சனி, 6 டிசம்பர், 2025

தேன் பருந்து ( Crested Honey-Buzzard ) - பறவை பார்ப்போம்

 

ஆங்கிலப் பெயர்கள்: Crested honey buzzard; Oriental Honey Buzzard
உயிரியல் பெயர்Pernis ptilorhynchus

க்சிபிட்ரிடே (Accipitridae) குடும்பத்தைச் சேர்ந்த, நடுத்தர அளவு முதல் பெரிய அளவு வரையிலான வேட்டைப் பறவை. இவ்வகையான (Hawk) கொன்றுண்ணிப் பறவைகளின் பொதுப் பெயர் தமிழில் ‘பாறு’ என அறியப்படுகிறது. அதாவது 'பாறுக் குடும்பம்' அல்லது 'கழுகு, பருந்து குடும்பம்' என்று குறிப்பிடப்படுகிறது.

#2

தேன் பருந்து ஆசியாவிற்கே உரிய தனிப்பட்ட இனமாகும். கோடைகாலத்தில் இனப் பெருக்கத்திற்காக சைபீரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடம் பெயர்கின்றன. பின்னர் குளிர்காலத்தை தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் செலவிடுகின்றன. இந்தப் பகுதிகளில் ஆண்டு முழுவதும் வசிக்கும் பறவைகளும் உள்ளன.

திறந்த வெளிகளுடன் கூடிய அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிகளை விரும்புகின்றன. கடல் மட்டத்திலிருந்து 1,800 மீட்டர் (5,900 அடி) உயரம் வரை காணப்படுகின்றன.

ப்பறவை தேன் கூடுகளிலிருந்து தேனீக்கள் மற்றும் குளவிகளின் லார்வாக்களை (புழுக்களை) எடுத்து உண்பதால் இதற்கு "தேன் பருந்து" என்ற பெயர் வந்தது. மேலும் இதன் உடல் மேல் பரவியுள்ள தூவல்களின் நிறத்தைக் கொண்டும் இப்பெயர் வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தேன் கூடுகளிலுள்ள புழுக்களை மட்டுமின்றி குளவிகள் மற்றும் வண்டுகளையும் விரும்பி உண்கின்றது. சில நேரங்களில் சிறு பறவைகள், ஊர்வனவாகிய முதுகெலும்பிகள், தவளைகள் மற்றும் பூச்சிகளையும் உண்பதுண்டு.

#3

இந்த இனம் அதன் தனித்த உணவுமுறைக்கு ஏற்ப சில சிறப்பு உடல் அமைப்புகளைக் கொண்டிருப்பது சுவாரஸ்யம்:
*நிலத்தடியில் கூடுகளைத் தேடுவதற்கு நீண்ட தலை அமைப்பு.
*குளவி மற்றும் லார்வாக்களை தேனடையின் சிறு அறைகளிலிருந்து எடுப்பதற்கு நாக்கில் ஒரு பள்ளம்.
*குளவிகளின் கொட்டுதல் மற்றும் தாக்குதல்களிலிருந்து தம்மைப் பாதுகாக்க தலை மற்றும் கழுத்தில் குறுகிய, அடர்த்தியான இறகுகள்.

#4

பொதுவாக தனித்தோ அல்லது ஜோடியாகவோ உயரப் பறப்பதை அல்லது மர உச்சிகளில் அமர்ந்திருப்பதைக் காண முடியும். இதன் உடல் நீளம் 52 முதல் 68 செ.மீ வரையிலும்; சிறகு விரிப்பு 115 முதல் 155 செ.மீ வரையிலும்; மற்றும் எடை 750 -1,490 கிராம் வரையிலும் இருக்கும். இரு பாலினமும் ஒரே தோற்றத்தைக் கொண்டவை எனினும் சிறு வித்தியாசங்கள் உண்டு. ஆண் பறவையின் தலை நீல-சாம்பல் நிறத்திலும், கருவிழி சிவப்பு அல்லது பழுப்பிலும் இருக்கும். அதே சமயம் பெண் பறவையின் தலை பழுப்பு நிறமாகவும், கருவிழி நல்ல மஞ்சள் நிறத்திலும் இருக்கும். 

[எனக்கு இந்தத் தகவல் படத்திலுள்ளது பெண் பறவை என அறிந்து கொள்ள உதவியது. சில தினங்களுக்கு முன்னர்தாம் முதன் முறையாக இப்பறவையை எங்கள் தோட்டத்தில் பார்க்க வாய்த்தது.]

மரங்கள் அடர்ந்த காடுகளைத் தமது இனப்பெருக்கத்திற்கு தேர்ந்தெடுக்கின்றன. இனப்பெருக்கக் காலம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலும். இந்தியாவில் மட்டும் பிப்ரவரி. குச்சிகளைக் கொண்டு கூடுகளை சமதளமாக அமைத்து மேலே இலைகளைப் பரப்புகின்றன. பொதுவாக இரண்டு முட்டைகள் வரை இடும். ஆண், பெண் இருபாலினப் பறவைகளும் அடைகாப்பது, குஞ்சுகளுக்கு உணவளிப்பது போன்ற பெற்றோருக்கான கடமையை இணைந்து ஆற்றுகின்றன.

தேன் பருந்து ஜாவா தீவிலிருந்து டச்சு விலங்கியல் நிபுணர் C.J. டெம்மிங்க்கால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் இதை 1821_ல் 'Falco ptilorhynchus’ எனச் சித்தரித்து பெயரிட்டார். 1874_ல் வெளியிடப்பட்ட பிரிட்டிஷ் மியூசியம் பெயர் வரிசைப் பட்டியலில் (catalogue) இந்த இனத்தின் 18 மாதிரிகள் இருந்தன.

Pernis ptilorhynchus எனும் உயிரியல் பெயருடனான தற்போதைய தேன் பருந்து ஆறு உப இனங்களைக் கொண்டுள்ளது.

**

இணையத்தில் மற்றும் சலீம் அலி எழுதிய “The Book Of Indian Birds" புத்தகம் ஆகியவற்றில் சேகரித்துத் தமிழாக்கம் செய்த தகவல்கள்.

**

பறவை பார்ப்போம் - பாகம்: 135
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 222

**

2 கருத்துகள்:

  1. தேன்பருந்து பேர் காரணம், பறவையை பற்றிய விளக்கமான செய்திகள் படங்கள் எல்லாம் மிக அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin