Tuesday, October 28, 2014

இந்த மனுஷங்களே இப்படித்தான்.. - பெங்களூர் பெரிய ஆலமரம்

3 ஏக்கர் பரப்பில் விரிந்து நிற்கும் 400 வயதான இந்த ஆலமரம் கர்நாடாகத்தில் ரமோஹள்ளி எனுமிடத்தில் உள்ளது.

#1

250 மீட்டர் சுற்றளவிலான இதன் அடிமரம் வியாதி வந்து அரிக்கப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள்.  ஆனால் ஆயிரத்துக்கும் மேலான விழுதுகள் தாங்கி நிற்கின்றன மரத்தை. போகவும்கிளைகளின் முனைகள் நிலத்தில் வீழ்ந்து விடாதபடி தாங்குக் கட்டைகளை வைத்திருப்பதைக் கீழ்வரும் படத்தில் காணலாம்.

#2

ஒருநாள் சுற்றுலாவுக்கு பெங்களூர் மக்கள் நாடும் இந்த ஆலமரத்தைத் தேடி வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.

#3

இந்த இடத்தை அடைய பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 28 கி.மீ பயணப்பட்டு
கும்பலகாட் சந்திப்பில் வலப்பக்கமாகப் பிரியும் சிறிய சாலையில் 7 கீ.மீ செல்ல வேண்டும்.

#4

சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டுச் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது என்றாலும் வருகிற மக்கள் ஆங்காங்கே இப்படி பிளாஸ்டிக் பைகளை வீசிச் சென்றிருப்பதையும் பார்க்க முடிகிறது..

#5

இப்போது மழைக்காலம். இந்நேரத்தில் சேறும் சகதியுமாக இருக்கும் என்பதால் நடப்பதே சிரமம்.  மழைக் காலங்களில் செல்வதைத் தவிர்த்தல் நல்லது. நான் சென்றிருந்தது ஏப்ரல் மாதத்தில். கோடை விடுமுறையில் இருந்த தம்பி மகன், தங்கை மகள் இருவருக்கும் இயற்கை அற்புதத்தைக் காட்ட எல்லோருமாகச் சென்றிருந்தோம்.

#6
ஏறிப் பாக்கலாமா..


#7
வெயிட் தாங்குமா? எதுக்கும் டெஸ்ட் செஞ்சுப் பாத்திட்டா  நல்லது.


#8
 ‘ரைட். ஏறலாம். ஸ்ட்ராங்காதான் இருக்கு.

#9
ஆஹா.. என்ன உயரம் பாரேன்...


#10
பயப்படாம ஏறு அக்கா. பின்னாலயே வாரேன். விழுந்தாப் பிடிச்சுக்கறேன்.

#11

இங்கே குரங்குகள் அதிகம் இருக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுதான். கூட்டம் கூட்டமாக உலவிக் கொண்டிருந்தன. அவற்றின் கண்ணில் படுகிற மாதிரி உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்கிற எச்சரிக்கையும் விடுக்கிறார்கள். அப்படி எதுவும் கண்ணில் படாவிட்டாலும் கூட உணவுப் பொருட்களைத் தேடிப் பைகளை அபகரிக்கின்றன குரங்குகள்.

#12
ஒரு கல் பெஞ்சில் அமர்ந்து தம்பி மனைவியுடன் பேசியபடியே மேல் நோக்கி இந்தப் படத்தை எடுத்து கொண்டிருந்தேன். அருகில் என் கைப்பை. திடீரென பக்கத்தில் வந்து அமர்ந்த பெரிய வயதான குரங்கு பையைக் கையில் எடுத்துக் கொண்டது. பதறி எழுந்து கொண்டோம் நாங்கள். நிறைய குரங்குகள் சுற்றிச் சுற்றி வந்தாலும் நம்மிடம்தான் உணவுப் பொருட்கள் ஏதுமில்லையே என அதிகம் சட்டை செய்யாமல் இருந்தது தப்பாகி விட்டது. இப்படி சாவகாசமாக வந்து வழிப்பறி செய்யுமென நினைக்கவில்லை.

சூ சூ என சொல்லிப் பார்த்தோம். அதற்கெல்லாம் அசரவில்லை குரங்கார். வட இந்தியப் பயணத்தில் ஒருவரின் பாயிண்ட் & ஷூட் கேமராவைப் பறித்துக் கொண்ட குரங்கு தாவித்தாவி பத்து கட்டிடங்கள் தாண்டிப் போய் அமர்ந்து கொண்டதாக தம்பி சொல்லவும் பீதி அதிகமானது. என் வசதிக்காக கேமரா பையாக இல்லாமல் சற்று பெரிய கைப்பையிலேயேதான் லென்ஸுகளையும் நான் எடுத்துச் செல்வது வழக்கம். அதில் 55-200mm, 50mm லென்ஸுகள், அலைபேசி, வங்கி அட்டைகள், வீட்டுச் சாவி எல்லாமிருந்தன. விரட்டப் போய், பையைத் தூக்கிக் கொண்டு கிளை கிளையாகத் தாவிக் கொண்டே போனால் அந்த 3 ஏக்கரில் எங்கே என்று போய்த் தேடுவது்? குரங்காரோ ரொம்ப இலாவகமாக விசுக் விசுக் என ஒவ்வொரு ஜிப்பாகத் திறந்து உள்ளே தலையை விட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பக்கத்தில் குச்சி ஏதுமிருந்தால் எடுத்துத் தரையில் தட்டலாமெனப் பார்த்தால் எதுவும் கிடைக்கவில்லை தம்பிக்கு. சரியென கல்லை எடுப்பது போல் அவன் பாவனை காட்டவும் சற்றுத் தயக்கமாகப் பார்த்தது. அந்நேரம் பார்த்து பைக்குள் இருந்த என் அலைபேசி ஒலிக்க வெருண்டு ‘பொத்’ எனப் பையைப் போட்டு விட்டு எடுத்தார் ஓட்டம். நிம்மதி ஆனோம். “கையிலேயே கேமராவை வச்சிருந்தும், இருந்த டென்ஷன்ல பைக்குள்ள குரங்கு தலைய விட்டு ஆட்டுனதை எல்லாம் படம் எடுக்காம விட்டுட்டீங்களே” என தம்பி மனைவி சொன்ன பிறகே உணர்ந்தேன். ‘அட (ரா)ஆமா’ என அசடு வழியச் சிரித்தேன்:)!

#13
                                                              ‘நான் அவனில்லை..
ஆம், இவர் அவர் இல்லை..
#14
         “எங்க இடத்துக்கு வந்துட்டு எங்களைத் தொல்லைன்னு சொல்றீங்களே..

#15
அட விடப்பா. இந்த மனுஷங்களே இப்படித்தான்!
***

23 comments:

 1. 400 வயது.... அடேங்கப்பா....!

  என்ன ஒரு பெரிய கூட்டு மரக் குடும்பம்

  குரங்கானுபவம் த்ரில்!

  14. அதானே!

  ரசனை. சுவாரஸ்யம்.

  ReplyDelete
 2. நல்ல விவரங்கள். போட்டோக்கள் அருமை.

  ReplyDelete
 3. இந்த மனுஷங்களே இப்படித்தான்!”


  மரங்களும் குரங்குகளும் முணுமுணுப்பது துணுக்குறவைக்கிறது..!

  ReplyDelete
 4. இந்த ஒரெஉ ஒரு ஆலமரம் மட்டுமா மூன்று ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது.. ஆம் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது.. நிச்சயம் செல்ல வேண்டும்...

  ReplyDelete
 5. படிக்க த்ரில்லிங்காக...படங்கள் அழகாக...

  ReplyDelete
 6. சுடச்சுட படம் எடுக்கலாம் சூடுபட எடுக்க முடியாது தான் ... நான் அவனில்லை நல்ல பகிர்வு

  ReplyDelete
 7. வாவ், இயற்கை அதிசயத்தைப் பகிர்ந்து கொண்ட விதம் அருமை. குரங்கார் சொல்வது நியாயந்தானே.

  ReplyDelete
 8. படங்களுடன் அறியாத செய்தியை அறியத் தந்தீர்கள் அக்கா...
  நல்லவேளை போன் வந்தது... பேக்கும் வந்தது...

  ReplyDelete
 9. கையில் காமிரா ... படம் எடுக்கத் தோணவில்லை. ஆனால் இந்த செய்தியாளர்கள் எடுக்கும் சில படங்கள் ஆச்சரியமூட்டக் கூடிய படங்கள் தான். எப்படி எடுக்கிறார்கள் என்றும் ஆச்சரியம் வருவதுண்டு

  ReplyDelete
 10. அருமையான படங்கள்... எவ்வளவு பெரிய ஆலமரம்.

  சமீபத்திய பயணம் ஒன்றில் ஒரு சாலை முழுவதும் ஓரங்களில் ஆலமரங்கள் - விழுதுகளோடு..... பார்க்கவே பிரமிப்பாக இருந்தது.

  கையில் கேம்ரா இருந்தும் படம் எடுக்கத் தோன்றவில்லை - எடுத்திருந்தால் எங்களுக்கு அழகான் படம் கிடைத்திருக்கும்!

  ReplyDelete
 11. அருமையான பயணக்குறிப்பு. நமக்கு ஆபத்தென்று வரும்போது புகைப்படம் எடுக்கும் எண்ணம் வருவதில்லை.

  ReplyDelete
 12. @பழனி. கந்தசாமி,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 13. @சீனு,

  ஆம், ஒரே மரம்தான். வாய்ப்புக் கிடைத்தால அவசியம் சென்று பாருங்கள். நன்றி.

  ReplyDelete
 14. @தருமி,

  ஆம், வியப்புதான்:). நன்றி.

  ReplyDelete
 15. நன்றி சொல்ல வேண்டும் அலைபேசிக்கு.

  400 வயதான ஆலமரமும், அதன் வரலாறும் படங்களும் மிக அருமை.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin