சனி, 22 ஏப்ரல், 2023

உதிரிகள் காலண்டிதழ்: வீடுபேறு - சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை (23)

வீடுபேறு


வேறு வாய்ப்பு இல்லை,
முற்றிலுமாகக் குறிக்கோளிலிருந்து 
விடுபட்ட நிலையில்,
அவனொரு இளைஞன்
எங்கோ செல்வதற்கு
வட கரோலினா வழியாக
பேருந்தில் பயணிக்கிறான்
பனி பொழியத் தொடங்குகிறது
குன்றின் மேலிருக்கும்
சிறு விடுதி முன்
பேருந்து நிறுத்தப்படுகிறது
பயணிகள்
உள் நுழைகிறார்கள்.
மேசையில் அமருகிறான்
மற்றவர்களோடு,
உத்தரவிடுகிறான்
உணவு வருகிறது.
நன்றாக இருந்தது 
சாப்பாடு 
குறிப்பாக 
காபி.
அந்தப் பணிப்பெண்
அவன் அறிந்த 
பிற பெண்களை போல் 
அல்ல.
அவள் பாதிக்கப்படாதவள்,
அவளிடத்தில் இருந்து வந்தது
இயல்பான நகைச்சுவையாக 
இருந்தது.
வறுத்துக் கொண்டிருந்த 
சமையற்காரப் பெண்மணி
கிறுக்குத்தனமான விஷயங்களை 
சொல்லிக் கொண்டிருந்தாள்.
பின்புறம் 
பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தவள்
சிரித்தாள், தூய்மையான 
இரம்மியமான 
சிரிப்பு.
இளைஞன் 
சன்னல் வழியே 
பனியைக் கவனிக்கிறான்.
அந்த விடுதியில் 
என்றென்றும் தங்க 
விரும்புகிறான்.
நீந்துகிறது அவனுள் 
விசித்திரமான உணர்வு
அங்கிருக்கும் 
அனைத்தும் அழகாக இருப்பதாக,
அவை எப்போதுமே  
அழகாக இருக்கும்
அங்கே.
அவ்வேளையில்
புறப்படும் நேரம் வந்துவிட்டதாக
பயணிகளிடம் கூறுகிறார் 
பேருந்து ஓட்டுனர்.
இளைஞன் 
எண்ணுகிறான், பேசாது நான் 
இங்கேயே உட்கார்ந்து விடலாம்
இங்கேயே தங்கிவிடலாம் என்று.
ஆனால் பிறகு 
அவன் எழுந்து 
மற்றவர்களை பின்தொடர்ந்து 
பேருந்தில் ஏறிக் கொள்கிறான்.
தன் இருக்கையைக் கண்டடைந்து
பேருந்து சன்னல் வழியே 
விடுதியை நோக்குகிறான்.
பேருந்து அங்கிருந்து 
நகருகிறது, வளைவில் இறங்குகிறது,
குன்றிலிருந்து 
கீழ்ப்புறமாக.
இளைஞன் பார்க்கிறான் 
நேர் முன்புறமாக.
மற்ற பயணிகள் 
மற்ற பல விஷயங்களை 
பேசுவதைக் கேட்கிறான்,
அவர்களில் சிலர்
வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்,
அல்லது அவர்களில் சிலர் 
தூங்க முயன்று கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் 
கவனிக்கவில்லை
அந்த மாயவித்தையை.
இளைஞன் 
அவனது தலையை 
ஒருபுறமாகச் சாய்த்துக் கொள்கிறான்,
கண்களை 
மூடிக் கொண்டு,
தூங்குவதாகப் பாவனை செய்கிறான்.
என்ஜினின் 
சப்தத்தையும்,
பனியில் 
சக்கரங்கள் எழுப்பும் 
சப்தத்தையும் 
பேசாது கவனிப்பதை தவிர்த்து
வேறெதுவும் 
செய்வதற்கில்லை.
*

மூலம்: “Nirvana"
By Charles Bukowski
*
படம்: நன்றியுடன் இணையத்திலிருந்து..
*

எழுத்தாளர்கள் ராஜேஷ் வைரபாண்டியன் (2018 வரையிலும் நிலாரசிகன் என்ற பெயரில் எழுதி வந்தவர்) மற்றும் ராஜலிங்கம் ரத்தினம் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள “உதிரிகள்” இலக்கியச் சிற்றிதழின் முதல் இதழில் வெளியாகியுள்ள இரு தமிழாக்கக் கவிதைகளுள் ஒன்று.

நன்றி உதிரிகள்!


**

8 கருத்துகள்:

  1. சில எதிர்பார்ப்புகள் ஏமாற்றமேற்படுத்தலாம்.  சில நிதர்சனங்கள் சலிப்பேற்படுத்தலாம்.  அந்த நிமிட அற்புத உணர்வோடு நகர்ந்து விட்டால் நினைவுகளாவது சாசுவதமாயிருக்கும் இனிமையாய்....

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான். அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  3. வாசித்ததும், அந்த நிமிடத்தில் அனுபவித்துவிட்டுக் கடந்து செல்வதே நல்லது அதைத்தானே தத்துவியலாளர்களும் சொல்கிறார்கள் இந்த நொடியில் வாழ் என்று.

    வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வேறெதுவும் செய்ய வாய்ப்புகளற்ற ஓய்வு நிலையில்,பார்க்கும் இடங்கள், சந்திக்கும் மனிதர்கள், அவர் தம் பணிகள், அனைத்தும் அழகானதாகவே தோன்றும். குறிப்பாக மலை வாசஸ்தலங்கள். அங்கேயே தங்கிடத் தோன்றும். ஆனாலும், அந்த அற்புத தருணங்களைக் கவனித்து மவுனமாக நினைவுகளில் களி கூர்ந்து கடந்து செல்வதைத் தவிர வேறு சிறந்ததொரு வழியில்லை எனப் புரிந்து கொண்டேன். ஒவ்வொரு நீண்ட விடுமுறையிலும் இதை அனுபவித்தது உண்டு:). அது ஓர் தற்காலிக வீடுபேறு தான்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin