புதன், 24 ஜூலை, 2024

தரைக் கீரை - தேனீக்கள் தேடி வரும் Common Purslane

 #1

ழகுக்காக வளர்க்க ஆரம்பித்த இந்தத் தாவரம், கீரை வகையைச் சேர்ந்தது என அறிய வர சில காலம் ஆனது. தரைக்கீரை அல்லது பருப்புக்கீரை என அழைக்கப்படும் இவற்றைத் தரையில் ஊன்றினால் ஒன்றரையடி உயரம் வரை மட்டுமே வளரும். தொட்டிகளில் கொடி போலத் தவழ்ந்து இறங்கி அழகாகக் காட்சி தரும். 

#2


இலைகள் சற்று சதைப் பற்றுடன் இருக்கும்.

#3


இதன் ஆங்கிலப் பெயர்: common purslane, pigweed

தாவரவியல் பெயர்:  Portulaca oleracea

இக்கீரையில் மட்டுமே 40 வகைகள் உண்டு என்பதும் தமிழ்நாட்டில் சாரணைக்கீரை, சாரநெத்தி, சொக்காம் புல் கீரை, நங்கினிக்கீரை, கொத்துக்கீரை, வட்ட மொட்டுக்கீரை, பலக்கீரை,  கொத்துக்கீரை, தரை பாசிலிக்கீரை என்றும் இலங்கையில் மூக்குரைசிக்கீரை, மூக்கிறைச்சி என்றும் பலவிதமாக அழைக்கப்படுகிறது என்பதும் சுவாரசியமான தகவல்.

சுவை மிக்கதாக அறியப்படும் இந்தக் கீரையை இதன் செந்நிறக் காம்புகளுடன் சேர்த்து அரிந்து பருப்புடன் கடைந்து சாதத்தில் கலந்து உண்பார்கள்.  கண்களுக்கு ஒளியைத் தருவதோடு சிறுநீரை அதிகப்படுத்தி, மலம் இளக்கும் மருந்தாகவும் செயல் படுகிறது. மிகுந்த குளிர்ச்சி உடையது என அறிய வந்ததால் நான் சமைப்பதைத் தவிர்த்து விட்டேன். பயன்படுத்துகிறவர்கள் இதன் சுவையைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்:).

பூக்கள்:

#4


இந்தத் தாவரத்தைத் தொடர்ந்து அவதானித்ததில் இதன் பூக்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களுடன் சுமார் ஒன்றரை செ.மீ அளவில் இருக்கும். இதழ்கள் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிந்து ஒரு குவளையைப் போல் காட்சியளிக்கும். மலரின் சூலகம் மெல்லிய காம்புகளையும், முனையில் சிறு பூ வடிவைக் கொண்ட ஒரு குறியையும் கொண்டிருக்கும். 

இந்த மிகச் சிறிய பூவில் தேன் அதிகம் என்பதற்கு அதை எந்நேரமும் தேடி வரும் எறும்புகளும் தேனீக்களும் வண்டுகளுமே சாட்சி.

#5

#6

பூக்களில் ‘காலை மகிமை’ (மார்னிங் க்ளோரி) என அறியப்படும் பூக்கள் சுமார் 2000 வகைகள். பெயருக்கு ஏற்றாற் போல இவை சூரிய ஒளி பிரகாசமாக இருக்கையில் முழுதாக விரிந்து பின் சூரியன் சாயும் நேரத்தில் சுருங்கிக் கொள்பவை.

அதில் ஒரு வகையைப் பற்றிப் பல வருடங்களுக்கு முன் 2012_ல் இந்தப் பதிவில் பகிர்ந்திருந்தேன்: மார்னிங் க்ளோரி - படிப்படியாக மலர்கின்ற அழகு / https://tamilamudam.blogspot.com/2012/10/blog-post_14.html

இன்னொரு வகையான, இதே போன்ற மஞ்சள் நிறத்தில் ஆனால் சற்றே பெரிதாக சுமார் ஓரங்குல விட்டத்தில் பூக்கும் செடியைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்: சூரியத் துளிகள் - Yellow Alder / https://tamilamudam.blogspot.com/2020/07/yellow-alder-75.html

தரைக் கீரையின் பூக்களும் மார்னிங் க்ளோரி போலவே சூரிய ஒளி பிரகாசமாகும் நேரத்தில் முழுதாக மலர்ந்து வண்டுகளையும், தேனீக்களையும், எறும்புகளையும் உற்சாகமாக உபசரித்தபடி இருக்கும். பெங்களூரில் மாலை நேரத்தில்தான் ஒளி குறையத் தொடங்கும் என சொல்வதற்கில்லை. மழைக்காலம், சூரியனைத் தேடிப் பிடிக்க வேண்டியிருக்கும் குளிர்காலம் அல்லது மேகமூட்டம் ஆனாலே சட்டென ஒளி குறைந்து விடும். அந்த நேரங்களில் இப்பூக்கள் மெல்ல மூடிக் கொள்கின்றன.

கீழ்வரும் இரு படங்கள் ஒரு மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்டவை:

#7


#8

Morning Glory 

#9


#10



விரிந்த பூக்களில் விருந்துண்ணும் பூச்சிகள்

#11


#12


#13

**
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 206
***

15 கருத்துகள்:

  1. படங்களும், தகவல்களும் சுவாரஸ்யம்.  கீரை பற்றி புதிதாக கேள்விப்படுகிறேன்.  சாலையோரங்களில் இதுபோல இலைகளை உடைய செடிகளையும், மஞ்சள் மலர்களையும் கண்டிருக்கிறேன். இவைதானா என்று தெரியாது.  கடையில் வாங்கினாலே ரிஸ்க் எடுக்கத் தோன்றாது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். எனக்கும் இது சாப்பிடக் கூடியதென்பதை இணையத்தில் தேடியே தெரிந்து கொண்டேன். கீதாவும் இப்போது அதை உறுதி படுத்தி விட்டார்.

      நீக்கு
  2. படங்கள் அழகு. ஒரு மணி நேர இடைவெளியில் கல்லென பூக்கள் மலர்ந்து காணப்படுவது அழகு.

    பதிலளிநீக்கு
  3. முளைக்கீரை அதிகம் உபயோகிப்போம்.  அப்புறம் பசலைக்கீரை, மணத்தக்காளிக் கீரை.  அரைக்கீரை அக்கேஷனலாய்..  வெந்தயக்கீரை எப்போதாவது!  மற்றபடி வேறு கீரைகளை அணுகியதில்லை!

    பதிலளிநீக்கு
  4. இந்தக் கீரையை நாங்கள் பருப்புக்கீரை என்று சொல்வோம். சிட்னியில் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் தானாகவே வளரும். அவ்வப்போது பறித்து சமைப்பதுண்டு. பருப்பு சேர்த்து கூட்டு செய்வேன். பசலைக்கீரை போன்று இருக்கும். சுவை மிக நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கீதா, பருப்புக் கீரை என்பது பரவலாக அறியப்பட்ட மற்றொரு பெயர். உண்ணலாம் என்பதையும் சுவையைப் பற்றியும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி :). சமைத்துப் பார்க்கிறேன்.

      நீக்கு
  5. இந்த செடி ஆர்கிட் வகையை சேர்ந்தது என்று நினைத்தேன், எங்கள் வீட்டில் தொட்டியில் அழகு செடியாக மதில் மேல் வைத்து இருந்தேன்.
    இப்படித்தான் வண்டுகள் நிறைய வரும்.
    படங்கள் எல்லாம் அழகு. விவரங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகுக்காகப் பெரும்பாலும் வளர்க்கப்படுகின்றன. வாய்ப்பு கிடைத்தால் சமைத்துப் பாருங்கள். நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. படங்களும் தகவல்களும் சிறப்பு. கீரை வகை என்று இப்போது தான் தெரிந்தது. இங்கே சில இடங்களில் இவற்றை அழகுக்காக வைத்திருப்பதை பார்த்ததுண்டு. பூக்களில் எறும்புகளும் தேனீக்களும் - அழகு.

    பதிலளிநீக்கு
  7. கீரையில் தொடங்கி…, மொட்டு ஒண்ணு.. மெல்ல மெல்ல.., வரை பயணித்தாயிற்று. பதிவுகள் ஒவ்வொன்றும் அழகான வண்ண மலர்களின் அணிவகுப்பு. அதற்கான கருத்துரைகள் அட்டகாசம். அது ஒரு கனாக்காலம்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. இழை பிடித்து எங்கேயோ வரை சென்று வந்து விட்டீர்கள்:). ஆம், அதுவொரு கலகலப்பானக் கனாக் காலம்.

      நீக்கு
  8. புகைப்படங்களும் விவரங்களும் அருமை!!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin