செவ்வாய், 30 மே, 2023

யாக்கை - திண்ணை இணைய இதழில்..

யாக்கை

வெறித்து நிற்கிறாள்
போதை இறங்காது வீழ்ந்து கிடப்பவனை.
எக்கவலையுமற்றவன் தருந்துயரும்
தனியொருவளாய்த் தாங்கும் 
அன்றாடத்தின் பாரமும் 
அழுத்துகிறது 
உள்ளத்தையும் 
உடலையும்.
ஒவ்வொரு உறுப்பும்
ஓய்வு கேட்டுக் கெஞ்ச
எண்ணிப் பார்க்கிறாள்
கடிகாரத்தின் முகத்திற்கும், அதன் 
நொடி நிமிட மணிக் கைகளுக்கும்,
நாற்காலியின் முதுகிற்கும்
நாளெல்லாம் நிற்கும்
மேசையின் கால்களுக்கும்
ஒருபோதும் சோர்வு ஏற்படாததை.
வீசும் காற்றில் ஓசை எழுப்பும்
மணிகளின் நாக்குகளுக்கு
இருக்கிறது சுதந்திரம் 
நினைப்பதை அரற்றிட.
விம்மிச் சிவக்காத மூக்குடன் கூஜாவும்
நெரிக்கப்படாத கழுத்துடன் போத்தலும்
நிற்கின்றன ஒய்யாரமாக எப்போதும்.
புயலின் கண் எரிவதில்லை
குகையின் வாய் துடிப்பதில்லை.
சீராக வழி தென்படாத
மகத்தான வாழ்வில்
உயிரற்றவைக்கு வாய்த்தது
உயிரற்றக் கூடாக உலவும் 
தனக்கு வாய்க்காததை
சிந்தனையை ஓட விட்டு 
அலுப்புடன் ஒப்பிட்டு
நோகும் தேகம் முறித்து
அடைகிறாள்  இருளில்
அற்ப ஆறுதலை.
*

[படம்: நன்றியுடன், இணையத்திலிருந்து..]
*


நன்றி திண்ணை!

**






8 கருத்துகள்:

  1. விட்டு விலகினால் 
    நஷ்டம் யாருக்கென்று கூட 
    அறிய முடியாத போதையில் 
    மடமனிதன்!  
    எப்படியோ 
    அமைந்து விடுகிறது 
    அவர்களுக்கு 
    இப்படி ஒரு துணை!

    பதிலளிநீக்கு
  2. கவிதை பெண்ணின் மன புலம்பலை சொல்கிறது,
    உயிரற்றவைக்கு வாய்த்தது உயிரற்ற கூடாக உலவும் தனக்கு வாய்க்கவில்லை. இப்படி எத்தனை எத்தனை பெண்கள் குடிக்கு அடிமையான ஆண்களிடம் மாட்டிக் கொண்டவர்கள் அவதி படுகிறார்களோ!

    பதிலளிநீக்கு
  3. உயிரற்றவைக்கு வாய்த்தவை உயிரற்ற கூடாக உலவும் தனக்கு...... அர்த்தமுள்ள, பல பெண்களின் வாழ்க்கை நிலை சொல்லும் வார்த்தைகள்....... கவிதை மிகவும் நன்று. எத்தனை எத்தனை பெண்கள் இப்படி அவதிப்படுகிறார்கள் என்று நினைக்கும்போதே மனதில் வேதனை.....

    பதிலளிநீக்கு
  4. பிரிந்துவிட முடியாத ஆனால் புரிந்து கொள்ள இயலாதா மனதைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டியதைக் குறித்த சலிப்பும், அலுப்பும் பெரும் ஆதங்கமாக வார்த்தைகளில் வெளிப்படுகிறது. (யாக்கை: பொருத்தமான தலைப்பு)

    ஒன்பது உயிரற்ற ஜடப் பொருட்கள், அவை ஒவ்வொன்றிற்கும் ஒப்பிட்ட அவயங்கள், அதன் உணர்வு வெளிப்பாடுகள் அருமையாகப் பொருந்துகிறது. (விம்மிச் சிவக்காத மூக்கு!!/கூஜா, சுதந்திரமாக அரற்றும் நாக்கு/மணி!!- நல்ல ஒப்புமை)

    உயிரற்றவை கூட சுதந்திரமாக உணர்வுகளை வெளிப்படுத்த, உணர்வுகளைப் புரிந்து, மதித்து எதிர்வினையாற்ற வேண்டிய உள்ளங்கள், உறவுகள் (நிதர்சனத்தில் மது போதையின்றியே கூட) ஜடமாக இயங்குவது கூடுதல் பெரும் துயரம்.

    பதிலளிநீக்கு
  5. வெவ்வேறு தலைப்புகள் வைத்துப் பார்த்து இறுதியில் பொருத்தமானதாகத் தோன்றி வைத்தத் தலைப்பு. நன்றி, விரிவான தங்கள் கருத்துகளுக்கும்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin