Thursday, July 18, 2019

வல்லூறு ( Shikra ) - பறவை பார்ப்போம்: பாகம் (42)

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 55
#1
வல்லூறு (பெண் பறவை)
ஆங்கிலப் பெயர்: Shikra
ல்லூறுவின் ஆங்கிலப் பெயரான 'ஷிக்ரா' அல்லது 'ஷிகாரா' என்பது இந்தி மொழியில் இருந்து வந்ததாகும். இந்தி வார்த்தையின் மூலம் உருது மொழியில் “வேட்டைக்காரன்” என அர்த்தம் கொண்ட 'ஷிகாரி' என்பதாகும். 

ஊனுண்ணிப் பறவைகளில் சற்றே சிறிய வகையைச் சேர்ந்தது வல்லூறு.
Accipitridae குடும்பத்தைச் சேர்ந்த இவை ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் பரவலாகக் காணப்படுகின்றன. குறுச்சிறகுடைய வல்லூறு வகையைச் சார்ந்ததான Little banded goshawk எனவும் இவை அறியப்படுகின்றன. தோற்றத்தில் சிட்டுப் பருந்தினை ஒத்திருக்கும். சிறகடிப்பும் வழுக்கினாற்போல் வானில் ஏறி இறங்குதலும் கூர்மையான இரட்டைச் சுர அழைப்பும் கூட பருந்தினைப் போலவே இருக்கும். இவற்றின் அழைப்பை இரட்டைவால் குருவிகள் சில நேரங்களில் இவற்றைப் போலவே பாவனையாகக் குரல் எழுப்புவதுண்டு.

வல்லூறுகள் 26 முதல் 30 செமீ (ஓரடி) வரையிலான நீளம் கொண்டவை. வட்ட வடிவ குறுஞ்சிறுகுகளையும், ஒடுங்கிய நீண்ட வால்களையும் கொண்டவை. வளர்ந்த ஆண் பறவைகள் செம்பழுப்புக் கோடுகளைக் கொண்ட வெண்ணிற அடிப்பாகத்தையும், சாம்பல் நிற மேல் பாகத்தையும் கொண்டவை. கீழ் வயிறில் கோடுகள் குறைவாகவும் முழு வெண்மையாகவும் இருக்கும். ஆண் பறவைகளின் கண்கள் சிகப்பாக இருக்கும்.

#2
வல்லூறு (ஆண் பறவை)
உயிரியல் பெயர்:
 Accipiter badius

[மேலிருக்கும் படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தோட்டத்தில் அதாவது தரைத் தளத்திலிருந்து சுற்றுச்சுவரை ஒட்டியிருந்த மிக உயரமான யூகலிப்டஸ் மரத்தில் ஆண்பறவை அமர்ந்திருந்த போது 55-200 mm லென்ஸ் உபயோகித்து எடுத்தது. மாலை வெயிலின் நிழலில் கண்களின் சிகப்பு தெரியவில்லை.]

#3


பெண் பறவைக்கோ கண்கள் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். தோற்றமும் ஆண்பறவையைப் போல் இருக்காது. உடல் பழுப்பு மற்றும் சாம்பல் கலந்த நிறத்தில் வெள்ளைத் தீற்றல்களுடன் இருக்கும். வால்களில் குறுக்குக் கோடுகள் இருக்கும். 

[பெண்பறவையின் படம் சென்ற மாதம் 24-120 mm லென்ஸ் பயன்படுத்தி எடுத்தது என்றாலும் தெளிவுக்குக் காரணம் சற்று அருகாமையில் காட்சி தந்ததனால்தான். அரை நிமிடத்துக்கும் குறைவான நேரமே இவை அபூர்வமாக வந்து முருங்கை மரத்தில் இளைப்பாறிச் செல்லும். இரண்டு முறைகள் எடுக்க முயன்று அவை பறந்து போய் விட ஏமாற்றம் அடைந்திருக்கிறேன். மூன்றாவது முறை கிடைத்தது வெற்றி :) ].

இதன் அழைப்பு ப்பீ..- வ்வீ.. என ஒலிக்கும். முதல் சுரம் ஓங்கியும் இரண்டாவது நீளமாகவும் இருக்கும். பறக்கும் போது கூர்மையாக அதே நேரம் சுருக்கமாக கிக்-கீ .... கிக்-கீ என ஒலி எழுப்பும்.


ந்தியாவில் இதன் இனப்பெருக்கக் காலம் மார்ச் முதல் ஜூன் வரையிலும். இதன் கூடு காக்கைகளின் கூட்டைப் போல புற்களால் வரிவரியாக வட்ட வடிவில் நெய்யப்பட்டிருக்கும். ஆண், பெண் இரு பறவைகளுமே கூட்டுக்கானச் சுள்ளிகளைத் தேடி எடுத்துக் கால்களில் இடுக்கிச் செல்லும். காக்கைகளைப் போலவே உலோகக் கம்பிகளையும் பயன்படுத்தும். பொதுவாக ஒரு முறைக்கு 3-4 முட்டைகள் வரை இடும். ஒருவேளை முட்டைகள் அகற்றப்பட்டால் வேறு முட்டைகளை இடும் எனத் தெரிகிறது. ஒரு ஆய்வாளர் சிலநேரங்களில் இவை 7 முட்டைகள் வரையிலும் கூட இடும் என்கிறார். முட்டைகள் வெளிர் நீலத்தில், அகன்ற பாகத்தில் சாம்பல் புள்ளிகளைக் கொண்டும், குறுகிய பாகத்தில் கருப்பாகவும் இருக்கும். 18 முதல் 21 நாட்கள் வரையிலும் அடை காக்கும்.


ல்லூறுகள் காடுகள், விளைநிலங்கள் மற்றும் நகர்புறப் பகுதிகளை வாழ்விடங்களாகக் கொண்டவை. தனியாகவோ அல்லது ஜோடியாகவோ தென்படும். வல்லூறுகள் பறப்பதைப் பார்த்தாலே சிறுபறவைகள் பதறிச் சிதறும். அணில்களும் அச்சமுற்று ஓடி மறையும். எலிகள், அணில்கள், சிறுபறவைகள், ஓணான்கள், பல்லிகள், பூச்சிகள் இவற்றோடு சில நேரங்களில் சிறு பாம்புகளையும்  இரையாக உட் கொள்ளும் வல்லூறுகள். 

வல்லூறுகளிடமிருந்து தப்பிக்க சின்னப் பறவைகள்இலை தழைகளுக்குள் பதுங்கிக் கொள்ளும். சிறு நீல நிற மீன்கொத்திகள் தண்ணீருக்குள் பாய்ந்து தம்மை மறைத்துக் கொள்ளும். காட்டுச் சிலம்பன்கள் (Jungle Babbler or Seven sisters) கூட்டமாக ஒன்று சேர்ந்து வல்லூறுவைத் துரத்துவதுண்டு.

ருந்து வளர்ப்பவர்களுக்கு (குறிப்பாக  இந்தியாவிலும் பாக்கிஸ்தானிலும்) வல்லூறுகள் மிகப் பிடித்தமான பறவை. ஏனெனில் இவை பழக்குவதற்கு எளிதானவை. இவற்றை விட விலை உயர்ந்த பருந்துகளுக்கு வல்லூறுகளை அனுப்பி இரைகளைக் கொண்டு வரச் செய்கிறார்கள். வல்லூறுகள் இலாவகமாக பெரிய பறவைகளையும் கவ்விக் கொண்டு வரும் திறமை பெற்றவை. கெளதாரிகள், காக்கைகள் மட்டுமின்றி மயில் குஞ்சுகளையும் பற்றித் தூக்கி வந்து விடும் ஆற்றல் பெற்றவை.


**

தகவல்கள்: விக்கிப்பீடியா பக்கத்திலிருந்து தமிழாக்கம் செய்தவை.

படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. பாகம் 54

***

13 comments:

 1. சிறப்புப் பதிவு

  ReplyDelete
 2. வணக்கம்
  ஒவ்வொரு பறவை பற்றியும் நல்ல விளக்கம் தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. சுவாரஸ்யமான தகவல்கள்.

  ReplyDelete
 4. வல்லூறு கண்டுகொண்டோம்.

  ReplyDelete
 5. வல்லூறை நானும் தற்செயலாக படம் எடுத்து பகிர்ந்தேன்.
  நான் எடுத்தது பெண் பறவை என்று தெரிகிறது.
  ஆண் பறவை, பெணபறவை இரண்டும் படங்களும் அழகு.

  தகவல்களும் அறிந்து கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. பெண் பறவைக்கும் ஆண் பறவைக்குமான வித்தியாசம் படங்கள் எடுத்த பின் தகவல்களைத் தேடும் போதே அறிந்து கொண்டேன். நன்றி கோமதிம்மா.

   Delete
 6. ஷிகாரி - தலைநகரிலும் இவ்வகைகளைப் பார்க்க முடியும். படங்கள் எடுக்க முடிந்ததில்லை. ராஜ்பத் பகுதியில் சில சமயங்களில் இவற்றைப் பார்க்க முடியும்

  அழகான படங்கள். தகவல்களும் சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. இங்கே அபூர்வமாகவே தென்படுகின்றன.

   நன்றி வெங்கட்.

   Delete
 7. அவ்வளவு எளிதில் காணக்கிட்டாத பறவைகள் எல்லாம் உங்கள் தோட்டத்துக்கு வருகை தருகின்றன என்பது வியப்பும் மகிழ்வும் தருகிறது. தகவல்கள் சுவாரசியம்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin