Thursday, May 21, 2020

க. அம்சப்ரியாவின் “வகுப்பறையே ஒரு வரம்தான்.. ” - மதிப்புரை.. ‘புத்தகம் பேசுது’ இதழில்..


வழிநடத்தும் ஒளிவிளக்கு..

சிரியர் மாணவர்களுக்கு அர்ப்பணிக்கும் நேரம், கொடுக்கும் சுதந்திரம், மாணவர்கள் ஆசிரியர் மேல் வைக்கும் நம்பிக்கை, அன்பினால் உருவாகும் மதிப்பு இவை ஒன்று கூடும் இடத்தில் உன்னதமான ஆசிரியர்களையும் சிறந்த மாணவர்களையும் இந்தச் சமுதாயம் கண்டடைகிறது. மாணவர்களின் வாழ்கையை மாற்றி அமைக்கும் சக்தி, குறிப்பாகத் திசை மாறிச் செல்லும் சிறுவர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்பங்களைக் கொண்டு வந்து, தாமாக அவர்கள் ஒருபோதும் கண்டு பிடித்திடச் சாத்தியப்படாத சரியான பாதைக்குக் கொண்டு செல்லும் சக்தி ஆசிரியருக்கு உண்டு. மாணவர்கள் பாடங்களைக் கற்றுத் தேர்வதில் மட்டுமின்றி, சமுதாயத்தை நேர் கொள்ளச் சிறந்த பண்புகளையும் கற்றுத் தேர்ந்தால் மட்டுமே ஆசிரியரின் பணி முழுமையடைகிறது. அக்கறையுடன் இதை மனதில் நிறுத்தி செயல்படும், 19 ஆண்டுகளாகத் தமிழ் துறையில் பணியாற்றும் ஒரு ஆசிரியரே, இந்நூலின் ஆசிரியர் என்பது கவனத்திற்குரிய சிறப்பம்சம்.

மாணவர்கள் தமது திறமைகளில் நம்பிக்கை வைத்து, தமக்கும் சமுதாயத்துக்கும் அந்தத் திறமை பயன்படும் வகையில் தம்மை மாற்றிக் கொள்ளவும் உயர்த்திக் கொள்ளவும் வழி காட்டுகிறார் ஆசிரியர் க.அம்சப்ரியா. எதைச் சிந்திக்க வேண்டும் என்பதை விட எப்படிச் சிந்திக்க வேண்டும் என்பதை விளக்குகிறார். “எங்கெல்லாம் கற்றுக் கொள்வதற்கான சூழல் அமைகிறதோ,
அதுவெல்லாம் நமக்கு வகுப்பறைதான்..” என அன்றாட வாழ்வே நமக்கு வகுப்பறையாக இருப்பதை உணர்த்தும் எளிய தலைப்புகளைக் கொண்ட 18 கட்டுரைகளும் “துடிப்பு” சிறுவர் இதழில் மாதம் ஒன்றாக வெளியானவை.

வாழ்க்கையின் உயிர்ப்பான பயணங்கள், மாறும் காலக் கட்டங்களில் கிடைக்கும் நண்பர்கள் மட்டுமே வாழ்க்கையென நகர்ந்து கொண்டிருக்கும் உலகில் உறவுகளையும் கொண்டாட வேண்டியதன் அவசியம், பள்ளிப் பாடங்களைப் பாரமாக நினையாமல் அப்புத்தகங்களோடு பயணிப்பதால் எப்படி அதன் எழுத்துக்கள் நேசத்துக்குரியவையாக மாறும், கனிந்த மனதோடு, உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல், சுயத்தைக் காத்தல், வெட்டிப் பேச்சுகளுக்கும்  அறிவைப் பகிர்ந்திட வளர்த்திட உதவும் உரையாடல்களுக்குமான வித்தியாசம் எனப் பல்வேறு விடயங்களை நடைமுறை வாழ்வின் பல அனுபவங்களின் மூலமாகவே எடுத்துக் காட்டியிருக்கிறார்.

யாருடைய மனத்தில் நீங்கள்..?; யாருடைய வழிகாட்டியாக நீங்கள்..? ; அறிதல் தேனாய் இனிக்கும்; மானமே அழகு; நீங்களே நாட்டின் சொத்து, புதிய சிந்தனையால் மலர்வோம்” போன்ற கட்டுரைகளின் தலைப்புகளே வாசிக்கும் இளைய தலைமுறையினருக்குத் தேடலுக்கான அழைப்பை விடுக்கின்றன. மாணவச் செல்வங்களுக்கான கட்டுரைகளாக மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கல்வியைப் பற்றிய சிந்தனைகளைத் தூண்டியிருக்கிறார்:

“*ஒன்றை அறிந்து வைத்திருப்பதற்கும், அறிந்த கருத்தை வாழ்க்கைக்குக் கொண்டு செல்வதற்கும் இடையில்தான் கல்வியின் சூட்சமம் அடங்கியிருக்கிறது.”
*தினமும் பாடங்கள், தேர்வு, குறைந்த மதிப்பெண்ணுக்குக் கொஞ்சம் அவமானம், நிறைய மதிப்பெண் எனில் கொஞ்சம் பாராட்டு, இதுவா பாடத் திட்டத்தின் இலக்கு?
*எதையும் மற்றவர்களோடு போட்டியிட்டு வெற்றி பெறுகிற திறமைதான் முதன்மையானது என்பது பொருத்தமற்றது. அவரவர் திறமையை அடையாளம் காட்ட உலகம் பரந்து விரிந்துள்ளது.

ல்வி என்பது வாழ்க்கைக்காக நம்மைத் தயார் படுத்திக் கொள்வதல்ல. அதுவே வாழ்க்கையும்.” என்று சொன்னவர் தத்துவ மேதையான ஜான் ட்யூவி. வகுப்பறைகளை சமுதாய மாற்றத்துக்கான இடமாக அன்றி சமுதாய மாற்றத்துக்கு ஒளியேற்றும் இடமாகப் பார்த்தவர். இந்நூலில் ஆசிரியர் க.அம்சப்ரியாவும் வகுப்பறை என்பது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான பாலமாக மாறினால் எப்படி அவை வரமாக அமைந்து தனிப்பட்ட வாழ்வுக்கும் சமுதாய மாற்றங்களுக்கும் ஒளியேற்றும் என்பதை மனதில் எளிதாகப் பதியுமாறு அழகுறச் சொல்லியுள்ளார். மாணவர்கள் ஒவ்வொருவரும் வாசித்து வகுப்பறைகளை வரமாக்கிக் கொள்வார்களாக!
**

வகுப்பறையே ஒரு வரம்தான்... - க. அம்சப்ரியா
பக்கங்கள்: 96; விலை:ரூ 80/-
வெளியீடு: வெற்றிமொழி வெளியீட்டகம்
மின்னஞ்சல்: vetrimozhibooks@gmail.com
அலைபேசி எண்கள்:  9715168794, 8526665056
***

இக்கட்டுரை, ஏப்ரல் 2020 புதிய புத்தகம் பேசுது இதழில்.. வெளியாகியுள்ளது:*
நூலாசிரியர் கவிஞர் க. அம்சபிரியாவுக்கு இன்று பிறந்தநாள்.
வாழ்த்துவோம் கவிஞரை இந்நாளில் 
மேலும் பல நன்னூல்களை வழங்கிட!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
**
தொடர்புடைய முந்தைய பதிவு:
க.அம்சப்ரியாவின் ‘கல்வி 100 சிந்தனைகள்' - மதிப்புரை.. ‘கல்கி’ பொங்கல் சிறப்பிதழில்.. ---  https://tamilamudam.blogspot.com/2020/01/100.html

***

14 comments:

 1. நல்லதொரு அறிமுகம்.

  ReplyDelete
 2. // எங்கெல்லாம் கற்றுக் கொள்வதற்கான சூழல் அமைகிறதோ,
  அதுவெல்லாம் நமக்கு வகுப்பறைதான்... //

  சிறப்பு...

  ReplyDelete
  Replies
  1. ஆம், சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. நன்றி தனபாலன்.

   Delete
 3. நல்லதொரு அறிமுகம். நன்றி.

  ReplyDelete
 4. //"ஒன்றை அறிந்து வைத்திருப்பதற்கும், அறிந்த கருத்தை வாழ்க்கைக்குக் கொண்டு செல்வதற்கும் இடையில்தான் கல்வியின் சூட்சமம் அடங்கியிருக்கிறது”//அருமை. ஆரம்ப வரிகள் ஆசிரியர் மாணவர் உறவை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். நல்லதொரு அறிமுகம். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி, ஆரம்ப வரிகளைக் குறிப்பிட்டமைக்கும்.

   Delete
 5. வகுப்பறை ஆசிரியர் மாணவர்களுக்கு பாலமாக அமையட்டும்.

  அருமையான விமர்சனம்.
  நூல் ஆசிரியருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. நல்ல அறிமுகம்.
  'எங்கெல்லாம் கற்றுக் கொள்வதற்கான சூழல் அமைகிறதோ.....' நிச்சயமாக .

  ReplyDelete
 7. நல்ல அறிமுகம் :)

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin