வெள்ளி, 1 மே, 2026

கவிதை வாசிப்புகள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (25) - பண்புடன் இணைய இதழில்..


விதை வாசிப்புகள்
எப்போதும் மிகவும் சோகமான சாபக்கேடான 
விஷயங்களில் ஒன்றாகவே இருக்க வேண்டும்.

குலத்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள்
ஆண்களும் பெண்களுமாக,
வாரம் தோறும், மாதம் தோறும், 
வருடம் வருடமாக, ஒன்றாக வயதாகி,
சிறு கூட்டங்களுக்கு முன் வாசித்துக் கொண்டு
தங்கள் மேதைமை என்றாவது ஒருநாள் 
கண்டுபிடிக்கப்படும் என்று நம்பிக் கொண்டு
நாடாக்களிலும் தட்டுகளிலும் பதிவு செய்தபடி
கைத்தட்டல்களுக்காக வியர்த்தபடி
அடிப்படையில் ஒருவருக்கொருவர் வாசித்தபடி.

அவர்களுக்கு நியூயார்க்கில் 
ஒரு பதிப்பகம் கிடைப்பதில்லை,
அருகாமையிலும் கூட.
ஆனாலும் அவர்கள் 
வாசித்துக் கொண்டே போகிறார்கள்
அமெரிக்காவின் கவிதைத் துளைகளில்,
சற்றும் தளர்ந்து விடாமல்,
தங்கள் திறமை சொற்பமானது
கிட்டத்தட்டக் கண்ணுக்குத் தெரியாதது  
என்று சிறிதும் சிந்திக்காமல்.

அவர்கள் தொடர்ந்து 
வாசித்துக் கொண்டே போகிறார்கள்
தங்களது அம்மாக்கள், சகோதரிகள், கணவர்கள்,
தங்களது மனைவிகள், நண்பர்கள், பிற கவிஞர்கள் 
மற்றும் எங்கிருந்தோ வழி தவறி உள்ளே வந்து விட்ட
சில முட்டாள்களுக்கு முன்னால்.

நான் அவர்களுக்காக வெட்கப்படுகிறேன்,
அவர்கள் ஒருவரையொருவர் தாங்கிப் பிடிக்கும்
நிலைமையைப் பார்த்து வெட்கப்படுகிறேன்,
அவர்களது தளர்ந்த அகங்காரத்தையும்
அவர்களது தைரியமின்மையையும் பார்த்து
வெட்கப் படுகிறேன்.

இவர்கள்தான் நம் படைப்பாளர்கள் எனில்,
தயவுசெய்து, தயவுசெய்து 
வேறு ஏதாவது கொடுங்கள் எனக்கு: 

பந்து உருட்டும் அரங்கில் 
மது போதையிலிருக்கும் 
ஒரு குழாய்ப் பணியாளன்,
நான்கு சுற்றுப் போட்டியில் இருக்கும் 
ஒரு இளம் குத்துச்சண்டை வீரன்,
தடுப்புவேலி ஓரத்தில் 
குதிரையை வழிநடத்தும் பரிப்பாகன்,
கடைசி அழைப்பில் இருக்கும் 
ஒரு மதுபான விடுதி ஊழியன்,
எனக்கு காபி ஊற்றும் 
ஒரு பணிப்பெண்,
வெறிச்சோடிய வாயிலில் தூங்கும் 
ஒரு குடிகாரன்,
உலர்ந்த எலும்பை மெல்லும் 
ஒரு நாய்,
சர்க்கஸ் கூடாரத்தில் 
யானையொன்றின் அபான வாயு,
மாலை ஆறு மணி 
நெடுஞ்சாலை வாகன நெரிசல்,
ஆபாச நகைச்சுவை சொல்லும்
ஒரு தபால்காரன்.

எதுவானாலும்
எதுவானாலும்
ஆனால்
இவர்களைத் தவிர்த்து.
*

மூலம்: "Poetry Readings" By Charles Bukowski

*
தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
*
படம்: AI உருவாக்கம்
*

சார்லஸ் புக்கோவ்ஸ்கி  (1920 – 1994):
ருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படுபவர் ஹென்றி சார்லஸ் புக்கோவ்ஸ்கி. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மானியர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார்.  புக்கோவ்ஸ்கியின் எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. எளிய மனிதர்களின் வாழ்க்கையை  உணர்ச்சிகரமாகவும், நேர்மையாகவும் பதிவு செய்தார். 

ஆறு நாவல்கள், ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள் யாவும் சுமார் அறுபதுக்கு மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. அனைத்துமே அமெரிக்க விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாகக் கொண்டவை. இவரது எழுத்து நடை, நேரடி எதார்த்தவாதம் (Dirty Realism) எனும் பாணியில் அடங்குகிறது. சார்லஸ் புக்கோவ்ஸ்கி இரண்டு உலகப் போர்கள் மற்றும் வியட்நாம் போர் ஆகியவற்றைத் தன் வாழ்க்கையில் பார்த்திருக்கிறார். அவர் படைப்புகளில் பரவலாக வெளிப்படும் அவநம்பிக்கை, கசப்புணர்வு ஆகியவற்றுக்கு இந்தக் காலக்கட்டங்களே காரண கர்த்தாவாகக் கைகாட்டப் படுகின்றது. 

**

25 ஏப்ரல் 2026, பண்புடன் இணைய இதழில்..,

நன்றி பண்புடன்!


**


9 கருத்துகள்:

  1. கவிதை வாசிப்புக் கூட்டங்களை இப்படிச் சாடுகிறாரே என்பது அவரது கவிதை வரிகளிலும் தெரிகிறது. சமூகத்தின் வேறொரு பக்கம்.

    ஆனால் அக்கவிதைகள் வாசித்தவர்கள் எப்படியான கவிதைகளை எழுதினார்கள் என்பது நமக்குத் தெரியவில்லையே.

    தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது.

    முடிந்தால் ஆங்கிலத்தில் இருக்கும் original கவிதைகளையும் தந்தால், தமிழாக்கம் எப்படிச் செய்ய வேண்டும் என்பதும் புரிந்து கொள்ளலாம் என்றுதான்.

    தமீழில் நீங்கள் கொடுப்பது பலவும் ரசனையாக இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துகளுக்கு நன்றி கீதா. மொழியாக்கங்களைப் பகிரும் போது மூலக் கவிதையைப் பற்றிய குறிப்பு எப்போதும் கொடுக்கப் படுகிறது. நீங்கள் சொல்வது போல இரண்டையும் சேர்த்துப் பகிர்ந்தால் கவிதையின் உள்ளடக்கத்தை விடவும் மொழியாக்கம் எப்படி என்பதிலேயே வாசகர் கவனம் செல்ல வாய்ப்புள்ளது. சிலர் மூலப் படைப்பை மட்டும் வாசித்து விட்டுக் கடந்து விடவும் கூடும். ஆர்வமுள்ளவர்கள் மூலக் கவிதையை இணையத்தில் தேடி வாசித்துக் கொள்வதே சரியாக இருக்கும்.

      நீக்கு
  2. ஹென்றி   சார்லஸ் புக்கோவ்ஸ்கி பற்றி தெரிந்து கொண்டேன்.  கவிதையை ரசித்தேன்,

    பதிலளிநீக்கு
  3. தமிழாக்கம் செய்த கவிதை நன்று. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. ஹென்றி சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை தமிழாக்கம் அரௌமை.
    அவர் மிகவும் விரக்தியாக கவிதையை எழுதி இருக்கிறார் போலும் என்று நினைத்தேன். அவரை பற்றிய செய்திகள் அவநம்பிக்கை, கசப்புணர்வு உள்ள மனிதன் என்று தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin