போர் ரதங்களின் பாடல்
ரதங்கள் உருளுகின்றன,
கடகடவென அதிர்கின்றன.
குதிரைகள் கனைக்கின்றன,
சீற்றத்துடன் மூச்சு விடுகின்றன.
படைவீரர்கள் இடுப்பில் வில்லும் அம்பும் கட்டி
அணிவகுத்துச் செல்கின்றனர்.
தந்தைமார், தாய்மார்,
மனைவியர் மற்றும் குழந்தைகள்
அவர்களை வழியனுப்ப ஓடி வருகின்றனர்.
சியான்-யாங் பாலமே மறைந்து போகிறது!
உடைகளைப் பற்றி இழுக்கின்றனர்,
கால்களை நிலத்தில்
சினத்துடன் உதைக்கின்றனர்.
வழியை மறித்து நிற்கின்றனர்,
தேம்பி அழுகின்றனர்.
ஐயோ, அந்த அலறல் மேல் நோக்கி எழுந்து
வானையே தாக்குகிறது.
வழிப்போக்கர் ஒருவர் கேட்கிறார்,
"இங்கு என்ன நடக்கிறது?"
ஒரு வீரர் பதிலளிக்கிறார்,
"இது எப்போதும் நடப்பதுதான்.
பதினைந்து வயதிலேயே சிலரை காவலுக்கு
வடக்கு எல்லைக்கு அனுப்புகிறார்கள்,
நாற்பது வயதிலும் சிலர்
மேற்கிலுள்ள படைத் தோட்டங்களில்
உழைக்கிறார்கள்.
ஊரை விட்டுக் கிளம்பும் போது,
கிராமத் தலைவரே அவர்களுக்கு
தலைப்பாகை சுற்றி விடுவார்.
வெள்ளை முடியுடன் திரும்பி வந்து
இன்னும் எல்லைகளை
காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லைப் பகுதிகளில்
ஒரு பெருங்கடல் நிரம்பும் அளவிற்கு
இரத்தம் ஓடுகிறது,
போரை விரும்பும் மன்னரின்
வெற்றிக் கனவுகளோ
இன்னும் முடியவில்லை.
அவர் கேட்டதே இல்லையா,
மலைகளுக்கு கிழக்கே, ஹான் நாட்டில்
இருநூறு மாவட்டங்களும்
ஆயிரக்கணக்கான கிராமங்களும் இருப்பதையும்
இப்போது அங்கே முட்செடிகளைத் தவிர
வேறெதுவும் வளரவில்லை என்பதையும்!
வலிமையான மனைவியின் கை
மண்வெட்டியையும்
கலப்பையையும் பிடித்தாலும்,
பாழடைந்த வயல்களில்
பயிர்கள் சீரற்றே வளர்கின்றன.
கின் நாட்டின் வீரர்களோ அதை விடப் பாவம்,
அவர்கள் நல்ல போராளிகள் என்பதால்
நாய்களைப் போலவும் கோழிகளைப் போலவும்
ஒரு போரிலிருந்து அடுத்த போருக்கு
விரட்டப்படுகின்றனர்.
நல்லது ஐயா, என்னதான் நீங்கள்
கருணையுடன் கேட்டிருந்தாலும்
இவ்வளவு மனக்கசப்புகளை
நான் வெளிப்படுத்தியிருக்கக் கூடாது.
ஆனால் இந்த குளிர்காலத்தையே
எடுத்துக் கொள்ளுங்கள்,
குவான்ஷி படைகளை
இன்னும் அவர்கள் கலைக்கவில்லை,
வரி வசூலிப்பவர்கள் நில வரிக்காக
அனைவரையும் நெருக்குகின்றனர்
நில வரி! -- அதற்கான பணம் எங்கிருந்து வரும்?
உண்மையில், இந்த நாட்களில்
ஒரு மகனைப் பெறுவது என்பது சாபக்கேடு,
மகள்களைப் பெறுவது எவ்வளவோ மேலானது;
மகளையாவது அண்டை வீட்டானுக்கு
திருமணம் செய்து வைத்து விடலாம்.
ஆனால் ஒரு மகன் பிறப்பது
இறப்பதற்காக மட்டுமே,
காட்டுப் புற்களுக்கு இடையில்
அவனது உடல் காணாமல் போவதற்கே.
கோகோனாரின் கரைகளை
எனது மன்னர் பார்த்திருக்கிறாரா?
அங்கே வெண் எலும்புகள் குவிந்து கிடக்கின்றன,
சேகரிக்கப் படாமல்.
புதிய ஆவிகள் முறையிடுகின்றன,
பழைய ஆவிகள் அழுகின்றன.
இருண்ட வானத்தின் கீழ்
அவற்றின் குரல்கள் மழையில் கதறுகின்றன."
*
மூலம்: ''Ballad of the Army Carts" by Du Fu
ஆங்கிலத்தில்: David Lunde
**
வெண்மதி இரவு
இன்றிரவு ஃபுஜோவில்
நிலவு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது,
உனது அறையில் நீ அதை
தனியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.
தொலைவில் இருக்கும்
நம் மகன் மகளை நினைத்து வருந்துகிறேன்-
சாங்கானில் நாம் வாழ்ந்த வாழ்வை
நினைவுகூரவோ அல்லது
நான் ஏன் வீட்டில் இல்லை என்பதை
புரிந்து கொள்ளவோ
அவர்கள் மிகவும் சிறியவர்கள்.
பனியில் நனைந்த உன் கூந்தலின் நறுமணத்தை
என்னால் உணர முடிகிறது,
நிலவொளியில் குளிர்ந்து போன
பச்சை மாணிக்கம் போன்ற உன் கரங்களை
என்னால் காண முடிகிறது.
மீண்டும் எப்போது நாம்
அந்த வெற்றுச் சாளரத்தில் சாய்ந்திருப்போம்,
அதே ஒளியில் இணைந்து,
நம் கண்ணீரின் சுவடுகள் உலர்ந்து போக?
*
மூலம்: "Moonlit Night" by Du Fu
ஆங்கிலத்தில்: Stanton Hager
*
ஆங்கிலம் வழித் தமிழில்: ராமலக்ஷ்மி
படங்கள்: AI உருவாக்கம்
*
டு ஃபு (712-770)
டு ஃபு சீனாவின் லுவோயாங் நகரின் அருகில் பிறந்தவர். 400 கவிதைகள் வரையிலும் எழுதியுள்ளார். இயற்கையை அடிப்படையாகக் கொண்டு பல கவிதைகள் படைத்தாலும் தனது சமகாலக் கவிஞர்களில் இருந்து மாறுபட்டு, சாதாரண மக்களின் துயரத்தை மையமாகக் கொண்டார். பட்டினி, பஞ்சம், வறுமை மற்றும் வீழ்ச்சியடைந்த Tang dynasty காலத்தின் கடுமையான வாழ்வியல் உண்மைகளை ஆவணப்படுத்தினார். உயர் சமூகத்தின் ஆடம்பர வாழ்க்கைக்கும் எளிய மக்களின் அவலநிலைக்கும் இடையே இருந்த பெரும் இடைவெளியை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
இராணுவ விரிவாக்கக் கொள்கைகளையும், விவசாயிகளைக் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்ப்பதையும் கடுமையாக விமர்சித்தார். போரினால் குடும்பங்கள் எவ்வாறு சிதறடிக்கப்படுகின்றன என்பதையும், அதனால் ஏற்படும் பேரழிவுகளையும் முன்னிலைப்படுத்தினார்.
வாழ்ந்த காலத்தில் இவர் அதிகம் அறியப்படாமல் போனது சோகம். டு ஃபு காலமான பிறகே இவரது கவிதைகள் பிரபலமாகி கொண்டாடப்பட்டன. இன்று வரையிலும் அவரது கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு வருகின்றன. சிறந்த கவிஞர் என்றும், இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்கு மகத்தானது என்றும் உலகம் போற்றுகிறது.
**
நன்றி பண்புடன்!
தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியாகியுள்ள
'பண்புடன்' மொழிபெயர்ப்புச் சிறப்பிதழின் அனைத்துப் படைப்புகளையும் வாசிக்க
இங்கே செல்லலாம்:
***




இரண்டு கவிதைகளும் அருமை.
பதிலளிநீக்குஇரண்டுமே ரொம்ப நன்றாகைருக்கின்றன.
பதிலளிநீக்குகீதா
இரண்டு கவிதைகளும் நன்றாக இருக்கிறது ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குநன்றாக பொழிபெயர்ப்பு செய்து இருக்கிறீர்கள்.
பண்புடன் உதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
போரில்லா உலகம் தான் எல்லோரும் விரும்புகிறார்கள்.
மகனை பெறுவது சோகம் போருக்கு அனுப்ப வேண்டும் , ம்களை திருமணம் செய்து கொடுத்து விடலாம் என்கிறார். மருமகனும் ஆண் மகன் தானே அவனும் போருக்கு போவான் தானே!
போர்வீரன் தன் மனைவியை நினைத்து பாடலும் அருமை. போரின் கொடுமையை சொல்கிறது. அவர்களுக்கு குடும்பம் இருக்கிறதே!
நானும் இன்று போரில்லா உலகம் வேண்டும் பாடல் பதிவு செய்து இருக்கிறேன்.