வியாழன், 10 ஆகஸ்ட், 2023

கம்புள் கோழி ( White-breasted waterhen ) - பறவை பார்ப்போம்

 கம்புள் கோழி

#1

ஆங்கிலப் பெயர்: White-breasted waterhen 

தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும், இந்தியத் துணைக் கண்டத்திலும் பரவலாகக் காணப்படுகின்றன. நீர்க்கோழி இனத்தைச் சேர்ந்த இப்பறவை சம்புக்கோழி, கானாங்கோழி என்றும் அறியப்படுகிறது. மேல் பாகம் அடர்ந்த நிறத்திலும், முகத்தில் தொடங்கி நெஞ்சு மற்றும் வயிறு வரையிலும் தூய வெண்மை நிறத்திலும் இருக்கும். பிற நீர்க்கோழி இனங்களை விடச் சற்றே துணிச்சலானவை. வாலை செங்குத்தாக நிமிர்த்திக் கொண்டு திறந்தவெளி சதுப்பு நிலங்களிலும், பரபரப்பான சாலையோர வடிகால்கள் அருகிலும் ஒய்யார நடை போடும். 

#2

                                                     உயிரியல் பெயர்: Amaurornis phoenicuru

அதிகாலை வேளையில் எங்கள் வீட்டுச் சுற்றுச் சுவர் வேலி மேல் கம்பீர நடை போட்டுச் செல்வது பார்க்க அழகாக இருக்கும். தோட்டத்துப் புல்வெளியில் அது உலாவுகையில் கேமராவும் கையுமாக நம் நிழல் தெரிந்தாலே குடுகுடுவென அடுத்த வீட்டுத் தோட்டத்திற்குப் போய் விடும். ஒரு  நண்பகல் நேரத்தில் தோட்டத்தைச் சுற்றி வந்த கம்புள் கோழியை அது அறிந்து விடாமல் சற்று தொலைவில் இருந்தே எடுத்த படங்கள் இவை.

#3

வேறு பெயர்கள்: சம்புக்கோழி, கானாங்கோழி, 
வெண் நெஞ்சு நீர்க்கோழி

தனியாகவோ அல்லது இணையுடனோ நீர்நிலைகளின் ஓரத்திலுள்ள நிலங்களில் மேய்ச்சலில் ஈடுபட்டிருக்கும்.  புல்வெளிகளில் பூச்சிகளைக் கால்களால் கிளறித் தேடுவதைக் காட்டிலும் பார்வையாலேயே கண்டுபிடித்து உணவாக்கிக் கொள்ளும். 

#4


புழுபூச்சிகள், வண்டுகள், சிறு மீன்கள் (அவற்றைக் கவனமாக நீரில் கழுவி உண்ணும்), முதுகெலும்பற்ற நீர் பிராணிகள் இவற்றின் உணவாகும். சில நேரங்களில் காட்டுக் கோழிகளைப் போல நீருக்குள் ஆழமாகச் சென்றும் உணவைத் தேடுவதுண்டு.

#5


அமைதியான பறவை ஆயினும் முதல் மழைக்குப் பிறகான இனப்பெருக்கக் காலத்தில் உரத்த குரலில் தொடர்ச்சியாக ஒலியெழுப்பியபடி இருக்கும். ஜூன் முதல் அக்டோபர் வரையிலும் இவற்றின் இனப்பெருக்கக் காலம் ஆயினும் உள்நாட்டின் சில இடங்களில் மாறுபடுவதுண்டு. சதுப்பு நிலத்தில் தாழ்ந்த உலர்ந்த இடமாகத் தேடிக் கூடு கட்டும். 6 முதல் 7 முட்டைகள் வரை இடும்.  இருபாலினப் பறவைகளும் முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளுக்கு உணவளித்து அவற்றைப் பராமரிக்கும். சுமார் 19 நாட்களில் முட்டை பொரிந்து குஞ்சுகள் வெளிவரும். எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள குஞ்சுகள் நீருக்குள் அடிக்கடி முழுக்குப் போட்டு எழும்.

*

விக்கிப்பீடியா ஆங்கிலத் தளம் உட்பட இணையத்திலிருந்து சேகரித்துத் தமிழாக்கம் செய்த தகவல்கள்.

**

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (173)

பறவை பார்ப்போம் - பாகம்: (103)

***


8 கருத்துகள்:

  1. என்னதான் கோழி என்று பெயர் வந்தாலும் வீட்டில் வளர்க்கக் கூடிய பறவை இல்லை போலும்!  காணாங்குருவிக்கு என்று ஒரு பாட்டு உண்டு.  கானாங்கோழிக்கு பாட்டு இல்லை!  சுவாரஸ்யமான தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீர்க்கோழி வகைகளை வீட்டில் வளர்ப்பது சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஆஹா இன்று White breasted water hen!! இங்கு நிறைய பார்க்கலாம் ஏரிகளில். நான் புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன். ஆனா இவ்வளவு கிட்டத்துல இருக்கற மாதிரி இல்லை. ஓடிடும். ..இதை வெள்ளை மார்புக் கோழின்னும் பார்த்தேன்..இணையத்தில். இதே போல இருக்கும் இன்னொன்னு pheasant tailed jacana - தூரத்திலிருந்து பார்க்கறப்ப டக்கென்று அப்படித் தோன்றும். இதுவும் நிறைய பார்க்க முடிந்தது இங்கு ஏரிகளில். அதுவும் ஏலஹங்கா கொஹிலு ஏரிகளில்

    வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் இது நிறைய பார்க்க முடிந்தது. தகவல்கள் சிறப்பு.

    படங்கள் ரொம்ப நல்லாருக்கு தெளிவாக. நீங்க pheasant jacana எடுத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். எடுத்திருந்தா பகிருங்களேன். மிக்க நன்றி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கீதா. வெண் நெஞ்சு நீர்க்கோழி என்ற பெயரும் உண்டு. தற்போது படம் மூன்றின் கீழ் பதிவில் சேர்த்து விட்டேன். நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ள pheasant tailed jacana நீண்ட வாலுடன் சற்று வித்தியாசமான தோற்றத்தில் காணப்படும். அதை நீளவால் தாழைக்கோழி என்பார்கள். பார்க்க, படமெடுக்க இன்னும் வாய்ப்புக் கிட்டவில்லை. பொதுவாக ஏரிப் பறவைகளைப் படமாக்க 500-600mm focal length கொண்ட லென்ஸுகள் அவசியம். அதன் எடை எனக்குக் கையாளச் சிரமம் ஆகையால் வாங்க யோசனையாகவே உள்ளது :).

      நீக்கு
  3. உங்க வீட்டுத் தோட்டத்து வேலியில், புல்வெளிகளில் வருகிறதா ஆஹா!

    ஆமாம் படம் எடுக்கப் போறோம்னு தெரிஞ்சா குடுகுடுன்னு ஓடிடும். நீங்க ரொம்ப அழகா எடுத்திருக்கீங்க. அதுவும் தூரத்திலிருந்து. நான் எவ்வளவு முயன்றும் எனக்குச் சிறு அளவில்தான் படம் எடுக்க முடிந்தது. ரொம்பக் கஷ்டமா இருந்தது இவற்றை எடுக்க. ஓடிடும்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இந்த கோழியை நான் மதுரையில் தங்கை வீட்டுக்கு அருகில் படம் எடுத்தேன், அதன் சத்தத்தை காணொளி எடுத்தேன், முகநூலில், பகிர்ந்து இருந்தேன். யூடி-டியூப்பில் போட்டு இருக்கிறேன். தன் இணையோடுதான் குரல் கொடுத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே தோட்டத்திற்குப் பெரும்பாலும் தனித்தே வருகின்றது. தங்கள் காணொளி பார்த்த நினைவுள்ளது. நன்றி கோமதிம்மா.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin