Wednesday, August 7, 2019

கருப்பட்டி மிட்டாய்

முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயில் 
ஆனித் திருவிழா (பாகம் 2) 

[பாகம் 1 இங்கே.]

திரண்டு வரும் ஜனங்கள் மேல் நம்பிக்கை வைத்து சுடச் சுட அங்கேயே தயாராகிக் கொண்டிருந்தன பல கடைகளில் கருப்பட்டி மிட்டாய்.

#1

பலரும் ஏணி மிட்டாய் என்றே சொல்வதுண்டு. இவை சீனி மற்றும் வெல்லப்பாகிலும் கூட செய்யப் படுகின்றன. 

#2

ஆனால் நாங்கள் பார்த்த வரையில் அந்த சமயத்தில் அங்கேயே தயாராகிக் கொண்டிருந்த கடைகளில் கருப்பட்டிப் பாகிலேயே போட்டு எடுத்துக் கொண்டிருந்தார்கள். 

#3
தேகம் தளர்ந்தாலும் 
வேகம் குறையாமல்..

ஏணி மிட்டாய் போக இதற்குச் சீனி மிட்டாய், சீரணி மிட்டாய், ரயில் மிட்டாய் போன்ற பெயர்களும் உள்ளன. கோவில்பட்டி மிட்டாய்க் கடைகளில் பிரசித்தமானது.


அரிசியையும் உளுந்தையும் சேர்த்து அரைத்த மாவை இலாவகமாகப் பிழிந்து எண்ணெயில் பொரித்தெடுக்கையில் அடுப்பு நின்று சீராக எரிந்திட காய்ந்த முந்திரித் தோலைப் பயன்படுத்துகிறார்கள். 

#4


ஒவ்வொரு அடுப்புக்கு அருகிலும் முந்திரித் தோல்களைப் பார்க்கலாம்.

#5
முந்திரித் தோல்

செய்யும் தொழிலே தெய்வமென அடுப்பேற்றும் முன் கடைகளில் பூஜை போட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. பொதுவாக கடைகளுக்குப் பின்புறம் அல்லது பக்கவாட்டில் அடுப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தன. மற்ற இனிப்பு வகைகள் விற்பனையில் இருந்தாலும் கருப்பட்டி மிட்டாய் மட்டுமே அங்கே தயாராகிக் கொண்டிருந்தன.

ணையத்தில் கிடைத்த ஒரு செய்முறைக் குறிப்பு சுருக்கமாக..
தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - 1 கப்; உளுந்து - கால் கப்; கருப்பட்டி - 2 கப் மற்றும் பொரித்தெடுக்க எண்ணெய்.

அரிசி, உளுந்தைக் கழுவி நான்கு மணி நேரம் போல ஊறவைத்து நீரை வடித்து விட்டு மையாகவும் கெட்டியாகவும் அரைத்து ஒரு மணிநேரம் போல ஊறவைக்க வேண்டும்.

பின் கருப்பட்டியைத் தட்டி நீர் சேர்த்து வாணலியில் ஏற்றி நன்கு கரைந்ததும் இறக்கி ஓரளவு குளிர்ந்தபின் வடிகட்டி மீண்டும் அடுப்பில் ஏற்றி கெட்டியாகும் வரை சுமார் 6-8 நிமிடங்களுக்குக் கொதிக்க விட்டு ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி சேர்த்து இறக்கி வைக்க வேண்டும்.

மற்றொரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி ஒரு ப்ளாஸ்டிக் பால் கவரில் சிறு துவாரமிட்டு அல்லது இவர்களைப் போல செம்பின் அடியில் துவாரமிட்டு, அதில் அரைத்த மாவை எடுத்துக் கொண்டு பின் வருமாறு வட்ட வட்டமாகப் பிழிந்து பொரித்தெடுத்து கருப்பட்டிப் பாகில் முன்பக்கமா இரு நிமிடங்கள், திருப்பிப் போட்டு இரு நிமிடங்கள் ஊறவைத்து எடுத்து அடுக்க வேண்டியதுதான்!

#6
பிசிறின்றி 
அழகாக.. 

#7
வேகவேகமாக..

#8

 #9

#10

மிட்டாய்க் கடைகளே ஒரு வரிசை முழுக்க ஏழெட்டு இருந்தன.

#11

சற்றே பெரிய கடைகள் பந்தல் தோரணம் கட்டப்பட்டு தோரணையாகக் காட்சி அளித்தன.

#12

கருப்பட்டி மிட்டாயோடு கார வகைகளும் பிற இனிப்பு வகைகளுமாக விற்றுக் கொண்டிருந்தனர்:

#13

#14

 #15

#16


#17

இனிப்புகளைப் போலவே இன்முகத்தோடு வாடிக்கையாளர்களை வரவேற்று அவர்களது தேவைகளைக் கவனிக்கிறார்கள் இந்த எளிய வியாபாரிகள்.
**


22 comments:

 1. வித்தியாசமான மிட்டாய். சுவைக்க ஆசை.... தில்லியில் எங்கே சுவைக்க?

  ReplyDelete
  Replies
  1. கோவில்பட்டி பக்கம் போனால் முயன்றிடுங்கள்:).

   நன்றி வெங்கட்.

   Delete
 2. ​சுவையான பதிவு.

  நான் சாத்தூரில் வேலை செய்த காலங்களில் பஸ்ஸ்டேன்ட் ஒட்டிய கடைகளில் பார்த்திருக்கிறேன். அவர்கள் சேவு மிட்டாய் ன்று சொல்வார்கள் என்று ஞாபகம். வரிசை வரிசையாய் அடுக்கி வைத்திருப்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. சேவு மிட்டாய் வேறு. காராச் சேவு போல, காரம் இல்லாததை ஜீனி பாகில் (முறுகிய) போட்டு எடுப்பார்கள். இங்க கூட சிறு கடைகளில் பார்த்திருக்கலாம். இனிப்புச் சேவு என்று சொல்வார்கள்.

   Delete
  2. நன்றி ஸ்ரீராம்.

   ஆம், சேவு மிட்டாய் வேறு.

   Delete
  3. @நெல்லைத்தமிழன்,

   வெல்லப்பாகில் போட்டு எடுக்கும் சேவினை மனோலம் என்பார்கள்.

   Delete
 3. செய்குறிப்புடன் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது. கெட்டியாகப் பிசைந்து கொண்டாலும் பால் கவரிலாவது அழுத்தம் கொடுத்து வெளியேற்றலாம்... சொம்பில் என்றால் மாவு சற்றே நீர்க்க இருக்க வேண்டுமோ என்னவோ.. நாம் கருப்பட்டி போடாவிட்டாலும் சர்க்கரைப்பாகில் போடலாம்!​

  ReplyDelete
  Replies
  1. போட்டு, ஒரு திங்கள் பதிவு கொடுக்கலாமே

   Delete
  2. அழுத்தம் கொடுக்காமல் செம்பிலிருந்து வழிவது ஆச்சரியம்தான். நீர்க்க இருந்தால்தான் சாத்தியம்.

   Delete
  3. @நெல்லைத்தமிழன்

   நல்ல யோசனை :)). ஸ்ரீராம், கவனிக்கவும்.

   Delete
 4. கொஞ்ச புளிப்பு சுவையோடு இருக்கும் இந்த மிட்டாசி.

  அதற்கு மாவை புளிக்க வைப்பார்களோ!
  செய்முறை குறிப்பு அருமை.

  கோவில்பட்டி போனபோது எல்லாம் வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன். சீனீ மிட்டாசி, கருப்பட்டி மிட்டாசி எல்லாம் சுவைத்து இருக்கிறேன்.
  திருவிழா காலங்களில் கடைகள் நிறைய இருக்கும்.ஜிலேபி போல்தான் அது ஜீராவுடன் மெதுவாய் இருக்கும், இது கொஞ்சம் முறுகலாக இருக்கும்.

  படங்கள் எல்லாம் அழகு.

  ReplyDelete
  Replies
  1. ஆம். சுவை அருமையாக இருந்தது. புளித்ததாக நினைவில்லை. அடுத்தமுறை கவனிக்க வேண்டும். கோவில்பட்டி கடைகளில் இதேபோல அடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

   நன்றி கோமதிம்மா.

   Delete
 5. படங்கள் அழகு
  கருப்பட்டி மிட்டாய் சாப்பிடத் தூண்டுகிறது

  ReplyDelete
 6. சிறு வயதில் ஊரிலிருந்து யார் வந்தாலும் முதலில் கண்கள் தேடுவது பனையோலை முட்டாசுப் பெட்டி தான்.:).

  ReplyDelete
 7. இந்த இனிப்பும் காரமும் தனி ருசியோடு உள்ளவையாகும். ருசித்துள்ளேன்.

  ReplyDelete
 8. எக்லேர்ஸ் சாக்லேட் இதை பார்த்து தான் தயாரித்து இருப்பார்கள் என்று தோன்றுகிறது.அருமையான பதிவு!

  ReplyDelete
  Replies
  1. இருக்கலாம் லக்ஷ்மணா :). நன்றி.

   Delete
 9. செய்முறையைப் பார்த்துவிட்டேன். விரைவில் செய்துபார்க்கணும்.

  ReplyDelete
  Replies
  1. செய்து பார்த்து எ.பி_யில் பகிர்ந்திடுங்கள்:)!

   வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin