Friday, November 21, 2014

தூறல் 21: திருப்பூர் விழா, இணைப்பது எழுத்து, மது அரக்கன், ஹெல்மட் ப்ளீஸ்

பெண் எழுத்தாளர்களுக்கான இலக்கியப் பரிசளிப்பு விழா, 12 அக்டோபர் 2014 அன்று திருப்பூரில்  நடைபெற்றது. விழா அமைப்பாளர் திரு. ஜீவானந்தம் அவர்கள் பரிசுத் தொகையோடு கேடயம், சான்றிதழ்களை கொரியரில் அனுப்பி வைத்திருந்தார்.  அவருக்கும் என் நன்றி.  சேமிப்புக்காக விருதுகளை இங்கும் பதிந்து வைக்கிறேன்:). [தொடர்புடைய முந்தைய பதிவுகள் இங்கும், இங்கும்.]

#1

#2
#3

விழாவில் கலந்து கொண்டவர்கள் அன்றைக்குப் பலரையும் முதன்முறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்தும், நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது குறித்தும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். குறிப்பாக திருமதி. தனலெக்ஷ்மி நான் வராதது ஏமாற்றமாக இருந்ததென்றும், சந்திக்கும் ஆசை நிறைவேறுமென நம்புவதாயும் சொல்லியிருந்தார். நானும் அவ்வாறே நம்புகிறேன். அவரது அன்புக்கு நன்றி:).
***

துளசிதளம். 2008_ல் பதிவுலகம் நுழைந்ததிலிருந்து தொடருகிற தளம்.  அன்றிலிருந்து இன்று வரை இங்கிருந்து நிறையக் கற்றுக் கொண்டேயிருக்கிறேன். என்னென்ன கற்றேன் என்பதையும் பல்வேறு சமயங்களில் பலபதிவுகளில் சொல்லி வந்துள்ளேன். சமீபத்தில் நேரடியாக அவரிடமே சொல்லும் வாய்ப்புக் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி:).

தங்களது சமீபத்திய இந்தியப் பயணத்தின் போது பெங்களூருக்கும் இரு நாள் பயணமாக வந்திருந்தார்கள் திரு. கோபால் & திருமதி. துளசி கோபால் தம்பதியர். நேரம் ஒதுக்கி எங்கள் இல்லத்துக்கு திரு.பூபால், திருமதி.சாந்தி பூபால் ஆகியோருடன் வருகை தந்திருந்தார்கள்.

அறிமுகம், ஊர், நாடு, உலக நடப்பு ஆகிய பேச்சுகள் முடிந்து நாங்கள் இருவரும் பதிவுலகம், எழுத்து, ஒளிப்படம், PiT, கேமராக்கள், லென்சுகள் என விடாமல் பேசிக் கொண்டேயிருந்தோம்:)! முத்துச்சரத்தில் தொடர்ந்து பதிவிடுவதில் ஆர்வம் குறைந்து போகும் போதெல்லாம், அதை மீட்டெடுக்க உதவுவது துளசி தளமே என்றேன். என்றைக்கும் பதிவெழுத வரும் எவருக்கும் முன் மாதிரியாக இருக்கிற துளசி அவர்கள் அப்போது சொன்ன விஷயம் யோசிக்க வைத்தது. “எனக்கும் கூட போதும் எனப் பலமுறை தோன்றியிருக்கிறது. சரியென எழுதுவதை நிறுத்தி விட்டு வேறு விஷயங்களில் ஈடுபட்டாலும் எழுத நினைப்பது மனதில் ஒருபக்கம் ஓடிக் கொண்டே இருக்கிறது. அப்படியானால் அந்த ஆற்றல் நம்மை விட்டுப் போகவில்லை என்றுதானே அர்த்தம். எழுத்து நம்மை விடாத போது நாம் ஏன் அதை விட வேண்டும்?” எனக் கேட்டார். சரிதானே? நம்மை விடாமல் இருக்கட்டும் எழுத்து. அதே போல் எங்கெங்கோ வசிக்கும் நம்மை இப்படி இணைப்பதும் அந்த எழுத்தே:).

#4
திருமதி. துளசி, திரு. கோபால் ஆகியோருடன்..

ஞாபகமாய் அவரது ‘என் செல்ல செல்வங்கள்’ நூலில் கையெழுத்து வாங்கிக் கொண்டேன். அந்த நூலிலும் சரி, அவர் தளத்தில் வாசித்த ‘அக்கா’ தொடரிலும் சரி,  எப்படிப் பல வருடங்களுக்கு முன் நடந்த ஒவ்வொரு சம்பவத்தையும் துல்லியமாக நினைவில் வைத்து எழுதியிருந்தார் என்பது எனக்கு ஆச்சரியமே. ‘உங்களுக்கு டைரி எழுதும் பழக்கம் உண்டா?’ என்றே கேட்டு விட்டேன். அவரோ எல்லாமே நினைவிடுக்குகளிலிருந்து மீட்டு எழுதியவைதான் என்றும் அத்தகைய நினைவாற்றல் வரமா.. இல்லை சாபமா.. எனத் தெரியவில்லை என்றும் சொன்னார். ஆம், மனதைப் பாரமாக்கிய, வருத்திய பல நினைவுகளை நாம் மறக்கவே விரும்புவோம்.  எழுத்தே வடிகால் என, பால்ய காலத்து இனிய நினைவுகளோடு பாரமாய் இருக்கும் நினைவுகளையும் இவர் இறக்கி வைத்த ‘அக்கா’ தொடர், வருகிற சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தியா பதிப்பக வெளியீடாக நம் கைகளுக்கு வரவிருக்கிறது.  துளசி அவர்களுக்கு நம் வாழ்த்துகள்!

நான்காவது நூல்..
நினைவாற்றல் குறித்து வியந்து நான் சொல்லிக் கொண்டிருந்தபோது திரு. கோபால், அந்த வகையில் துளசி அவர்கள் எழுதிய நூல்களில் அதிகம் பாராட்டைப் பெற்றது “ஃபிஜித்தீவு”. அங்கிருந்த ஆறுவருட வாழ்க்கையை சிறப்பாக எழுதியிருப்பார்” என்றும், அதை வாசிக்குமாறு பரிந்துரைத்தார். அவசியம் வாசிக்கிறேன்!

#5 என் ‘க்ளிக்’கில்.. எழுத்தாளர். துளசி கோபால்
“எழுத்து நம்மை விடாத போது நாம் ஏன் அதை விட வேண்டும்?”
***

ருமி. ஒன்பதரை ஆண்டுகளில்.. எண்ணூறு பதிவுகளைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிற வலைப்பக்கம். சற்றே எளிதாக இயங்க முடிகிற பிற சமூக வலைத்தளங்களின்பால் ஏற்பட்ட ஈர்ப்பினால் நன்றாக எழுதிக் கொண்டிருந்த அன்றைய பதிவர்கள் பலரின் பக்கங்கள் அப்டேட் ஆகாமல் போய்விட்டிருக்க, துளசி அவர்களைப் போலவே அயராமல் தொடர்ந்து பதிவிட்டு,  புதியவர்களுக்கும் நமக்கும் உதாரணமாய் இருந்து வருகிறவர் திரு.தருமி.  அனுபவம், நாட்டு நடப்பு, சமூகம், பயணம் என எந்த விஷயமானாலும் தன் அழுத்தமான கருத்துகளைத் தைரியமாகப் பதிந்து வருகிறவர். தனது 800_வது பதிவு ஒரு நல்ல விஷயத்துக்கான ஆரம்பமாக இருக்க வேண்டுமெனக் கருதி, தமிழக அரசுக்கு ஒரு மனுவைத் தயாரித்து உள்ளார். இருநூறு பேர்களின் கையொப்பம் சேர்ந்ததும் அனுப்பி வைப்பதாகத் திட்டம்.

பல்லாயிரம் பேர்களின் உடல் நலத்தைக் குலைத்து, அவர்களின் குடும்பங்களை நிர்க்கதியாக்கும் பணியைச் செவ்வனே செய்து வருகிற மது அரக்கனை அடக்கி வைக்க  நம் பக்கத்திலிருந்து வேண்டியதெல்லாம் இன்னும் 33 பேரின் கையெழுத்து:


#6

“தமிழ்நாட்டில் தான் விபத்துகள் அதிகம் என்ற செய்தி மனதை உறுத்துகிறது. பார்களை எடுத்தால் குடியை நிறுத்த முடியாது. ஆனால் நிச்சயமாக குறைக்க முடியும். அரசுக்கும் காசு நட்டம் ஏதும் கிடையாது.  மது விலக்கிற்கு எதிரான சிறிய ஆனல் முதல் படியாக இது இருக்கட்டுமே!” என்று களம் இறங்கியிருப்பவருக்கு கரம் கொடுக்கலாமே.

#7

[படங்கள் இரண்டும் 2012 மைசூர் தசராவில், விழிப்புணர்வு கோரி ஊர்வலத்தில் இடம்பெற்றிருந்த வாகனக் காட்சிகள்.]
***

பெங்களூரில் ஹெல்மட் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களைக் காண்பது மிக அரிது. அப்படியே சென்றாலும் நிச்சயமாக போக்குவரத்துக் காவலர்களால் ஓரம் கட்டப்படுவார்கள். கர்நாடகத்தின் மற்ற ஊர்களில் எப்படி எனத் தெரியவில்லை. தமிழகத்தில் அவரவர் வசிக்கும் நகரங்களில் எப்படி என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
படம் நன்றி: இணையம்
நெல்லையில் சமீபத்தில் நேர்ந்த ஒரு விபத்து. பள்ளி முடிந்த நேரம். இரு சக்கர வாகனத்தில் மகனை அழைத்துச் செல்வதற்காக  வந்திருக்கிறார் அம்மா. பள்ளியின் பக்கம் திரும்புகையில் சாலையில் காத்திருந்த 8வது படிக்கிற மகன் ‘அம்மா வராதே வராதே’ எனக் கைக்காட்டிக் கத்தி இருக்கிறான், எதிர் திசையில் வேகமாக வந்து கொண்டிருந்த வேனைக் கவனித்து விட்டு. ஒரு நொடிப் பொழுதில் எல்லாமே நிகழ்ந்து முடிந்து விட்டது. வேன் இடித்ததில் இவரின் வண்டி வேனுக்குள் மாட்டி இவரையும் சேர்ந்து இழுத்தபடியே பல அடிகள் சென்று நின்று விட்டிருக்கிறது. சம்பவம் நடந்த இடம் வழியே வந்து கொண்டிருந்த தம்பி மனைவி செல்வி லக்ஷ்மணன் இதை நேரில் கண்டிருக்கிறார். காரை உடனடியாக நிறுத்திவிட்டு, இறங்கி ஓடிச் சென்று அந்தப் பெண்மணியைத் தூக்கும் போதே..

அதிர்ச்சியிலிருந்து மீளாமல் என்னிடம் பேசும்போது அவர் ஆற்றாமையுடன் சொன்னது, “ஹெல்மட் போட்டிருந்தா அவங்க நிச்சயம் பிழைச்சிருப்பாங்க” என்பதுதான். தலையில் பட்ட பலமான அடியினாலேயே உடனடியாக மூக்கிலும் காதுகளிலுமிருந்து பெரிய அளவில் இரத்த சேதம் என்றார். பள்ளிக்குக் குழந்தைகள் விட வருகிற பல தாய்மார்கள் ஹெல்மட் அணிவதே இல்லை என்றார்.

பள்ளிப் பகுதிகளில் இன்னும் அதிகமான ஸ்பீட் ப்ரேக் நிறுவப்பட வேண்டும் என்றார். அதே போல சின்ன ஸ்ட்ரெச் சாலைகளில் கூட நூறு மைல் வேகத்தில் பறக்கிறவர்கள் இருப்பதாய் வருத்தப்பட்டார். உங்களைச் சுற்றியிருப்பவர்களிடத்தில் ஹெல்மட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்துங்கள். வியர்வை, சுமை, அசெளகரியம் எனப் பல காரணங்கள், கழட்டும் போது பத்திரப் படுத்த வேண்டியிருக்கும் எரிச்சல், என்ன ஆகி விடப் போகிறது என்கிற அலட்சியம்... இவற்றுக்குத் தரவேண்டி வருகிற விலையை நினைத்துப் பார்க்கச் சொல்லுங்கள். போக்குவரத்துக் காவலர்கள் இந்த விஷயத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம். மேலும், பள்ளிக்கு நேரமாகி விட்டதெனப் பரபரப்புடன் விரைவதைத் தவிர்க்க சற்று முன்னதாகத் திட்டமிட்டுக் கிளம்பவது நல்லது. அப்படியும் தவிர்க்க முடியாமல் தாமதமானால் பள்ளியில் குழந்தைகள் எதிர்கொள்ள நேரும் பிரச்சனை, தண்டனைகளை விடவும் உயிர் அதிமுக்கியமானது என்பதை நினைவில் கொள்க.

- அதீதமாய்க் கொஞ்சம் (2)

டத்துளி:
#8
பால்வண்டி
***

18 comments:

 1. திருப்பூர் விழா, இணைப்பது எழுத்து, மது அரக்கன், ஹெல்மட் ப்ளீஸ் - தூறல் 21 = Ramalakshmi Rajan = நிறைய விஷயங்கள் கொண்ட பதிவு. எங்கள் மூத்த பதிவர் திருமதி துளசி கோபால் பெங்களுக்கு சென்றது பற்றி. திரு தருமி அவர்கள் 800 வது பதிவு - டாஸ்மாக்கிலிருந்து பார்களை அகற்றுவது சம்பந்தமாக கையெழுத்து கேட்டு. = எனது பக்கத்தில் பகிர்கிறேன். பதிவை படிக்க வேண்டுகிறேன். அந்த மனுவில் கையெழுத்திட வேண்டுகிறேன். = நன்றி திருமதி Ramalakshmi Rajan

  ReplyDelete
 2. அனைவர் மனமும் கவர்ந்த இரு
  முதிர்ச்சியான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்களான
  இரு பதிவர்கள் குறித்து பதிவு செய்தமைக்கும்
  பரிசு பெற்றமைக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அக்கா’ தொடர், வருகிற சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தியா பதிப்பக வெளியீடாக நம் கைகளுக்கு வரவிருக்கிறது. துளசி அவர்களுக்கு நம் வாழ்த்துகள்!

  ReplyDelete
 4. விருது நிகழ்வுக்கு மறுபடியும் வாழ்த்துகள்.

  மூத்த பதிவர் துளசி கோபால் புத்தகம் பிஜித்தீவுப் பயணம் பற்றிய நூலைப் பற்றி அப்பாதுரை முன்பு ஒருமுறை சொல்லியிருக்கிறார். அக்கா புத்தகம் வெற்றியடைய அவருக்கு எங்கள் வாழ்த்துகள்.

  தருமி அவர்கள் பக்கத்துக்குச் சிலமுறை சென்றிருக்கிறேன்.

  ஹெல்மெட் அணியாததன் இழப்பு பட்ட உடன் மட்டுமே புரிகிறது.

  ReplyDelete
 5. மூத்த பதிவர்களின் தொகுப்பும் மிகவும் சிறப்பு...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. இலக்கிய பரிசளிப்பு விழா பகிர்வு அருமை, வாழ்த்துக்கள்., துளசி கோபால் வருகை மகிழ்ச்சி அளிப்பது.
  அவரின் அக்கா கதை படிக்க ஆவல். அது நன்றாக இருக்கும் என்று மகள் சொல்லி இருக்கிறாள்.புத்தகம் வெளி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

  தருமி அவர்களின் பதிவுக்கு போய் பார்க்கிறேன். அவரின் பணி சிறப்பானது.

  ஹெல்மெட் அணியாததன் இழப்பு பட்ட உடன் மட்டுமே புரிகிறது.//

  ஸ்ரீராம் சொன்னது போல் ஹெல்மெட் அணிவதின் அவசியம் பட்ட பின்னே தெரிகிறது. அணியாமல் சென்ற அண்ணனை இழந்து தவிக்கும் எனக்கு நன்கு தெரியும்.

  ஹெல்மட் அணியவேண்டும் என்று கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்.
  ReplyDelete
 7. @ Rathnavel Natarajan,

  மிக்க நன்றி sir.

  ReplyDelete
 8. @ Ramani S,

  மகிழ்ச்சி. நன்றி, தங்கள் வாழ்த்துகளுக்கும்.

  ReplyDelete
 9. @இராஜராஜேஸ்வரி,

  நன்றி.

  ReplyDelete
 10. @ ஸ்ரீராம்,

  நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 11. @ திண்டுக்கல் தனபாலன்,

  நன்றி தனபாலன்.

  ReplyDelete
 12. @ கோமதி அரசு,

  கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கோமதிம்மா. அக்கா நூல் அவசியம் வாசியுங்கள்.

  ReplyDelete
 13. இந்த அன்புக்கு என்ன தவம் செய்தேன்!!!


  மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன்,

  துளசி.

  இங்கே எங்க (!) நாட்டில் வெறும் சைக்கிளுக்கும் ஹெல்மெட் போடணும். குழந்தைகள் ஓட்டும் பேபி சைக்கிள் என்றாலுமே!

  ReplyDelete
 14. @ துளசி கோபால்,

  'அக்கா’ நூலின் அட்டைப் படத்தை அனுப்பித் தந்ததற்கு நன்றி:). அதையும் பதிவில் சேர்த்துக் கொண்டுள்ளேன்.

  --

  சைக்கிளுக்கும் ஹெல்மட் கொண்டு வருவது எத்தனை நல்லது! இங்கே சாலைகளில் மின்னல் வேகத்தில் வண்டிகளுக்கு நடுவே புகுந்து விரையும் 13-15 வயதுக்குள்ளான சிறுவர்களைப் பார்க்கையில் பகீர் என இருக்கிறது:(!

  ReplyDelete
 15. எங்களூரில் ஹெல்மட் போட்டுப் போனால் எங்களை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்களே...!

  ReplyDelete
 16. துளசியின் அக்காவுக்காக மூன்று வருடங்கள் காத்திருக்கிறேன். வாழ்த்துகள். ஒரு அற்புத மனுஷியைச் சந்தித்து அருமையான அறிமுகமும் கொடுத்துவிட்டீர்கள் ராமலக்ஷ்மி. அதே போல தருமி ஐயாவையும் 2006லிருந்தே தெரியும். அவரது எண்ணூறு பதிவுகளிலும்மர்த்தமுள்ள விஷயங்கள் இருக்கும்.

  ReplyDelete
 17. @ தருமி,

  பார்த்துவிட்டுப் போகட்டும். ஆனால், அந்த அளவுக்கா இருக்கிறது நிலைமை:(?

  ReplyDelete
 18. @ வல்லிசிம்ஹன்,

  அக்கா நூலில் பதிவில் சொல்ல விட்டுப்போன பலவற்றைச் சேர்த்திருப்பதாகத் தெரிவித்தார். நானும் காத்திருக்கிறேன். நன்றி வல்லிம்மா:).

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin