஏங்கிநிற்கிறான் என்பதற்காக
    கூனியே கையேந்தவிடுவதா
    அவன்வாழ்க்கைக்கு பலம்?
    /

    /தானம் என்றபெயரில்
    தந்துதந்து அவனை
    தன்மானம் மறக்கச்
    செய்வதிடலாமா கூறு!/

    அருமையான வரிகள்

    புரிந்தால் வாழ்க்கை
    புரிய‌வேண்டும் ப‌ல‌ரின் செய்கை

    /ஒன்றுக்கு மூன்று இலவசம்
    என்று அறிவித்துவிட்டாலோ
    செத்த பிணங்களும்
    விற்றுத் தீரும் அவலம் /


    இது தான் சமுதாயம் என்பதை
    அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்துள்ளீர்கள்

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  53. லவ்டேல் மேடி said...

    //பாரதி ரொம்ப உணர்ச்சிவசப் பட்டுட்டார்....!! அவர் இப்போ உயிரோடு இருந்திருந்தா ரொம்ப வேதனை பட்டிருப்பாறு....!!//

    உண்மைதான் மேடி!

    //ரொம்ப அழகா இருக்கு கவிதை நடை...!! வாழ்த்துக்கள் சகோதரி...!!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  54. திகழ் said...

    //அருமையான வரிகள்

    புரிந்தால் வாழ்க்கை
    புரிய‌வேண்டும் ப‌ல‌ரின் செய்கை//

    நன்றி திகழ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வலையின் பக்கம் வந்துள்ளீர்கள். நலமா?

    ***/ /ஒன்றுக்கு மூன்று இலவசம்
    என்று அறிவித்துவிட்டாலோ
    செத்த பிணங்களும்
    விற்றுத் தீரும் அவலம் /

    இது தான் சமுதாயம் என்பதை
    அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்துள்ளீர்கள்/***

    உண்மைதான், இலவசம் என்பது மனிதனை ஆட்டிப் படைக்கிறது. தங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  55. மின்னஞ்சல் வழியாக..:
    //Hi Ramalakshmi,

    Congrats!

    Your story titled 'இல்லாதாரும் இலவசங்களும்...' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 24th September 2009 11:30:02 PM GMT

    Here is the link to the story: http://www.tamilish.com/story/117111

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team//

    தகவலுக்கு நன்றி தமிழிஷ். வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin