புதன், 4 ஜனவரி, 2017

சல்லடைக் கூடு கட்டும் புள்ளிச் சில்லை - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (7)

2 ஜனவரி 2017 தினமலர் “பட்டம்” இதழின் அட்டையிலும்..
நம்மைச் சுற்றி.. நம்மைப் பற்றி.. பக்கத்திலும்..
படத்துடன், சேகரித்த தகவல்கள்..

சல்லடைக் கூடு அமைக்கும் சில்லைப் பறவை 

ஆங்கிலப் பெயர்:  SPOTTED MUNIA
வேறு பெயர்கள்:
சில்லை, திணைக் குருவி, ராட்டினக்  குருவி

உயிரியல் பெயர்:  Lonchura punctulata 


திணைக்குருவி வகையைச் சார்ந்த, சிட்டுக்குருவி அளவிலான சிறு பறவை. 
Estrildidae எஸ்ட்ரில்டிடா குடும்பத்தைச் சேர்ந்தது. ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. உடலின் மேற்புறம் பழுப்பு நிறத்தில் இருக்கும். மார்பு, வயிற்றுப்புறம் செதில் போன்ற புள்ளிகளுடன் காணப்படும். அலகு பெரிதாக கூம்பு வடிவத்தில் மிக அழகாக இருக்கும். சில்வண்டு போல சத்தம் எழுப்பும். கூட்டமாக வாழும். சிறு புற்கள், பழங்கள், பூச்சிகள் போன்றவற்றை உண்ணும். புற்களின் சிறு கிழங்குகளையும் கொத்தி உண்ணும். இதன் அலகு திணை உண்ண ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது. இதனால் திணைக்குருவி என்றும் குறிப்பிடப் படுகிறது.


தோற்றத்தில் ஒரே மாதியாகத் தெரிந்தாலும் ஆண் பறவைகளுக்கு புள்ளிகள் அழுத்தமான வண்ணத்திலும், தொண்டைப் பாகம் ஆழ்ந்த பழுப்பிலுமாக இருக்கும்.  பனை, தென்னை மரங்களில் காய்ந்து தொங்கும் சல்லடை போன்ற நார்ப் சில்லாட்டை என்பர். மென்மையான இந்த சில்லாட்டைகளை கொண்டு கூடுகளை தயார் செய்வதால் இப்பறவைகளுக்குச் சில்லைகள் என்று பெயர் வந்தது. புற்கள், வாழைநார்கள், இலைகள், பறவைகளின் இறகுகளைக் கொண்டும் தனது கூடுகளைக் கட்டும். கூடுகள் அமைக்கும் பொழுது மிகவும் சுறுசுறுப்பாக ராட்டினம் போல் சுற்றிச் சுற்றி வரும். இருபாலினங்களும் இணைந்தே கூடு கட்டும். 6 முட்டைகள் வரை இடும்.


முட்டைகளை ஆண், பெண் பறவைகள் அடை காக்கும். பதினைந்து நாட்களில் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளியில் வரும். குஞ்சுகள் உலகுக்கு வரும் பருவ காலத்தைப் பொறுத்து ஏழு முதல் 18 மாதங்களில் வளர்ந்து இனப்பெருக்கத்துக்குத் தயாராகி விடுகின்றன. திணைக்குருவிகள் பல வண்ணங்களிலும், வகைகளிலும், உயரங்களிலுமாகக் காணக் கிடைக்கின்றன. தமிழகத்தில் பெரும்பாலும் காணக்கிடைப்பது புள்ளிச்சில்லைகள்.  அழகிய தோற்றத்தின் காரணமாக இவை செல்லப் பறவைகளாகவும் வளர்க்கப்படுகின்றன. 


நீளம்: 12 செ.மீ
எடை: 16 கிராம்
ஆயுள்: 8 ஆண்டுகள்

வகைகள்
* சிகப்புச் சில்லை (Red Munia)
* வெண் தொண்டை சில்லை (White throated Munia)
* கருந்தொண்டை சில்லை (Scaly Breasted Munia)
* மூவண்ண சில்லை (Tricolor Munia)

****

நன்றி பட்டம்!

பறவை பார்ப்போம் (பாகம் 10)
படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில் (பாகம் 9 )

8 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தகவல்கள். தினமலர் பட்டம் - வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. சுவாரஸ்யமான தகவல்... படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin