புதன், 15 நவம்பர், 2023

அறுபத்து ஆறு வயதில் என் அம்மா - கமலா தாஸ் கவிதை (7) - உதிரிகள் இதழில்..


  அறுபத்து ஆறு வயதில் என் அம்மா

சென்ற வெள்ளிக்கிழமை காலையில்,
என் பெற்றோர் இல்லத்திலிருந்து
கொச்சினுக்கு வண்டியில் செல்கிறேன்.
எனதருகே அமர்ந்திருக்கும்,
அம்மாவை நான் பார்க்கிறேன்,
அரைத் தூக்கத்தில், வாய் திறந்து, 
அவளது முகம் சாம்பல் நிறத்தில் உயிரற்றதாக, 
வலியுடன் உணருகிறேன் 
எவ்வளவு வயதானவளாகத் தெரிகிறாளோ
அவ்வளவு வயதாகி விட்டது அவளுக்கு, ஆயின் விரைவில்
அந்த நினைப்பைத் தள்ளி வைக்கிறேன்,
வெளியில் பார்க்கிறேன் 
விரைந்தோடும் இளம் மரங்களை, 
தங்கள் இல்லங்களிலிருந்து 
சிதறியோடும் மகிழ்ச்சியான சிறார்களை, 
ஆனால் விமான நிலயத்தில் பாதுகாப்புச் சோதனை முடிந்ததும், 
சில கசங்கள் தள்ளி நின்று, மீண்டும் அவளைப் பார்க்கிறேன், 
சோகை படிந்து, குளிர் காலத்தின் இறுதி நிலவைப் போல் வெளிறி, 
எனக்குப் பழக்கமான பழைய வலியை உணருகிறேன், 
என் சிறுபிராயத்து அச்சம்,
ஆனால் நான் சொன்னது எல்லாம், 
'சீக்கிரமே நாம் பார்க்கலாம், அம்மா',
நான் செய்தது எல்லாம், 
புன்னகை மற்றும் புன்னகை மற்றும்
புன்னகை...
*

மூலம்: 'My Mother at Sixty-Six' by Kamala Das

கமலா தாஸ் (1934-2009) :

கமலா தாஸ் எனப் பரவலாக அறியப்பட்ட கமலா சுரயா குறிப்பிடத் தக்க இந்திய எழுத்தாளர். ஆரம்பக் காலத்தில் மாதவிக்குட்டி என்ற பெயரில் எழுதத் தொடங்கியவர். கேரளாவின் மலபார் மாவட்டத்திலுள்ள புன்னையூர்குளத்தில் பிறந்தவர். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். இவரது தந்தை கொல்கத்தாவில் பணியாற்றியதால் இளமைப்பருவத்தில் கொல்கத்தாவிலும், புன்னையூர்குளத்திலிருந்த பூர்வீக வீட்டிலுமாக வளர்ந்திருக்கிறார். இவரது தாயார் புகழ்பெற்ற மலையாளக் கவிஞர். தந்தை ‘மாத்ருபூமி’ மலையாள தினசரியின் நிர்வாக ஆசிரியராகப் பணிபுரிந்தவர். 15 வயதில் மாதவ தாஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். 1999_ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவி தன் பெயரை கமலா சுராயா என மாற்றிக் கொண்டார். கேரள சாகித்ய அகடமியின் துணை தலைவர் பொறுப்பில் இருந்தார். அரசியலுல் பெரிய நாட்டம் இல்லாவிடினும் பெண்கள் நலனுக்காகவும் மதசார்பற்ற கொள்கைக்காகவும் லோக் சேவா கட்சியைத் தொடங்கினார்.


பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதி வந்த கமலா தாஸின் இலக்கியப் பயணம் 1960_ஆம் ஆண்டு வெளியான "கொல்கத்தாவில் கோடைக்காலம் - Summer in Calcutta" கவிதைத் தொகுப்பிலிருந்து தொடங்கியது. இவரது படைப்புகள் ஒப்புதல் வாக்குமூலப் பாணியில், சொந்த அனுபவங்கள் மற்றும் உணர்ச்சிகளை அச்சமின்றி ஆராய்ந்து வெளிப்படுத்துபவையாக இருந்தன. காதல், விருப்பம், ஏக்கம், திருமணம், ஆகியவற்றைப் பற்றியும், ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ள நேர்ந்த போராட்டங்களைப் பற்றியும் இவர் எழுதியவை சமூக நியமங்களையும் எதிர்பார்ப்புகளையும் கேள்வி கேட்பவையாகவும் சவால் விடுப்பவையாகவும் அமைந்தன. அதிக அளவில் கொண்டாடப்பட்ட இவரது முக்கியப் படைப்பு "என் கதை" (My Story) எனும் சுய சரிதை நாவல். இவரது எழுத்தில் இருந்த நேர்மையும், ஆர்வம், ஆத்திரம் எனக் கலவையான உணர்வுகளைத் தூண்டும் தன்மையும் இவருக்குப் பாராட்டுகளை மட்டுமின்றிக் கடும் விமர்சனங்களையும் பெற்றுத் தந்தன. 

தனது பணிக்காலம் முழுவதிலும் தொடர்ச்சியாகப் பல விருதுகளைப் பெற்றவர். சாகித்ய அகடமி விருது, ஆசியக் கவிதைப் பரிசு, ஆசிய நாடுகளுக்கான ஆங்கில எழுத்துக்குரிய கென்ட் (Kent) விருது ஆகியன குறிப்பிடத்தக்கவை.  
*

கவிதை மற்றும் ஆசிரியர் குறிப்பின் தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
*
[படங்கள் இணையத்திலிருந்து.. நன்றியுடன்..]

'உதிரிகள்' முதுவேனிற்கால இதழில் வெளியாகியுள்ள 3 தமிழாக்கக் கவிதைகளில் 
மூன்றாவது.., 
நன்றி உதிரிகள்!
(கவிதை மற்றும் ஆசிரியர் குறிப்பின் தமிழாக்கம்.)
**

10 கருத்துகள்:

  1. சில சிந்தனைகளை தூண்டிய கவிதை.  

    கவிஞர் பற்றிய குறிப்புகள் சற்றே பெரிய Font ல் கொடுக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம்.

      Font Size... ஆசிரியர் குறிப்பு ஏற்கனவே பகிர்ந்த ஒன்று என்பதால் சிறிய அளவில் பதிந்தேன். தற்போது பெரிதாக்கி விட்டேன்.

      நீக்கு
  2. அம்மா கவிதை அருமை. விரைந்தோடும் இளமரங்கள். ரயிலில் பயணிக்கும் போது வயதான மரங்களும் இளமரங்களாக காட்சி அளிப்பது மகிழ்ச்சியான விஷயம், எல்லா மரங்களும் விரைந்தோடும் தானே!
    ரயில் பயணம் செய்யும் போது ஓடி வரும் குழந்தைகள் கை அசைக்கும் மகிழ்ச்சியாக நம்மைப்பார்த்து. அனைத்தையும் ரசித்து கவிதை எழுதி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  3. கவிதை அம்மாவைக் குறித்து என்பதாலோ என்னவோ உணர்வுகளை எழுப்புகிறது. சாம்பல் நிறம்....வலியுடன் பார்க்கிறேன் போன்ற வரிகள். மீண்டும் விமான நிலையத்தில் கவனித்ததில் வரும் வரிகள்....எல்லாமே ஏதோ ஒரு சொல்லவொணா உணர்வைத் தூண்டுகிறது.

    கமலாதாஸ் குறித்த ஒரு பதிவை நண்பர் துளசியும் எங்கள் தளத்தில் எழுதிய நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். கருத்துகளுக்கு நன்றி கீதா.

      லிங்க் கிடைத்தால் பகிர்ந்திடுங்கள். பார்க்கிறேன்.

      நீக்கு
  4. அன்பானவர்களை விட்டுப் பிரிதலின் வலி, அதிலும் வயது முதிர்வில் அவர்களைத் தனியாக விட்டு விட்டுப் பிரியும் போது, மனதில் எழும் பலவித உணர்வுகளை; ஒரு நிகழ்வு - சில வார்த்தைகளில் வெளிப்படுத்துவது கவிதையில் மட்டுமே சாத்தியம். கையறுநிலை, மீண்டும் சந்திப்போம் எனும் எதிர்பார்ப்பு, பால்ய கால குதுகலம், சிறு பிராயத்து அச்சம்..., ஒரு நிகழ்வில் தான் எத்தனை விதமான உணர்வுகள் வெளிப்படுகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அம்மா கவிதை நெஞ்சில் பதியும் கவிதை.அருமை.

    கமலாதாஸ் கவிதைகள், "என்கதை' படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin