கிளைகளைப் பற்றி அமரும் பாஸரின் வகைப் பறவைகளில் ஒன்று. சாம்பல் நிறத்தில் சிறிய காகம் போன்ற தோற்றத்தைக் கொண்டது.
சாம்பல் வயிற்றுக் காக்காவின் மொத்த உயரம் சுமார் 23 செ.மீ இருக்கும். வளர்ந்த பறவைகளுக்கு அடிவயிறும், வால் நுனியும் வெள்ளை நிறத்தில் இருக்கும். (வாலின் வெள்ளைப் பட்டையைப் படத்தில் காணலாம்).
சில பெண் பறவைகள் மேல் பகுதியில் அடர்ந்த கோடுகள் கொண்ட சிவப்பு அல்லது பழுப்பு நிறத்துடன், கோடுகள் இல்லாத வாலையும், அழுத்தமான அடர் - கோடுகள் கொண்ட வெள்ளை நிறக் கீழ்ப்பகுதிகளையும் கொண்டிருக்கும். இளம் பறவைகள் பெண் பறவையை ஒத்திருக்கும், ஆனால் மங்கிய சாம்பல் நிறத்தில் இருக்கும்.
பூச்சிகளை இரையாக்கிக் கொள்ளும். உயர்மரக்கிளைகளில் கம்பளிப்பூச்சி போன்றவற்றைத் தேடி உண்ணும்.
இவை குறுகிய தூரம் புலம்பெயர்ந்து செல்லும் பறவைகளாகும்.
குளிர்காலத்தில் வெப்பமான பகுதிகளைத் தேடிச் செல்கின்றன. இவை அதிக அடர்த்தி இல்லாத காடுகள் மற்றும் பயிரிடப்பட்ட பகுதிகளை விரும்புகிறது.குளிர் காலத்தில் மௌனமாக இருக்கும். இனப்பெருக்கக் காலத்தில் பீபிப்பீ பீ என்றும், பீ பிப்பீ பிப்பீ என்று மெல்லத் தொடங்கி பீபிப்பீ பீ என்று ஸ்ருதியைக் கூட்டித் தொடர்ந்து பாடும். நிலவு வெளிச்சம் இல்லாத இரவிலும் இதன் குரலைக் கேட்கலாம்.
குயில்களைப் போலவே இவை அடைகாக்கும் ஒட்டுண்ணித்தன்மை (Brood Parasitism) கொண்டவை. குயில் (குக்கூ) குடும்பத்தைச் சேர்ந்த பல பறவைகளைப் போலவே, தமது முட்டைகளைத் தாமே அடைகாத்துக் குஞ்சு பொரிக்காமல், மற்ற சிறிய பறவைகளின் கூடுகளில் முட்டையிடும் வழக்கம் கொண்டவை. இவை தையல்சிட்டு, தேன்சிட்டு, கதிர்க்குருவி போன்ற பாடும்பறவைகளை (warblers) புரவலர்களாகப் பயன்படுத்துகிறது. இந்த சிறு பறவைகளின் கூட்டில் ஜீன் முதல் செப்டம்பர் வரையிலும் முட்டைகளை இட்டுச் சென்று விடும். அவை இவற்றின் முட்டைகளை அடைகாத்து, குஞ்சுகள் பொரிந்ததும் உணவளித்துப் பராமரிக்கின்றன. தன் சொந்தக் குஞ்சுகளுக்கு மாற்றாந்தாய் போல் ஆகிவிடுவதாலேயே இவற்றுக்கு “சக்களத்திக் குயில்” என்ற பெயர் வந்தது.
ஆசியா முழுவதும் பரவலாகக் காணப்படும் பறவை இனம் எனக் கூறப்பட்டாலும் எங்கள் தோட்டத்தில் அபூர்வமாக ஒரே ஒரு முறையே காண வாய்த்தது. அதுவும் ஒரு சில நொடிகள் மட்டுமே. எனவே ஒரு படம் மட்டுமே எடுக்க முடிந்தது.
இப்பறவைகள் இந்தியா-இலங்கை முதல் தென் சீனா-இந்தோனேசியா வரையிலுமாக வெப்பமண்டல தெற்காசியாவில் இனப்பெருக்கம் செய்கின்றன. வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இவற்றின் இருப்பு பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாலும் இந்த இனத்திற்கு சரியான கணக்கெடுப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக