வியாழன், 7 மே, 2026

வெயில் ஆடும் சுவர் - பண்புடன் மின்னிதழில்..

 


பாயின் மேல் 
தன் பொம்மைகளை நிறுத்துகிறாள்.
முதலில் டெடி, அருகே 
ஒற்றைக் காலணியைத் தொலைத்த பார்பி, 
மர ரயில், சிவப்பு ஜீப், 
தூக்கக் கலக்கத்தில் நாய்க்குட்டி, 
துடிக்கும் மீசையுடன் பூனை,
தும்பிக்கை தூக்கிய யானை.
நேர்த்தியான வரிசையில் 
அனைத்தையும் அடுக்குகிறாள்.

சாக்பீஸைக் கையில் பிடித்து 
கோணலாக, ஆனால் 
தெளிவாக எழுதுகிறாள். 
"நான் சொல்வதை 
அப்படியே சொல்லுங்கள்" 
இனிமையாக அழைக்கிறாள், 
சுவர்களில் 
வெயில் ஆடிக் கொண்டிருக்கையில்.

பராக்கு பார்த்த 
பார்பியைக்  கண்டிக்கிறாள்,
நேராக எழுதிய டெடிக்கு
நட்சத்திரம் வழங்குகிறாள்,
“சத்தம் போடாதே” என 
ரயிலை அதட்டுகிறாள்,
அவளது சிரிப்பொலி 
அறை முழுவதும் 
சுழன்றாடுகிறது.

மென்மையான குரலில்
தன் ஆசிரியையின் முகபாவனையை
அப்படியே பிரதிபலிக்கிறாள்.
தனக்குத் தெரிந்த உலகத்தை
அவர்களுக்குக் கற்பிக்கிறாள் - 
பட்டாம்பூச்சிகள், மேகங்கள்,
மஞ்சள் ரோஜாக்கள் பற்றி.

கதவுக்கு வெளியே, 
வீடு அமைதியாக இருக்கிறது. 
மிக அமைதியாக.
அந்த நிசப்தத்திலும் 
அவள் தொடர்ந்து கற்பிக்கிறாள் -
பொம்மைகள் கற்க வேண்டும்
என்பதற்காக அல்ல,
கேட்பதற்கு யாருமற்ற
பேரமைதியின் இரைச்சலை
எதிர்கொள்ளத் தெரியாதவளாய்.
*
படம்: AI உருவாக்கம்.
**
நன்றி பண்புடன்!

*** 

 

 

3 கருத்துகள்:

  1. அங்கேயே படித்தேன்.  கருத்துரையும் இட்டேன்.  வெளியிடுகிறார்களா என்று தெரிவதில்லை.  கவிதை அருமையாக இருந்ததது.  இந்த மாதிரி குழந்தை விளையாட்டுக் காட்சிகளை பார்த்திருக்கிறேன்.  உடனே கவிதையோடு ஒன்ற முடிந்தது.

    பதிலளிநீக்கு
  2. கவிதை நன்று.

    பேரமைதியின் இரைச்சலை.... வித்தியாசமான சிந்தனை சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. கவிதை அருமை. குழந்தைகளின் டீச்சர் விளையாட்டு எப்போது ரசிக்க முடியும் அதுபோல உங்கள் கவிதையை ரசித்தேன். வெயில் ஆடியதையும் ரசித்தேன்.
    ஏ.ஐ தயாரித்த படம் அழகு.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin