Tuesday, October 14, 2014

‘குங்குமம்’ தீபாவளி கொண்டாட்ட இதழில்.. கவிதைக்காரர்கள் வீதியில்..

தீபாவளி கொண்டாட்டமாக 2 புத்தகங்களுடன் வெளியாகியுள்ள, 20 அக்டோபர் 2014 குங்குமம் இதழில்..

பக்கங்கள் 22, 23_ல் எனது கவிதை..

பட்டியல்

இந்த வேலையிலாவது
நிலைச்சிருக்கணும் சின்னவன்.
பத்தாவதுல விட்ட பாடத்தை
பேரப்பய திரும்ப எழுதிப் பாஸாகணும்.
துடுக்காத் திரியும் பேத்திக்கு
அடக்க ஒடுக்கமா ஒரு வரன்
சீக்கிரமா அமையணும்.
நெறமாச லச்சுமி
நல்லபடியாக் கன்னு போடணும்.
அடமானம் வச்ச சங்கிலிய
மீட்டாப் பத்தாது.
வார தீவாளிக்கு
மொத்தக் குடும்பத்துக்கும்
சீலை சட்டை புதுசு எடுக்குற
சக்தியத் தரணும்.

சாமி முன் கைகளைக் கூப்பிய
பொன்னம்மை ஆச்சிக்கு
எதிர் வரிசையில்
மாலையும் கழுத்துமாய் நின்றிருந்த
புதுமணத் தம்பதியரைப் பார்த்ததும்
வழிநெடுகப் போட்டு வந்த பட்டியலில்
ஒன்று கூட நினைவுக்கு வரவில்லை.

சின்னஞ்சிறுசுங்க
பதினாறும் பெத்துப் பெருவாழ்வு வாழணும்
கனிந்துருகி வேண்டிக் கொண்டு
பிரகாரத்தைச் சுற்றத் தொடங்கியவளை
வணங்கி நிமிருகிறது
அவள் மனசைப் போலவே
பரந்து நின்றிருந்த அரசமரம்.
*

நன்றி குங்குமம்!

***

22 comments:

 1. வாழ்த்துகள்.

  ஏற்கெனவே எழுதி இருந்ததா? புதுசா? எனக்கு ஏற்கெனவே படித்தது போலத் தெரியவில்லை!

  படத்தைக் க்ளிக் செய்து படித்து விட்டு, ஸ்க்ரால் செய்து கீழே வந்தால் சிரமப் படாமல் படிக்கக் கீழே அதே கவிதை... ச்சே... அவசரக் குடுக்கை நான்! :)))

  ReplyDelete
 2. @ஸ்ரீராம்.,

  பதிந்த பின் படத்தில் எழுத்துகளை வாசிப்பது சிரமம் எனத் தோன்றியதால் வரிகளாகவும் பகிர்ந்தேன் பிறகு:)!

  சரியே. புத்தம் புதிய கவிதைதான். வாழ்த்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்!

  ReplyDelete
 3. நானும் ஸ்ரீராம் மாதிரிதான் படித்தேன் கொஞ்சம் கஷ்டப்பட்டு கீழே பார்த்தால் எளிதாக படிக்க முடிகிறது.
  கவிதை அருமை.
  தன்னலம் மறந்து பிறர்நலத்திற்கு வாழ்த்துவது சான்றோர் இயல்பு.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 5. தீபாவளிப்பரிசு.....
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 6. மனம் நிறைந்த பாராட்டுகள் + வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. அழகான கவிதை.

  முத்தான கடைசி மூன்று வரிகள் பசுமையுடன் இனிமையாக ..... :) அசத்தல்.

  ReplyDelete
 8. @கோமதி அரசு,

  ஓ! கவிதைக்குக் கீழ் படத்தைக் கொண்டு வந்து விட்டேன், இப்போது.


  கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கோமதிம்மா!

  ReplyDelete
 9. @தங்கராசா ஜீவராஜ்,

  மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகான உங்கள் வருகையில் மகிழ்ச்சி.

  ஆம். நன்றி.

  ReplyDelete
 10. ஆஹா.அருமை ராமலக்ஷ்மி. அன்பு உள்ளம் ஆச்சிக்கு உலகமே தம்பதியர் வடிவத்தில் வந்துவிட்டது. இனிய உள்ளம் கொடுத்த அன்புக் கவிதை. வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. கவிதைக்காரர்கள் வீதியில் தீபாவளி சமயம் பார்த்து நடந்து வந்தமைக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 12. பாட்டியின் நல்லுள்ளத்தைச் சொல்லும் நற்கவிதை. பாராட்டுகள்.

  ReplyDelete
 13. அருமையான கவிதை. தன்னலமற்ற பாட்டி. பேரன்பு கொண்ட ஆலமரம்.

  தீபாவளி குங்குமத்தில் வந்தமைக்கு வாழ்த்துகள் ராமலெக்ஷ்மி

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin