புதன், 3 மே, 2023

மாமழை - கீற்று மின்னிதழில்..


மாமழை

‘ஓ’வென்ற இரைச்சல் 
கோடைச்சாரலின் சடசடப்பை மீறி.
குழந்தைகளோடு 
 பெரியவர் சிலரும்
ஆட்டிக் கொண்டிருந்தார்கள்
கால்களையும் கைகளையும்.
மழையை வரவேற்கிறார்களாம்
மகிழ்ச்சி நடனமாம்
கோமாளிகள்!

இழுத்து யன்னலை மூடிட
வெளியே நீட்டிய கைகளில் 
விழுந்தன பொட்டுப் பொட்டாக
தூறலின் துளிகள்.
மாறுகிறது 
தூரத்து இடியோசை
மத்தளத்தின் ஒலியாக.
வலுக்க ஆரம்பித்த 
வருணனின் பொழியல்
பாய்கிறது 
மனதுள் இசையாக. 
வெட்டிய மின்னலின் கீற்று
வாசிக்கிறது 
வயலினை வானத்தில். 

ஆட்டத் தொடங்கியிருந்தாள்
அவளையும் அறியாமல்
கால்களையும் கைகளையும்.
*
படம்: நன்றியுடன், இணையத்திலிருந்து..
**



***

6 கருத்துகள்:

  1. மாமழை கவிதை மிக அருமை.
    மழையின் ஓசை, மின்னலின் நடனம், இடியின் மத்தளம் ஆட சொல்லாதோ அவளை! மழையை ரசிக்க பிடிக்கும் எனக்கு, சிறு வயதில் மழையில் நனைத்து ஆடி இருக்கிறோம், . இப்போது உங்கள் கவிதையும் பிடித்து விட்டது.

    சிறு வயது நினைவுகள் வந்து போயின. திண்ணையில் அமர்ந்து காலகளிய நீட்டியது, ஜன்னல் வழியாக கைகளை நீட்டி மழை துளியை ஏந்தியது , கணவருடன் சேர்ந்து மழையை ரசித்தது எல்லாம் நினைவுகள்.

    இப்போதும் ரசித்து கொண்டு இருக்க பிடிக்கும் மழையை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கும், மழை குறித்த தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. தொற்றிக் கொண்டு பற்றிக் கொள்ளும் மகிழ்ச்சி. இயற்கையின் அற்புதம். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. மத்தளம்-இடியோசை; மின்னல் கீற்று- வானத்தில் வயலின்:) மழையாகக் கற்பனை ஊற்று. இயற்கையின் வலிமையே நம்மைக் குழந்தையாக,கோமாளிகளாக மாற்றி மகிழ்வது தான். மழை அழகு.

    பதிலளிநீக்கு
  4. ஆம், மழை என்றும் அழகே. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin