திங்கள், 27 ஜனவரி, 2020

இறக்கைகள் அர்த்தம் பெறட்டும் - ‘தி இந்து’ காமதேனு, ‘நிழற்சாலை’யில்..

26 ஜனவரி 2020, இதழில்..
இறக்கைகள் அர்த்தம் பெறட்டும்

கிளிகள் வேடிக்கையானவை
அதிக சத்தமிட்டு ஒன்றையொன்று
திட்டிக் கொள்ளும் அல்லது
அமைதியாகக் கொஞ்சிக் கொள்ளும்.
சன்னலில் நம் நிழலாடினால்
சட்டெனப் பறப்பவை
கொய்யாக் கனிகளைக்
கொத்தியுண்ணும் போது மட்டும்
எவரையும் சட்டை செய்யாது.
முருங்கை மரத்தின் மேல் கிளைகளில்
எட்டிப் பறிக்க இயலாமல்
விட்டப் போன 
உலர்ந்த காய்களைக் கண்டால்
குதூகலம் கொள்ளும்.
பல கரணங்கள் அடித்து
காய்களைப் பிளந்து
ஒவ்வொரு விதையாக
சுவைத்துத் தள்ளும்.

ன்றும் கிளிகளின் கூக்குரலில்
ஆரம்பமாயின
வேடிக்கையும் வித்தைகளும்.
ஒவ்வொரு கிளியின் கீச்சொலியிலும்
நிரம்பித் ததும்பிய சுதந்திரத்தின் வீச்சு
வான் எழும்பி
மேகங்களை முட்டித் தள்ளுகிறது.
வாய்க்கட்டும்
மற்றுமோர் ஜென்மத்திலாவது
முருங்கை மர வாசம்,
எப்போதோ
நண்பர் வீட்டுச் சன்னல் கம்பியில்
கரணமிட்டு வித்தை காட்டிய
சிறகொடிக்கப்பட்ட
வளர்ப்புக் கிளிக்கும்,
எங்கேயோ
கோயில் திருவிழாவில்
வருவோர் போவோருக்கு
வருங்காலத்தைச் சொல்ல
கடவுளர் சீட்டுக்களை
எடுத்துப் போட்ட
சீக்குக் கிளிக்கும்.
***

[வெளியீட்டுக்காக சுருக்கப்பட்ட கவிதையின் முழு வடிவத்தைப் பகிர்ந்துள்ளேன்.]

மூன்றாவது முறையாக எனது கவிதைக்கான படம் நிழற்சாலை கவிதைப் பக்கத்தின் படமாக..! 

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
*மனிதர்களற்ற வெளியில்.. https://tamilamudam.blogspot.com/2020/01/blog-post_17.html
*ஆகாசப் பறவைகள் https://tamilamudam.blogspot.com/2019/04/blog-post_15.html


நன்றி காமதேனு!
***

12 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
    கவிதையும், படமும் அழகு.

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு படைப்பையும் சுதந்திரமாக வாழ வழிவிடுவதும், அதைப் பார்த்து இரசிப்பதுமானதொரு உலகம் வாய்த்தால் எத்தனை நன்றாக இருக்கும்.
    இயற்கையை நேசிக்கும் மனதின் வார்த்தைகளாகக் கவிதை வரிகள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. கவிதை அருமை.  கிளிகள் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம்.

      தகவல்கள்.. கண்ணால் ரசித்தக் காட்சிகள்:)

      நீக்கு
  4. மனம் தொட்ட கவிதை. படம் பிரமாதம். காமதேனுவில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. படம், கவிதை இரண்டுமே அழகு.

    காமதேனு வெளியீடு - வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு