வியாழன், 20 ஜூலை, 2023

சாம்பல் கதிர்க்குருவி ( Ashy Prinia ) - பறவை பார்ப்போம்

 #1


ஆங்கிலப் பெயர்: Ashy Prinia, Ashy Wren-Warble
உயிரியல் பெயர்: Prinia socialis

சாம்பல் கதிர்க்குருவி 13 முதல் 14 செ.மீ வரையிலான உயரம் கொண்ட, கிளைகளைப் பற்றி அமரும் மற்றுமொரு பாஸரைன் வகை சிறு பறவை. செங்குத்தாக நிற்கும் வால் இவற்றைப் பிற வகை கதிர்க்குருவிகளிடமிருந்து எளிதில் வேறுபடுத்திக் காட்டும்.  

அடிக்கடி எங்கள் தோட்டத்திற்கு வருமாயினும் இவை மரக் கிளைகளில் அமர்ந்து அதிகம் பார்த்ததில்லை. பெரும்பாலும் புல்வெளியில் பூச்சிகளைத் தேடித் தத்தித் தாவியபடி இருக்கும். வேகமாக நகர்ந்தபடியே இருக்கும் இப்பறவையைப் படமெடுப்பது சற்று சிரமமே.

#2

சாதா கதிர்க்குருவிகளைப் போல் இவையும் வலசை செல்லாது. 

இந்திய துணைக் கண்டத்தில், இந்தியா, இலங்கை, நேபாளம், வங்காளதேசம், பூட்டான், மேற்கு பர்மா உள்ளிட்ட நாடுகளில், நகர்புறத் தோட்டங்களில் பரவலாக வசிக்கின்றன. 

ஐந்து முதல் ஐந்தரை அங்குல உயரத்தில், குறுகலான வட்ட வடிவ சிறகுகளையும், கருப்பு நிறப் புள்ளிகளைக் கொண்ட மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்திலான நீண்டு நேராக நிற்கும் வாலினையும் கொண்டவை. பெரும்பாலான நேரத்தை நிலத்தில் கழிக்கும் இவற்றின் கால்கள் தத்தித் தாவ ஏற்றவாறு உறுதியாக இருக்கும். குட்டையான கருப்பு நிற அலகைக் கொண்டவை. தலையின் மேற்பாகம் சாம்பல் நிறத்திலும், உடலின் அடிப்பாகம் வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். 

#3


இவை உலர்ந்து விரிந்த மேய்ச்சல் நிலங்களிலும், திறந்தவெளிக் கானகங்களிலும், நகர்ப்புற தோட்டங்களிலும்,  குறுங்காடுகளிலும் காணப்படுகின்றன. இலங்கையில் தாழ்வானப் பிரதேசங்களில் காணப்படுகின்றன.  அதே நேரம் இவை 1600 மீ உயரங்கொண்ட மலைப் பிரதேசங்களிலும் காணப்படுகின்றன. மேற்கு இந்தியாவில் தொடங்கி கிழக்கே பர்மா வரையிலும் உள்ள உலர்ந்த பாலைவனங்களில்  இவை காணக் கிடைப்பதில்லை.

இவைத் தம் கூடுகளை நிலத்துக்கு அண்மையில் நீண்டு உயர்ந்த புற்களில் அமைக்கும். இவை 3 முதல் 5 முட்டைகளை வரை இடும்.

#4


சாதா கதிர்க்குருவிகள் போல இவையும் பூச்சியுண்ணிகளே. இவற்றின் பாடல் ட்ச்சப்-ட்ச்சப்-ட்ச்சப் அல்லது ஜீத்-ஜீத்-ஜீத் எனத் தொடர்ச்சியாகக் கேட்கும். மற்றுமொரு அழைப்பு மூக்கால் பாடுவதைப் போல் டீ-டீ-டீ என ஒலிக்கும். சிறகுகளைப் படபடவென அடித்துப் பறக்கையில் எழும்பும் ஒலி மின்சாரப் பொறி எழுப்பும் ஒலியை ஒத்ததாக இருக்கும். ஆனால் அது இறக்கைகளினால் எழும்பும் ஒலியன்று, தன் அலகினால் கதிர்க்குருவி எழுப்பும் ஒலி என ஒரு ஆய்வாளார் கண்டறிந்து குறிப்பிட்டுள்ளார்.

வலசை செல்லாத இப்பறவைகள் வருடத்திற்கு இருமுறை இறகு உதிர்க்கும். இறகுதிர்க்கும் முதல் பருவம் இளவேனிற்காலமான ஏப்ரல் - மே மாதங்களிலும், அடுத்த பருவம் இலையுதிர்க்காலமான அக்டோபர் - நவம்பர் மாதங்களிலும்.

இவைத் தமது கூடுகளை நிலத்துக்கு அண்மையில் நீண்டு உயர்ந்த புற்களில் அமைக்கும். விதம் விதமாக இவை அமைக்கும் கூடுகள் பற்றி பல விவரணைகள் அறியக் கிடைக்கின்றன. குறிப்பாகப் பல இலைகளைக் கொண்டு தைக்கப்பட்ட  கிண்ண வடிவ மெல்லியக் கூடு, புல் தண்டுகளைக் கொண்டு பின்னப்பட்ட நீள்சதுர வடிவ மணிபர்ஸ் வடிவிலான கூடு, புற்களால் ஆன பந்து வடிவிலான உறுதியற்ற மெல்லியக் கூடு ஆகியவை விவரிப்பில் உள்ளன. பெரும்பாலான கூடுகள் இழைகளால் நெய்யப்பட்ட இலைகளுடன், உள்ளே முடிகள் விரிக்கப்பட்டு, ஒரு பக்கம் நுழைவாயில் கொண்டதாக இருக்கும்.

இவை 3 முதல் 5 வரை பளபளப்பான நீள்வட்ட வடிவிலான முட்டைகளை இடும்.  12 தினங்கள் அடைகாக்கப்பட்டப் பிறகு குஞ்சுகள் வெளிவரும். இடத்துக்கு இடம் இனப்பெருக்கக் காலம் வேறுபடும். 

ஓரிணை வழக்கம் கொண்டவை. ஆண், பெண் இருபாலினப் பறவைகளும் அடை காக்கும், இரை தேடிக் குஞ்சுகளுக்கு ஊட்டி விடும். குளிர்காலத்தில் கூட்டினில் குஞ்சுகளோடு அதிக நேரத்தைச் செலவழிக்கும். 

பூனை போன்ற விலங்குகளால் கூட்டுக்கு ஆபத்து வருகையில் பெரிய பறவைகள் காயம்பட்டதைப் போல நடிக்கும் எனக் கூறப்படுகிறது. அப்படி நடிப்பதால் எதிரிகள் விட்டுச் சென்று விடுவார்களா என்ன, தெரியவில்லை.

சாம்பல்-வயிற்றுக் குயில்கள் சாம்பல் கதிர்க்குருவிகளின் குஞ்சுகளை வளர்க்கும் ஒட்டுண்ணிப் பறவைகள் என்றும் தெரிய வருகிறது. 

*

*விக்கிப்பீடியா ஆங்கிலத் தளம் உட்பட இணையத்திலிருந்து சேகரித்துத் தமிழாக்கம் செய்த தகவல்கள்.

**
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (169)
பறவை பார்ப்போம் - பாகம்: (100)

***

8 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தகவல்கள்.  இவ்வளவு தாழ்வாக கூடுகள் அமைத்தால் பாதுக்காப்பு இருக்காதே..  எப்படி சமாளிக்கின்றன?  காயம் பட்டால் போல் நடித்தால் என்ன லாபமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உயரமான கிளைகளில் இவை உட்கார்ந்தே நான் பார்த்ததில்லை. எங்கே கூடு அமைக்கப் போகின்றன? தாழ்ந்த இடமே இவற்றுக்கு வசதியானதாகத் தோன்றுகிறது போலும். அதனாலேயே பிற விலங்குகளிடமிருந்து ஆபத்தும் எளிதில் வருகிறது.

      /என்ன லாபமோ/
      நானும் இதையே சிந்தித்தேன், அப்படி நடிப்பதால் எதிரிகள் விட்டுச் சென்று விடுவார்களா என்னவென்று. இந்த வரியைப் பதிவிலும் சேர்த்து விட்டேன்:).

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஆங்கிலப் பெயர் தெரியும் தமிழ்ப்பெயர் தெரிந்து கொண்டேன். படங்களும் சூப்பர். இந்தப் பறவை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் படங்கள் எடுக்க முடியவில்லை. நீங்கள் சொல்லியிருப்பது போல் தத்தி தத்தி நகர்ந்து கொண்டே இருக்கும். ..

    தகவல்களும் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி, ராமலஷ்மி!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. இப்போது மூன்று மாதங்களுக்கு முன் கதிர் குருவியை மகள் ஊரில் படம் எடுத்து இருக்கிறேன். மாயவரத்தில் வீட்டுக்குள் வந்து மாட்டி கொண்டு போக வழி தெரியாமல் வந்து முட்டி மோதியதை படம் எடுத்து பகிர்ந்து இருக்கிறேன் முன்பு.
    இந்த பறவையை பற்றிய பல செய்திகள் அறிந்து கொண்டேன் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்தில் எடுத்த படங்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தீர்களா? தங்கள் வீட்டுக்குள் மாட்டிக் கொண்டது பற்றிய பதிவை பார்த்த நினைவு இருக்கிறது. நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. இவை பற்றி தெரிந்து கொண்டோம்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin