வியாழன், 18 ஜூன், 2026

சிறகுகள் தீண்டிய உலகம் - பண்புடன் மின்னிதழில்...


பறத்தலின் மொழி 

1.
புழுதியில் ஒரு இறகு
புரட்டுகிறது காற்று.
தரையில் வானம்.

2.
கரையும் மாலைக்காகம்
இறக்கைகளுக்குள் மடங்கும் பகல்
பதிலளிக்கும் மெளனம்.

3.
சிறகுக்கு வழிவிடும் பனி
நகர்கிறது காலை
காற்றின் பாதையில்.

4.
மேலெழும் தேநீர் ஆவி
கடை உத்திரத்தில் குருவி
கோப்பையின்றி வெதுவெதுப்பு.

5.
அமைதியான நீர்
ஒற்றைக் காலில் கொக்கு
மங்கும் மாலை.

6.
காரிருள்
இரு ஒளிப்புள்ளிகள்
ஆந்தையின் கண்கள்.

7.
வெள்ளி மேகங்கள்
மழையில் நனைந்த புறாக்கள்
சொட்டச் சொட்டத் தெருக்கள்.

8.
சாம்பல் வானம்
பச்சைக்கிளியின் கீச்சு
மறுக்கிறது புயலோடு கரைய.

9.
ஒலிகளோடு விடியல்
விவாதத்தில் பறவைகள்
எவர் பக்கமும் இல்லை சூரியன்.

10.
பறவை சென்ற பின்னும்
ஆடுகிறது கிளை
தீண்டலின் நினைவில்.
*

நன்றி பண்புடன்!
**

13 கருத்துகள்:

  1. முதல் கவிதை புரியவில்லை. அதெப்படி தரையில் வானம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வானத்தில் வாழ்ந்த ஒன்றின் மிச்சம் இறகு. அந்தப் பறவையின் பயணத்தை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறது. அதன் வரலாறும் கூட இன்னும் வானத்தில்தான் இருக்கிறது. காற்றுத் திருப்புகையில் தென்பட்ட இறகு, எனக்கு ‘தரையில் வானம்’ ஆனது :) .

      நீக்கு
  2. ஆந்தையின் கண்கள் என்று நீட்டாமல் ஆந்தை என்பதோடேயே நிறுத்தி விடலாம் என்பது என் கருத்து!

    பதிலளிநீக்கு
  3. ஏழாவதற்கு என்னுடைய மூன்றாவது வரி 'சிலிர்க்கிறது சிறகுகள்'! அல்லது 'நனைகிரீது ஜன்னல்' .

    அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. ஹைக்கூவின் இலக்கணம் மூன்றாவது வரி முதல் இரண்டு வரி என்ன சொல்ல வருகிறது என்பதை சுருக்கமாகச் சொல்ல வேண்டும். கவிதையின் நீட்சியாக இருக்கக் கூடாது.

    "சிறிய கவிதையில் கவிஞன் வாசகனை ஒரு மலையுச்சிக்கு ஒரு கழுகு தன் குஞ்சை எடுத்துச் செல்வது போல அழைத்துச்சென்று, அங்கே தொபுக் என்று போட்டு விடுகிறான்! கற்பனை உள்ள வாசகன் பறக்கிறான். இல்லாதவன் விழுந்து சாகிறான்" - என்கிறார் ராபர்ட் ப்ளை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வரியில் ஒரு காட்சிப் படிமம். இரண்டாவது வரியில் ஒரு காட்சிப் படிமம். மூன்றாவது வரி இரண்டையும் இணைக்க வேண்டும். முடிந்த வரையில் ஒவ்வொரு வரியும் 3 வார்த்தைகளுக்கு மிகாமல். - இந்த அடிப்படையைப் பின் பற்றுகிறேன்.

      பண்புடன் ஆசிரியர் குழுவில் இருக்கும் ஜீவ்ஸ் வழிகாட்டல் மற்றும் கொடுத்த ஊக்கத்தில் ஆரம்பித்தது. தொடர்ந்து எழுதி வந்தால் வசப்படும் என நம்புகிறேன்.

      ராபர்ட் ஃப்ளை கருத்தை ரசித்தேன்.

      நீக்கு
  5. புயலடிக்கும் இரவு
    கிளியின் ஓலம்
    ஒளிய இடமில்லை

    என்று ஒரு கவிதையை மாற்றி சொல்லிப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. சுஜாதா கொடுத்த எளிய உதாரணங்கள்

    கடிக்கும் கொசு
    அடிக்க மனசில்லை
    வெள்ளை ஆடை

    நாய்கள் குரைக்கவில்லை.
    பாதையில்
    இராணுவம்

    சாயம் போகாமல்
    நனைந்தது
    வானவில்

    பதிலளிநீக்கு
  7. சுவாரஸ்யம்.

    ஜீவ்ஸின் பரிந்துரையின் பேரில் சுஜாதா எழுதிய ‘ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்’ நூலையும் சமீபத்தில் வாசித்தேன். ஆன்லைனில் பிடிஎஃப் வடிவில் கிடைக்கிறது பாருங்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin