Thursday, April 21, 2016

ஆனந்தச் சிறுமி - குழந்தைகளால் குழந்தையாக மாறுவது..

ழுத்தாளர் பாவண்ணனின் ‘யானை சவாரி’ சிறுவர் பாடல் தொகுதியிலிருந்து மேலும் ஒரு பாடல், நான் எடுத்த படங்களுடன்.

ஆனந்தச் சிறுமி
கால்முளைத்த குட்டிப் பெண்ணை
தடுக்க முடியவில்லை
காலை முதல் இரவு வரைக்கும்
ஏகப்பட்ட தொல்லை

திண்ணைப் பக்கம் போவதுபோல
அடியெடுத்து வைக்கிறாள்
திசையை மாற்றி அடுத்த கணமே
அடுப்புப் பக்கம் நிற்கிறாள்
ஆடப் போவதாய்ச் சொல்லிவிட்டு
பொம்மைப் பெட்டியைத் திறக்கிறாள்
கண்ணை மூடித் திறப்பதற்குள்
வாசலுக்குப் பறக்கிறாள்

மேசை மீது இருப்பதை எடுத்து
கதவின் ஓரம் இறைக்கிறாள்
கதவு மறைப்பில் உள்ளதை வாரி
மேசை முழுக்க நிறைக்கிறாள்

தண்ணீர்க் குழாயைத் திறந்துவிட்டு
வேலிப் பக்கம் நடக்கிறாள்
உலரவைத்த குழம்புச் சட்டியை
உருட்டிவிட்டு உடைக்கிறாள்

நடக்கும் கால்களின் விந்தையில் திளைத்து
நடந்து நடந்து களிக்கிறாள்
கண்காணிக்கும் எங்களுக்கெல்லாம்
ஆனந்தத்தை அளிக்கிறாள்
**
*

(‘எங்கள் அக்கா’ பாடல் படத்துடன் இங்கே.)

குழந்தைகளால் குழந்தைகளாக மாறுவதைவிட பெரிய பேறு என்ன இருக்க முடியும்?” எனக் கேட்கிறார், இத்தொகுதியிலிருக்கும் பாடல்களுக்கான ஊற்றுக் கண்களைப் பற்றிச் சொல்லுகையில் எழுத்தாளர் பாவண்ணன்:

குழந்தைகள் முகத்தில் தெரியும் பூரிப்பையும் பரவசத்தையும் பார்க்கப்பார்க்க என் மனம் விம்மும். சிரிப்பும் வேகமும் பொங்க அவர்கள் பேசுவதையும் பொருளற்ற சொற்களைக் கூவுவதையும் ஆசையோடு கேட்டு மனதில் பதிய வைத்துக் கொள்வேன். விதவிதமான உணர்வெழுச்சிகள்.


 “நான் அழகா.. பூ அழகா..?

விதவிதமான சொற்கள். விதவிதமான சத்தம்.ஒவ்வொன்றையும் ஒரு இசைத்துணுக்கு என்றே சொல்ல வேண்டும். அதிசயமான அந்த தாளக்கட்டை ஒருபோதும் மறக்க முடியாது. அந்தக் காட்சிகளும் அவர்கள் மொழிந்த சொற்களும்தான் இந்தத் தொகுதியிலுள்ள பாடல்களுக்கான ஊற்றுக் கண்கள்.


“பூக்க ஆரம்பிச்சிட்டு..
நா விதை தூவி, தண்ணி ஊத்தி வளர்த்த,
மொளகாச் செடி!”

குழந்தைகளின் சொற்களை எனக்குள் சொல்லிப் பார்த்துக் கொள்ளும் ஒவ்வொரு கணத்திலும் நானே குழந்தையாக மாறிவிடுவதை உணர்ந்திருக்கிறேன். குழந்தைகளால் குழந்தைகளாக மாறுவதைவிட பெரிய பேறு என்ன இருக்க முடியும்?”
***

சென்னை பொங்கல் புத்தகத் திருவிழாவில், தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் வழங்கிய 2014 – 2015_ஆம் ஆண்டின் ‘சிறந்த சிறுவர் இலக்கிய’ நூலுக்கான விருதைப் பெற்ற இத் தொகுப்பை இணையத்தில் வாங்கிட: http://discoverybookpalace.com/ 

வெளியீடு:
பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை
தேனாம்பேட்டை
சென்னை – 600 018
விலை. ரூ.40
ஓவியர் ராமமூர்த்தியின் கோட்டோவியங்களுடன்,
பக்கங்கள் மற்றும் பாடல்கள்: 64.
***

8 comments:

 1. பாடல்வரிகள் உங்கள் புகைப்படங்களால் உயிர்பெறுகின்றன. நல்வாழ்த்துகள்!
  குழந்தையின் காதில் இருக்கும் கடுக்கன் கண்ணைக் கவருகிறது!

  ReplyDelete
 2. குழந்தைகளின் வெள்ளந்தி மனசு அனைவரையும் இன்னொரு முறை குழந்தையாக்குகிறது.. அருமையான நூல் விமர்சனத்திற்கு நன்றி.

  ReplyDelete

 3. அருமையான எண்ணங்களின் பகிர்வு

  உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!
  http://www.ypvnpubs.com/2016/04/blog-post_18.html

  ReplyDelete
 4. நல்லதொரு பகிர்வு. இளவரசரும் இடம் பெற்றிருக்கும் புகைப்படங்களும் பொருத்தம். தனித்துவமான வழியில் புத்தக அறிமுகம் நன்று.

  ReplyDelete
 5. குழந்தைகளே அருமை. அவர்களின் வாய்மொழியும் செய்கைகளும் வர்ணஜாலம்.
  படங்கள் பேசுகின்றன. அந்தச் சின்னப் பொண்ணு ம் அம்மாவும் தான் எத்தனை கம்பீரம்.
  நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 6. ரசிக்க வைக்கும் குழந்தைப்பாடலோடு ரசனையான குட்டீஸ் படங்கள்.. ஒவ்வொன்றும் ஒரு பாவனையில் அழகு.

  ReplyDelete
 7. குழந்தைபாடல்கள் அருமை, குழந்தைகள் படம் மிக அருமை.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin