திங்கள், 23 ஜூன், 2008

மெகா முதலைகள்



தொலைக்காட்சித் தொடர்களிலே
தொலைந்து போகும் மணித் துளிகள்!
தொடருகின்ற அவலம் உணர்ந்து
திறப்பதெப்போ கண்கள்தனை?

அரை மணிதான் அரை மணிதான்-என
அடுத்தடுத்துப் பார்க்கையிலே
நித்தம் நித்தம் செலவாவது
எத்தனை அரை மணிகள்?

கூட்டிதான் பாருங்களேன்
வெட்டியாக வீணாகும்-தங்கக்
கட்டியான மணித் துளிகள்
ஆண்டொன்றுக்கு எத்தனை என?

பொன் போன்ற காலம்
பொசுங்கிப் போவது புரிந்திடுவீர்!
திரும்பி அது வாராது
தெளிவாகத் தெரிந்திடுவீர்!

'ரிலாக்ஸ் ' செய்யவெனக் காண்பது போய்
தொடர் பார்ப்பதே தொழிலாகி-
அன்றாட வேலைகள்தான் 'ரிலாக்ஸ் '
என ஆகலாமா?

கவலை மறக்கக் காட்சித் தொடர்
என்பது போய்-
கதா பாத்திரங்களுக்காகக்
கவலைப்படுவது முறைதானா?

சாபமிடும் சத்தங்களும்
ஓலமிடும் ஒலிகளும்-நாம்
வாழுகின்ற இல்லங்களில்
ஒலிப்பதும் நல்லதல்ல!

மெல்ல மெல்ல விழுங்குகின்ற
மெகாத் தொடர் முதலைகளிடம்
முழுதாகப் பலியாகாமல்
முன்னேற வழியேது?

தேர்ந்தெடுத்துப் பார்க்கையிலே
தேங்கி நிற்கும் பல வேலைகளைத்
தேனீ போல முடித்திடத்தான்
தேவையான நேரம் கிடைத்திடுமே!

மேலும் சேருகின்ற நேரத்தில்
நல்ல இசை கேட்டிடலாம்-
புத்தகங்களைத் துணையாக்கிப்
புத்துணர்ச்சி பெற்றிடலாம்!

முத்தான மணித் துளிகளைக்
கொத்தாக இழப்பதை நிறுத்தி-
சத்தான எதிர் காலத்துக்கு
வித்திடுவீர் விரைவாக!
***
[July 3, 2003 திண்ணை இணைய இதழில் வெளி வந்தது. ஆண்டுகள் ஐந்து உருண்டோடினும் மெகாக்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன ஐந்து ஆண்டுகளாய் வெற்றி நடை போடும் மெகாவையும் சேர்த்து. கூடவே சேர்ந்து கொண்டு விட்டன ஆட்டபாட்ட நிகழ்ச்சிகள்...ஹூம்ம்!!!]

[படம்:இணையத்திலிருந்து]




இக்கவிதை 7 ஏப்ரல் 2009 இளமை விகடன் இணைய தளத்திலும்:

ஞாயிறு, 15 ஜூன், 2008

ஜூன் PIT போட்டி- A Day at Work

தித்திக்கும்
தேனினை நாம் சுவைத்திட
வானினை முட்டிடும் கட்டிட உச்சியிலே-
தத்தித் தத்தி
தவழுது பார் ஓருயிர்-
சுற்றிப் பறக்கும் தேனீக்கள்
கொட்டிடுமோ எனும் அச்சமின்றி!


[அடுக்கு மாடிக் குடியிருப்பின் ஒன்பதாவது தளத்தில்
காணக் கிடைத்த இக் காட்சியை
அடுத்த கட்டிடத்தின் ஆறாவது தளத்திலிருந்து
எப்போதோ என் காமிராவில் அடைத்தேன்.
இப்போது போட்டிப் படமாகத் தந்தேன்.

அந்த நூறடி உயரமே ஒரு ரிஸ்க்- ரீங்காரமிடும்
அந்த நூற்றுக் கணக்கான தேனீக்கள்...
தன்னைக் காத்துக் கொள்ள எக்கவசமுமின்றி...
படத்தைக் 'க்ளிக்' கிட்டுப் பார்த்தால் தெரியும்.
பால்கனியில் நின்று இன்னும் க்ளோஸாக எடுத்திருக்க
முடியுமானாலும், அவர் கவனம் சிதறி விடக் கூடாதென்று
பதறி அறை ஜன்னலுக்குள் இருந்து எடுத்தேன்.]
***


புதுமனை துலங்கிட புரோகிதம்.
***


சுத்தம் சோறு போடும்


சுத்தம்(தான்) இவர்களுக்குச் சோறு போடுகிறது.
***


குழந்தைக்குச்
சோறும் பாலும் ஊட்டி
பசி போக்கும்
தாயைக் காட்டலாமெனில்
ஈறும் பேனும் நீக்கி
தலை பேணும்
தமக்கை தாயையும்
காட்டலாம்தானே!

***










வெள்ளி, 13 ஜூன், 2008

சிந்திக்க வைக்கும் சி.வா.ஜி

தொடர் விளையாட்டில் வல்லிசிம்ஹன் அழைப்பின் பேரில்
சி வா ஜி
வா யி லே
ஜி லே பி
என்ற தலைப்பில் எழுத அழைக்கப் பட்டேன்.
மேலும் கீழும், இடமும் வலமுமாய் மூன்று முறை வாசிக்கணுமா?
ஒரே முறையாய், முறையான வாழ்வின் தத்துவமாய்
பின் வருகின்ற கவிதையின் முதல் எழுத்துக்களை
மட்டும் கூட்டிக் கொண்டே செல்லுங்களேன் பார்ப்போம்.

சிரித்து வாழ வேண்டும்
வாழ்க்கையை பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!
'ஜிம்'க்குப் போக வேண்டும்
வாழ்வின் ஆதாரம் ஆரோக்கியமாகும்!
லகுவாய் எதுவும் கிடைக்காது-ஆகையால்
லேசிலே முயற்சியை விடாதே!
'ஜில்'லென்று ஒரு வாழ்க்கை அமைய
லேட்டாய் செய்யலாம் என எவ்வேலையையும்
பின் தள்ளிப் போடாதே !
*** *** ***
இப்படியாக சிம்பிளாய் வந்து விட்டார் என் சி.வா.ஜி.-இந்த
சிவாஜி சந்திக்க அல்ல சிந்திக்க!
வாயிலே நல்வார்த்தை வருமா சபாஷென?-இங்கு
ஜிலேபி ருசிக்க அல்ல ரசிக்க!
*** *** ***

இப்போது இத்தலைப்பில் சங்கலித் தொடராய் எழுதிட நான் அழைப்பது சதங்கா, கவிநயா, கயல்விழி முத்துலெட்சுமி.

வியாழன், 5 ஜூன், 2008

ஜானி ஜானி நோ பப்பா:( ?


"ப்பா ப்ளீஸ், அப்பா ப்ளீஸ்"

"ஏண்டா இப்படிக் கிளம்புற நேரத்தில் உயிரை வாங்கிற! சொன்னா சொன்னதுதான்." பெட்டிகளை வேனில் ஏற்றுவதில் மும்முரமாக இருந்த ரகுபதி சுள்ளென்று எரிந்து விழுந்தார்.

முரளிக்கு கண்ணீர் வந்தது. மெல்ல மண்டியிட்டு அமர்ந்து ஜானியின் கழுத்தைக் கட்டிக் கொண்டான். "இல்லடா ராஜா, உன்னை விட்டுட்டு போயிட மாட்டேன்" என்றான் அடிக்குரலில். அதற்கு புரிந்ததோ என்னமோ வழக்கத்தை விட அதிக பாசத்துடன் வாலை ஆட்டியபடி அவனிடம் குழைந்தது.

வீட்டுக்குள் இருந்து எதேதோ சாமான்களை வேனில் ஏற்றுவதற்காக சிரமத்துடன் தூக்கிக் கொண்டு வெளியில் வந்த அக்கா கல்பனா கோபத்தில் கத்தினாள். "எப்படி அல்லாடுறேன்! இங்க வந்து ஒரு கை கொடேன். இன்னும் ஏன் அதோடயே இழைஞ்சிட்டு நிக்கறே ? சனியனை என்னவானாலும் கூட்டிட்டுப் போகறதில்லேன்னு ஆயிடுச்சு." ஜானியைக் கண்டாலே அவளுக்கு அப்படியொரு வெறுப்பு. ஜானிக்கு பயந்துதான் தன் தோழிகள் யாரும் வீட்டுக்கு வருவதில்லை என்று வேறு நினைப்பு.

"போடி உன் வேலையைப் பாத்துக்கிட்டு" பதிலுக்குச் சீறினான் முரளி. 'சே! ஜானி எவ்வளவு நன்றியாய் பாசமாய் இருக்கிறது! யாரும் அதைப் புரிஞ்சுக்கவே மாட்டேன்கிறார்களே! ' வருத்தம் மேலிட அதைத் தடவிக் கொடுத்தான்.

ஜானி குட்டியாய் இருந்த போது, ஒரு மழை நாளில் குளிரில் நடுங்கியபடி இவன் வீட்டு வராந்தாவில் பதுங்க, பாவப்பட்டு அடைக்கலம் கொடுக்கப் போய் இவனுடனேயே ஒட்டிக் கொண்டது. இந்த இரண்டு வருடத்தில் 'திமுதிமு ' என ஒரு பெரிய கன்றுக்குட்டியின் சைசுக்கு என்னமாய் வளர்ந்து விட்டது. ஸ்கூலுக்கு, கடைக்கு, நண்பர் வீடுகளுக்கு என் எங்கு போனாலும் கூடவே வரும்.

இப்போது அப்பாவுக்குப் பதவி உயர்வோடு மாற்றலாகி விட்டது. வீட்டு சாமான்களெல்லாம் டெம்போவில் போயாகி விட்டது. இவர்களும் இன்று கிளம்புகிறார்கள். ஜானியைக் கூட அழைத்துப் போக வேனில் இடமிருந்தாலும் வீட்டிலுள்ளவர்கள் மனதில் இடமில்லையே.

கடைசி நிமிடம் வரை போராடிப் பார்த்து விடுவது எனத் தீர்மானித்தவன் போல "அப்பா ப்ளீஸ், அப்பா ப்ளீஸ்" என மறுபடியும் கெஞ்ச ஆரம்பித்தான் முரளி.

"டேய் சும்ம தொணதொணக்காதே! ஏதோ ரொம்ப ஆசைப்பட்டியேன்னு இது நாள் வரை அதை இருக்க விட்டதே பெரிசு. நான்தான் அங்கே போனதும் உனக்கு வேற நாய் வாங்கித் தர்றேன்னு சொல்றனே! " என்றார் எரிச்சலாய்.

"ஏம்பா! அந்த புது நாய் என் ஜானியாகிட முடியுமா என்ன ? "கண்ணில் நீர் முட்டக் கேட்டான் முரளி.

"புரியாம பேசறியேடா! வாங்கிற நாய்க்கும் ஜானின்னு பேர் வச்சா போச்சு! நாம போற இடத்தில அவனவன் டாபர்மேன், அல்சேஷன்னு வளர்த்திட்டிருப்பான். அங்கே இந்த தெரு நாயைக் கூட்டிட்டுப் போனா நம்ம ஸ்டேட்டஸ் என்னாகிறது? "

"சரியா சொன்னீங்கப்பா, 'புசுக் புசுக்'குன்னு பட்டுப் போல ஒரு பொமரேனியனை வாங்கி வளர்ப்போம்" என்று ஒத்துப் பாடினாள் கல்பனா.

"நீ சும்மா இருடி" என்று அவளை அதட்டிய முரளி ஒரு கணம் அப்பாவை உறுத்துப் பார்த்து விட்டுக் கேட்டான், "ஏம்ப்பா இந்த வாயில்லா ஜீவன்கள் கிட்டேயே ஜாதி பார்க்கிற நீங்களா மனுஷங்களுக்கிடையே உள்ள ஜாதி வித்தியாசங்களை ஒழிக்கப் போறீங்க?"

த்து வயது பாலகனின் அந்தக் கேள்வி, பல ஆயிரம் பாம்புகள் கொத்தியது போலிருந்தது ரகுபதிக்கு.

நேற்று அவருக்கும் குடும்பத்தினருக்கும் தரப்பட்ட பிரிவு உபசார விழாவில், தான் பேசியதைத்தான் முரளி குறிப்பிடுகிறான் எனப் புரியாமல் இல்லை.

"எனக்குப் பதவி உயர்வு கிடைச்சிருக்குன்னு தெரிஞ்சதும் ஜாதி சங்கத்திலே இருந்து கூட்டமா வந்து எனக்குப் பாராட்டு விழா எடுக்க விரும்புறதா சொன்னாங்க. 'முதல்ல உங்க சங்கத்தை கலைச்சுட்டு வாங்க. நான் உங்களுக்கு பெரிய விழா எடுத்துட்டுப் போறேன்'னு நான் சொன்னேன்"

நன்றியுரை ஆற்றும் போது அவர் சொன்னதைக் கேட்டு சிரித்த கூட்டத்தை நோக்கி கையமர்த்தி விட்டு ஆவேசமாய் "ஜாதி என்னய்யா ஜாதி ? நான் உசந்தவன், நீ தாழ்ந்தவன்கிற சண்டையே ஜாதியாலதான் வருது. ஜாதிகள் மறையணும்னா முதல்படியா சங்கங்கள் கலையணும். போற இடத்திலே எல்லாம் நான் இதை அஞ்சாமல் அடித்துச் சொல்லத்தான் போகிறேன்" என்றார் ரகுபதி.

அப்போது கை தட்டிக் கரகோஷித்தக் கூட்டம் இப்போது கை கொட்டி சிரிப்பது போல மனதுக்குள் ஒரு பிம்பம் தோன்றி மறைய, தலையை உலுக்கிக் கொண்டார் ரகுபதி.

"எவ்வளவு திமிர் இருந்தா அப்பாவையே எதிர்த்துப் பேசுவ நீ" என்று சமயம் பார்த்துத் தன் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள கை ஓங்கிய கல்பனாவைத் தடுத்த ரகுபதி, முரளியைக் கனிவுடன் நோக்கி "ஜானியும் நம்ம கூட வருது" என்றார்.


***



'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்ற தலைப்பில் ஆகஸ்ட் 1992 'நண்பர் வட்டம்' இலக்கியப் பத்திரிகையிலும், பின்னர் August 28, 2003 திண்ணை இணைய இதழிலும் வெளிவந்த சிறுகதை.

படம் : இணையத்திலிருந்து

இங்கு வலையேற்றிய பின் மார்ச் 11, 2009 யூத்ஃபுல் விகடன் இணையதளத்தில் கீழ் காணும் தலைப்புடன் வெளிவந்த இச்சிறுகதைக்கு விகடன்.காம் முகப்பிலும் லிங்க் தரப்பட்டிருந்தது:


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin