சனி, 8 ஆகஸ்ட், 2026

பசி - கீற்று மின்னிதழில்...

 

பசி

கூட்டுக்குத் திரும்புகிறாள் 
தாய்க் குருவி
இறக்கைகளில் 
ஆகாயத்தின் எடையைத் தாங்கி.

அலகுகளுக்கு இடையே 
நெளிகின்றன 
சேகரித்தப் புழுக்கள்.
கூட்டில் காத்திருக்கின்றன
பசியில் அலறியபடி
விரியத் திறந்த 
இளஞ்சிவப்பு வாய்கள்.

தன் மென்மையான சிறகுகளால் 
சேய்களின் உடல்களை உரசி
உணவூட்டுகிறாள்.
அவை விழுங்கி முடிக்க 
காத்திருக்கிறாள்.
ஆசுவாசத்தில் 
எழுந்து இறங்குகிறது 
நெஞ்சு.
விரிகிறது கூட்டின் மேல்
ஒரு நிழல்.

கிளையைப் பற்றுகின்றன
கூர்நகங்கள்.
அதிர்கிறது மரம்.
திறக்கிறது
இன்னோர் அலகு—
அதே பசி
வேறோர் கூட்டில்.
*

நன்றி கீற்று!
*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin