செவ்வாய், 1 ஜூன், 2021

சொல்வனம் இதழ் 247 - பாப்லோ நெருடா ஸ்பானிஷ் கவிதைகள் (5 - 8)

  

நான்கு கவிதைகளின் தமிழாக்கம்..

கவிதை


ப்போது அந்த வயதினில் ... கவிதை
என்னைத் தேடி வந்தடைந்தது. எனக்குத் தெரியாது,
பனிக்காலத்தில் இருந்தா அல்லது நதியில் இருந்தா,
எங்கிருந்து அது வந்தது என எனக்குத் தெரியாது.
எப்படி அல்லது எப்போது என எனக்குத் தெரியாது,
அல்ல அவை குரல்கள் அல்ல, 
அவை வார்த்தைகள் அல்ல, மெளனமும் அல்ல,
ஆனால் எனக்கு அழைப்பாணை கிடைத்த வீதியிலிருந்து,
இரவின் கிளைகளிலிருந்து,
எதிர்பாராமல் மற்றவரிடமிருந்து,
கட்டுக்கடங்காத நெருப்பிற்கு மத்தியிலிருந்து,
அல்லது தனியாகத் திரும்பி வரும்போது,
நான் அங்கே முகமற்றவனாக இருந்தபோது
என்னை அது தொட்டது.

எனக்கு என்ன சொல்வததென்றே தெரியவில்லை,
என் வாய்க்கு அதை எப்படி அழைப்பதென்று புரியவில்லை,
என் கண்கள் பார்வையற்றுப் போயின, ஆயினும்
என் ஆன்மா எதையோ உணரத் தொடங்கியிருந்தது,
மனக்கலக்கம் அல்லது மறந்து போன இறக்கைகள், 
அந்த நெருப்பை அடையாளம் கண்டு
நான் எனக்கான பாதையை ஏற்படுத்திக் கொண்டேன், 
வலுவற்ற முதல் வரியை நான் எழுதினேன்
தெளிவற்ற, சாரமற்ற, முற்றிலும் அபத்தமான,
ஒன்றும் அறியாதவனின் பரிசுத்த ஞானத்தை.,
அப்போது திடீரென சொர்க்கம் நெகிழ்ந்து திறக்க 
கண்டேன் நான், 
கிரகங்களை,
நடுங்கும் தோப்புகளை,
துளைக்கப்பட்ட நிழல்களை,
தொடுக்கப்பட்டப் புதிர்களை,
நெருப்பு மற்றும் மலர்களை,
குளிர்ந்த இரவு மற்றும் பிரபஞ்சத்தை.

அற்பப் பிறவியான நான்,
அபாரமாய் ஒளிரும் வெறுமையைக் குடித்தவனாக,
விளங்காத மர்மத்தின் உருவத்தை ஒத்தவனாக,
முற்றிலும் நான் 
நரகத்தின் ஓர் அங்கமென உணர்ந்தவனாக,
காற்றோடு என் இதயம் நொறுக்கிச் சிதற
உருளுகின்றேன் நட்சத்திரங்களுடன்.
*
மூலம்:  "Poetry" By Pablo Neruda
**

ஒரு நூறு காதல் ஈரேழ்வரிப்பாக்கள்: (XVII)


நீ ஒரு கடல் ரோஜா, கோமேதகம், அல்லது 
தணலாய்ப் பெருகும் செம்மலர்களால் ஆன அம்பு என்பதற்காக, நான் உன்னை நேசிக்கவில்லை.
ரகசியமாக, நிழலுக்கும் ஆன்மாவுக்கு இடையிலாக,
குறிப்பிட்டப் புரியாத விஷயங்களை ஒருவன் நேசிப்பதைப் போல நான் உன்னை நேசிக்கிறேன்.

ஒரு செடி மலர்ந்திடாது ஆனால் மறைவாக, தனக்குள் மட்டும், பூக்களின் ஒளியைக் ஏந்திக் கொண்டிருப்பதைப் போல 
நான் உன்னை நேசிக்கிறேன் 
பூமிக்குள் இருந்து கிளம்பும் அந்த இறுக்கமான நறுமணமாக
என் உடலுக்குள் மங்கலாக வசிக்கும், உன் அன்புக்கு நன்றி.

நான் உன்னை நேசிக்கிறேன், எப்படி, அல்லது எப்போது, அல்லது எங்கிருந்து என்பதை அறியாமல்.
நான் நேரடியாக உன்னை நேசிக்கிறேன் சிக்கல்களோ செருக்கோ இன்றி:
நான் இவ்வாறாக உன்னை நேசிக்கிறேன் ஏனெனில் வேறெவ்வாறாகவும் எனக்கு நேசிக்கத் தெரியவில்லை,
இந்த வகையைத் தவிர்த்து வேறெப்படியுமின்றி,
வெகு நெருக்கத்தில் எனது மார்பின் மேலுள்ள உனது கரம் என்னுடையதாக,
வெகு நெருக்கத்தில் உன் கண்கள் எனது கனவுகளுடன் மூடிக் கொள்ள.
*
மூலம்: "One Hundred Love Sonnets (XVII)" By Pablo Neruda
**

சில விஷயங்களை நான் தெளிவு படுத்துகிறேன்


நீங்கள் கேட்கப் போகிறீர்கள்: எங்கே லைலாக் பூக்கள்?
எங்கே  பூவிதழ்களைப் பற்றிய நுண்பொருள் ஆய்வு?
மற்றும் மழை மீண்டும் மீண்டும் சிதற விடும் வார்த்தைகளும்
அவற்றில் துளையிடப்பட்டத் துவாரங்களும் பறவைகளும்?
எல்லாவற்றைப் பற்றிய செய்திகளையும் நான் சொல்கிறேன்.

நான் ஒரு புறநகரில் வசித்தேன்,
மணிகளையும் கடிகாரங்களையும் 
மரங்களையும் கொண்ட
மேட்ரிட்டைச் சேர்ந்த புறநகர்.

அங்கிருந்து உங்களால் 
கேஸ்டீல் மாநிலத்தின் 
வறண்ட முகத்தைக் காணமுடியும்.
எனது வீடு 
பூக்களின் வீடென அழைக்கப்பட்டது,
ஏனெனில் 
ஒவ்வொரு விரிசல்களிலிருந்தும்
ஜெரானியம் வெடித்துப் பூத்திருந்தன: அது
நாய்களையும் குழந்தைகளையும் கொண்ட
பார்க்க அழகானதொரு வீடு.

நினைவிருக்கிறதா, ரால்?
ஓ, ரஃபேல்? ஃபெடெரிகோ, உனக்கு நினைவிருக்கிறதா
மண்ணுக்குள்ளிருந்து பூத்து
ஜூன்மாத ஒளியில் மூழ்கிய என் உப்பரிகை மலர்களை?
சகோதரனே, என் சகோதரனே!
அனைத்தும் உரத்து ஒலித்தன பலத்த குரல்களில்,
உப்பு விற்பனை, குவிந்து கிடந்த ரொட்டி,
சிலையைச் சுற்றி எனது ஆர்குலஸ் புறநகரின் கடைகள்:
கரண்டிகளில் எண்ணெய் ஒழுக,
கால்களாலும் கைகளாலும் வீங்கிய வீதிகள்,
மீட்டர்கள், லிட்டர்கள், 
கூர்மையான வாழ்வின் அளவுகள்,
அடுக்கப்பட்டிருந்த மீன்கள்
பருவநிலை தடுமாற
குளிர்ந்த சூரியன் ஒளிரும் கூரைகளின் இழையமைப்பு
நேர்த்தியான தந்த நிற உருளைக் கிழங்குகள்
அலை மேல் அலையாக கடலில் உருளும் தக்காளிகள்.

ஒருநாள் காலையில் அவை எல்லாமே  எரிந்து கொண்டிருந்தன,
சமவெளிகளையும் தரிசுநிலங்களையும் சொந்தமாக்கிக் கொண்ட  கொள்ளைக்காரர்கள்
மோதிரங்களையும் சீமாட்டிகளையும் கொண்டக் கொள்ளைக்காரர்கள்
ஆசிகளை அள்ளித் தெளிக்கும் கறுப்புத் துறவிகளைக் கொண்டக் கொள்ளைக்காரர்கள்
குழந்தைகளைக் கொல்ல வானத்திலிருந்து வந்தவர்கள்
தெருக்களில் ஓடின குழந்தைகளின் இரத்தம்
எந்தக் குழப்பமுமின்றி, குழந்தைகளின் இரத்தமாகவே.

நரிகளே இகழக் கூடிய நரிகள்,
நெருஞ்சி முட்கள் கடித்து உமிழ விரும்பும் கற்கள்,
நச்சுப் பாம்புகளே வெறுத்தொதுக்கித் தள்ள விரும்பும் நச்சுப் பாம்புகள்!

கண்டேன் நேருக்கு நேராக 
ஸ்பெயின் நகரத்தின் குருதியை
செருக்கும் கத்திகளுமாக 
ஒரே அலையில்
உங்களை மூழ்கடிக்க வல்லதாக.

சதிகாரத் தளபதிகளே:
மரித்துப் போன என் மனையைப் பாருங்கள்,
உடைந்து போன ஸ்பெயின் நகரைப் பாருங்கள்:
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 
எரியும் உலோகம் உருகி ஓடுகிறது
ஸ்பெயினில் வெளிவருகிறது
ஒவ்வொரு இறந்த குழந்தையிடத்திலிருந்தும்
துப்பாக்கியின் கண்கள்,
குற்றம் புரிந்த ஒவ்வொரு தோட்டாவில் இருந்தும் பிறக்கின்றன 
ஒரு நாள் உங்கள் நெஞ்சைக் குறிவைக்கவிருக்கும் இலக்குகள்.

நீங்கள் கேட்கிறீர்கள்: ஏன் அவனது கவிதைகள் பேசுவதில்லை
கனவுகளைப் பற்றியும் இலைகளைப் பற்றியும்
அவனது சொந்த ஊரின் மகத்தான எரிமலையைப் பற்றியும்?

வந்து பாருங்கள் வீதிகளில் ஓடும் இரத்தத்தை
வந்து பாருங்கள்
வீதிகளில் ஓடும் இரத்தத்தை.
வந்து பாருங்கள் வீதிகளில் ஓடும் 
இரத்தத்தை!
*
மூலம்:  "I'm Explaining A Few Things" By Pablo Neruda
**

நான் அவர்களுக்கு நடுவே இருந்தேன்


க்கள் செங்கொடிகளை ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்
கற்களால் தாக்கிய அவர்களுக்கு நடுவே நான் இருந்தேன்,
இடி போன்ற அணிவகுப்பில் 
துயரங்கள் ஓங்கி ஒலித்த பாடல்களில்,
எப்படிப் படிப்படியாக வென்றார்கள் என்பதைப் பார்த்தபடி,
அவர்களது எதிர்ப்பு மட்டுமே சாலையாக,
தனிமைப்படுத்தப் பட்டிருந்தார்கள் 
நொறுங்கிய நட்சத்திரத்தின் துண்டுகளைப் போல,
வாயில்லாதவர்களாக, சோபையிழந்தவர்களாக,
ஒன்றிணைந்திருந்தார்கள் அமைதியாக ஒற்றுமைக்காக,
அவர்கள் நெருப்பாக இருந்தார்கள்,
அழிக்க முடியாத பாடலாக
பூமியில் மனித இனத்தின் மெதுவான மாற்றுப் பாதையாக
உருவாகினர் ஆழமாகவும் போராட்டங்களுடனும்.
எதுவெல்லாம் மிதித்து அழிக்கப்பட்டதோ
அவற்றுக்காகப் போராடும் கெளரவமாக,
கிளர்ந்தெழுந்தார்கள் ஒரு அமைப்பாக
ஒழுங்கோடு சென்று கதவைத் தொட்டு அமர்ந்தார்கள் 
நடுக் கூடத்தில் தங்கள் கொடிகளுடன்.
*
மூலம்:  "I was among them" By Pablo Neruda
**

பாப்லோ நெருடா 


ஸ்பானிஷ் கவிஞரான பாப்லோ நெருடா (1904 – 1973) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். 1971_ஆம் ஆண்டு இலக்கியத்திற்காக நோபல் பரிசினைப் பெற்றவர். இவரது இயற்பெயர் ரிக்கார்டோ இலீசர் நெஃப்டாலி ரேயஸ் பசால்தோ. 1920_ஆம் வருடம் கவிதை எழுதத் தொடங்கிய போது,  செக்கோஸ்லாவாகியா எழுத்தாளரான ஜோன் நெருடாவின் மேல் கொண்டிருந்த மரியாதையின் காரணமாக, பாப்லோ நெருடா எனும் புனைப்பெயரை வைத்துக் கொண்டார். பின்னர் அதையே சட்டப்பூர்வமான பெயராகவும் மாற்றிக் கொண்டார். பால் (Paul)  எனும் பெயரின் மறுவடிவே ஸ்பானிஷ் மொழியில் 'பாப்லோ’ ஆகும்.

கவிஞராக மட்டுமின்றி, அரசுத் தூதராகவும், சமூக உணர்வு கொண்ட போராளியாகவும், பொதுவுடைமைத் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவராகவும் திகழ்ந்தவர் பாப்லோ நெருடா. 

சிறுவயதில் இவரைப் பெற்ற தாய் காலமானதும் இவரது தந்தை மறுமணம் செய்து கொண்டார். தனது எட்டாவது வயதில் இவர் முதலில் எழுதிய கவிதை பாசத்துடன் இவரை வளர்த்த சிற்றன்னையைப் பற்றியதே. 13_வது வயதிலேயே கவிஞராகப் புகழ் பெற ஆரம்பித்தார். புகைவண்டி ஓட்டுநராகப் பணியாற்றி வந்த நெருடாவின் தந்தைக்கு தன் மகன் இலக்கியத்தில் ஈடுபடுவதில் விருப்பம் இருக்கவில்லை. நல்ல ஊதியம் வரக்கூடிய தொழிலில் ஈடுபட வேண்டுமென விரும்பினார். நெருடாவோ வளரும் பருவத்தில் தன் அனுபவங்களைக் கவிதைகள் மூலமாக வெளிப்படுத்தும் உந்துதலில் இருந்தார். தான் இலக்கியத்தில் ஈடுபடுவது தந்தைக்கு வருத்தம் தரும் என்பதும் இவர் புனைப்பெயர் வைத்துக் கொள்ள ஒரு காரணியாக இருந்திருக்கிறது.

19_ஆம் வயதில்   “Books of Twilights” எனும் முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது. விதவிதமான பாணிகளில் எழுதினார். அதீத கற்பனையுடைய சர்ரியலிஸம், சரித்திரக் காவியம், அரசியல் கொள்கை அறிக்கைகள் ஆகியவற்றோடு உணர்ச்சி மிக்க காதல் கவிதைகளையும் எழுதினார். 1924_ஆம் ஆண்டு அவரது இருபதாம் வயதில் வெளியான, அதிர்ச்சியும் நேரடித்தன்மையும் கொண்ட Twenty Love Poems and a Song of Despair என்ற கவிதைத் தொகுப்பு ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் இவரைப் பிரபலமாக்கியது. 1953_ஆம் வருடம் ஸ்டாலின் அமைதிப் பரிசினைப் பெற்றவர் நெருடா. ‘உலகெங்கிலும் பூமியின் தோல் ஒன்றே ஆகும்’ (The skin of the earth is same everywhere) எனும் இவரது பாடல் வரி மிகப் பிரபலமான ஒன்று.

1964_ஆம் வருடமே நோபல் பரிசுக்காக இவர் பெயர் பரிசீலிக்கப் பட்டு, பல எதிர்ப்புகளின் காரணமாக வேறொருவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் 1971_ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டதாயினும், அதுவும் அத்தனை எளிதாகக் கிடைத்து விடவில்லை. தேர்வுக் குழுவில் இருந்த பலர்  ஸ்டாலினின் சர்வாதிகாரப் போக்கினை பாப்லோ நெருடா புகழ்ந்ததை மறக்கவில்லை. ஆனால் நெருடாவின் ஸ்வீடன் மொழிபெயர்ப்பாளரான ஆர்டுர் லன்ட்க்விஸ்ட் என்பவரின் முயற்சியால் நோபல் பரிசு கிட்டியது. நோபல் பரிசுக்கான ஏற்புரையில் ‘ஒரு கவிஞன் ஒரே நேரத்தில் ஒற்றுமைக்கும் தனிமைக்கும் உந்து சக்தியாகத் திகழ்கிறான்’ எனக் குறிப்பிட்டார் பால்லோ நெருடா. 

அடுத்த வருடத்தில் (1972) ஸ்ட்ரூகா கவிதை சாயங்காலங்கள் அமைப்பினால் மரியாதைக்குரிய தங்கச் சர விருதினைப் பெற்றிருக்கிறார். இந்தக் காலக் கட்டத்தில் அவரது புத்தகங்கள் உலகின் முக்கியமான மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு, உலகளாவிய புகழ் பெற்றிருந்தார்.இவரது கவிதைகளை வாசித்திராதவர்களும் இவர் பெயரை அறிந்திருந்தார்கள். கவிதைகளையோ அதன் மொழிபெயர்ப்புகளையோ வாசித்தவர்கள் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பெரும்பங்கினை வியந்தார்கள். இவரது அரசியல் கொள்கைகளோடு ஒத்துப் போகாதவர்களும், வேறுபல காரணங்களுக்காக வெறுத்தவர்களும் கூட இவரது எழுத்துக்களைல் கவரப் பட்டிருந்தார்கள். 

நெருடா தன் வாழ்நாளில் பல நாடுகளில் தூதரகப் பணியினை ஏற்றுச் செயலாற்றியிருக்கிறார். அரசுத் தூதராக சுமார் ஆறு ஆண்டுகள் இலங்கை, சிங்கப்பூர் மற்றும் ரங்கூனில் பணியாற்றியிருக்கிறார்.  சிலியன் கம்யூனிஸக் கட்சியின் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். 1948_ஆம் வருடம் ஜனாதிபதி கேப்ரியல் சிலி நாட்டில் கம்யூனிசத்தை ஒழித்த போது நெருடாவைக் கைது செய்ய அரசு ஆணை பிறப்பித்தது. நண்பர்கள் பல மாதங்கள் அவரைத் தம் வீட்டின் அடித்தளத்தில் மறைந்து வாழ வைத்திருக்கிறார்கள். பின்னர் மலை வழியாகத் தப்பித்து அர்ஜென்டைனா சென்றிருக்கிறார். ஆனால் வருடங்கள் பல சென்றதும், பொதுவுடமைவாதியும் சிலி நாட்டின் ஜனாதிபதியுமான சல்வேடார் ஆலன்ட் நெருடாவைத் தன் ஆலோசகராக ஏற்றுக் கொண்டிருக்கிறார், நோபல் பரிசு பெற்று சிலி நாட்டுக்குத் திரும்பிய நெருடாவை எஸ்டாடியோ நேஸியோனல் அரங்கில் 70000 மக்கள் முன்னிலையே உரையாற்ற வரவேற்றுக் கெளரவித்திருக்கிறார்.

1973_ஆம் வருடம் இவருக்குப் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது. அதே வருடம் மாரடப்பினால் இறந்ததாகப் பதியப் பட்டது. ஆனால் இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பின்னர் விசாரணைகள் நடத்தப்பட்டன. மொத்தத்தில், நெருடாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியத் தகவல்கள், நெருடலான பக்கங்களையேக் கொண்டுள்ளது. வோகல்செங் என்பவருடானான இவரது திருமணம் தோல்வியுற மெக்ஸிகோவில் விவாகரத்து பெற்றிருக்கிறார்.  சமூகத்தின் பேச்சுகளிலிருந்து தப்பிக்க ஸ்பெயின் நாட்டை விட்டே தன் நோயுற்ற ஒரே குழந்தையுடன் வெளியேறி விட்டுள்ளார் வோகல்செங். நெருடா அதன் பின்னர் மனைவியும் குழந்தையையும் தனது  வாழ்நாளில் பார்க்கவேயில்லை. விவாகரத்து பெற்ற சில மாதங்களுக்குப் பின் பிரான்ஸ் நாட்டில் டெலியா டெல் கேரில் என்பவருடன் வாழ்ந்தவர் அவரைத் திருமணமும் செய்து கொண்டார். ஆனால் சிலி நாட்டு அதிகாரிகள் முதல் மனைவியுடனான இவரது விவாகரத்து சட்டப்பூர்வமானதன்று என இரண்டாம் திருமணத்தை அங்கீகரிக்கவில்லை. 

2018_ஆம் ஆண்டு சிலி நாட்டின் சான்டியகோ விமான நிலையத்திற்கு பாப்லோ நெருடாவின் பெயரை வைக்க சிலி அரசுக் கலாச்சாரக் குழு பரிந்துரைத்து வாக்களித்த போது அந்நாட்டின் பெண்ணியவாதிகளால் பெரும் கண்டனம் எழுந்தது. 1925_ஆம் ஆண்டு பாப்லோ நெருடா உடன் பணியாற்றிய பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதால் அரசு அவருக்கு அத்தகைய மரியாதையைக் கொடுக்கக் கூடாது எனப் பல பெண்ணிய அமைப்புகள் போராடினர். பெரும் புகழ் பெற்றிருந்தாலும் சிலி நாட்டில் சர்ச்சைக்குரிய நபராகவே இன்றளவிலும் பார்க்கப்படுகிறார் பாப்லோ நெருடா.

*
கவிஞரைப் பற்றிய குறிப்பு 
மற்றும்
ஆங்கிலம் வழியாகக் கவிதைகளின் தமிழாக்கம்: 
ராமலக்ஷ்மி
**

சொல்வனம் இதழ் 247_ல். நன்றி சொல்வனம்!

***


தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


***

10 கருத்துகள்:

  1. அற்புதம்...கவிதையின் ஆன்மாவை உணரும்படி மொழிபெயர்த்தவிதம் அருமை..

    பதிலளிநீக்கு
  2. சுவாரஸ்யமான தகவல்கள்.  ஒரே சமயத்தில் இரண்டு மூன்று மொ.பெ கவிதைகள் கொடுத்தால் மறுபடி மறுபடி படித்து உள்வாங்க வேண்டியிருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கமாக அதிக பட்சம் இரண்டு கவிதைகள் வரையே பகிர்வேன். இவற்றையும் பிரித்து இரு பதிவுகளாகத் தந்திடவே எண்ணினேன். ஆனால் பாப்லோ நெருடாவின் வாழ்க்கை குறிப்புடன் நான்கையும் பகிர்வது சரியெனப் பட்டது. சிறுவயதில் எழுத ஆரம்பித்தவர், காதல் கவிதைகளால் பிரபலமானவர், பின்னாளில் பொதுவுடைமைத் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டவர். வெவ்வேறு காலக் கட்டங்களில் அவர் எழுதியவற்றை ஒரே பதிவில் தரும்போது அவரைப் பற்றிய புரிதலுக்கும் உதவும் என்பதால்..!

      நன்றி ஸ்ரீராம்:).

      நீக்கு
  3. நல்ல மொழியாக்கம். சொல்வனத்தில் வெளியானமைக்கு வாழ்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கவிதைகள் அருமை.
    சொல்வனத்தில் இந்த மொழியாக்க கவிதைகள் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  5. ஆழ்ந்த வாசிப்பைக் கோரும் வரிகள். சுய விமர்சனம், காதல், சமூக நீதி என ஒவ்வொரு கவிதையும் வாசிப்பவர் உணர்வுகளை உண்மைக்கு அருகில் அழைத்துச் செல்கிறது. மிகச் சிறந்த தமிழாக்கம். நன்றி.

    பதிலளிநீக்கு
  6. தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு