புதன், 5 பிப்ரவரி, 2014

நினைத்துப் பார்க்க ஒரு புன்னகை – சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை

ங்களிடம் தங்கமீன்கள் இருந்தன 
சித்திரங்கள் கொண்ட சன்னலை மறைத்த 
கனமான திரைச்சீலைகள் அருகே
மேசையின் மேலிருந்த குடுவைக்குள்
சுற்றிச் சுற்றி வந்தபடி
என் அம்மா, எப்போதும் புன்னகைப்பவள், நாங்கள் எல்லோரும் 
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென விரும்புகிறவள்
சொல்வாள் என்னிடம் “சந்தோஷமாய் இரு ஹென்ரி” என.
சரியாகதான் சொன்னாள். சந்தோஷமாக இருக்கலாம்தான்
நம்மால் முடியுமானால்..
ஆனால் என் அப்பா தொடர்ந்து அடிப்பார் என்னையும் அவளையும் 
வாரத்தில் பலமுறை
அவரது ஆறடி இரண்டங்குல உயர சட்டத்துக்குள் கொந்தளித்தபடி
உள்ளிருந்து எது அவரை ஆட்டுவிக்கிறது என்றே புரியாதவராய்.
என் அம்மா, ஒரு பரிதாபத்துக்குரிய மீன்
மகிழ்ச்சியாக இருக்க ஆசைப்படுகிறவள், வாரத்தில்
இரண்டு மூன்று முறையேனும் உதைபடுபவள்,
என்னை மகிழ்ச்சியாக இருக்கச் சொல்கிறவள்: “ஹென்ரி, புன்னகை புரி!
ஏன் புன்னகைப்பதே இல்லை நீ?” 

உடனே புன்னகைப்பாள், எப்படி புன்னகைக்க வேண்டுமென எனக்குக் காட்ட
அதுதான் நான் பார்த்த மிக சோகமான புன்னகை

ஒருநாள் தங்கமீன்கள் இறந்தன, ஐந்து மீன்களுமே,
மிதந்தன நீரில் உடல்கள் திரும்பியிருக்க, கண்கள் திறந்திருக்க.
வீடு திரும்பிய அப்பா வீசியெறிந்தார் அவற்றைப் பூனைக்கு
சமையலறைத் தரை மேலே, பார்த்துக் கொண்டிருந்தோம் நாங்கள் 
அதற்கும் அம்மா புன்னகைப்பதை.
*

மூலம் ஆங்கிலத்தில்..
A Smile To Remember by Charles Bukowski

அதீதம் 2014 பிப்ரவரி இரண்டாம் இதழுக்காகத் தமிழாக்கம் செய்த கவிதை.
**

சார்லஸ் புக்கோவ்ஸ்கி
Charles Bukowski
சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படும் ஹென்ரி சார்லஸ் புக்கோவ்ஸ்கி (1920 – 1994) , நாவலாசரியரும் சிறுகதை எழுத்தாளரும் கூட. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார். கூடப்பிறந்தவர்கள் கிடையாது. குடித்து விட்டுத் தாயையும் தன்னையும் அடிக்கும் வழக்கம் கொண்ட தந்தையை எதிர்க்க, சோகத்தை மறக்க தானும் அதே பழக்கத்தில் விழுந்தவர். லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டி கல்லூரியில் பத்திரிகைத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் பெரும்பாலும் விளிம்பு நிலை வேலைகளையேத் தொடர்ந்து பார்த்திருக்கிறார். இவரது எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. ஆறு நாவல்கள், ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள் யாவும் சுமார் அறுபதுக்கும் மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. அனைத்தும் அமெரிக்க விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாகக் கொண்டவை.
***

18 கருத்துகள்:

  1. கவிதை மொழிப்பெய்ர்ப்பு அருமை.
    தந்தையை எதிர்க்க சோகத்தை மறக்க தந்தையின் பழக்கத்தை இவரும் மேற்க் கொண்டது மிகவும் வருத்தமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. தமிழாக்கம் மிகவும் அருமை...

    எந்த ஆணவம் அவரை ஆட்டுவிக்கிறதோ... ம்...

    பதிலளிநீக்கு
  3. இவருக்கும் அந்தப் பழக்கம் பிடித்துக் கொண்டது சோகமே. அருமையான மொழிபெயர்ப்பு. ஒருவேளை அம்மா அழுதிருக்கலாமோ.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கவிதை அறிமுகம். வல்லிம்மா சொல்வது போல அழுகை மறந்த அம்மாவோ... தொட்டி மீன்கள் நல்ல உவமை.

    பதிலளிநீக்கு
  5. இயலாமையின் வெளிப்பாடு ஒவ்வொரு வரியிலும் பிரதிபலிக்கிறது. மொழிபெரயர்ப்பு அருமை. பாராட்டுகள் ராமலஷ்மி.

    பதிலளிநீக்கு
  6. @கோமதி அரசு,

    நன்றி கோமதிம்மா. குடும்பச்சூழல் ஒருவரின் வாழ்க்கையையே திசை திருப்பிவிடுவது சோகமே.

    பதிலளிநீக்கு
  7. @வல்லிசிம்ஹன்,

    நன்றி வல்லிம்மா. அழுதிருந்திருக்கலாம். அப்படித் தோன்ற வைத்ததில் கவிதை வெற்றி பெறுகிறது. நிஜம் நமக்கு சுடுகிறது.

    பதிலளிநீக்கு
  8. அருமை.. கவிதையும் மொழியாக்கமும்.

    அம்மாவுக்கு அழ மறந்து விட்டதோ அல்லது மரத்து விட்டதோ.. பாவம்.

    பதிலளிநீக்கு
  9. அருமையான கவிதை......

    அழ மறந்து விட்டதோ அம்மாவுக்கு... எனக்கும் இது தான் தோன்றியது.

    பதிலளிநீக்கு
  10. @வெங்கட் நாகராஜ்,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  11. புன்னகைப்பதற்கும்
    புன்னகையை சூடிக் கொள்வதற்கான
    வித்தியாசத்தையும் உணரச் செய்யும்
    அருமையான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. @Ramani S,
    /புன்னகையை சூடிக் கொள்வதற்கான/ அழகாய் சொன்னீர்கள். ஆம், கவிதையை வாசித்ததுமே எனக்கு, நான் எழுதிய தூறல் கவிதை நினைவுக்கு வந்து போனது.
    நன்றி ரமணி sir!

    பதிலளிநீக்கு
  13. தொட்டியில் இருக்கிற தங்க்க மீன்கள் இப்படித்தான் தீடீரென இறந்து போகின்றன, யாரும் கேட்பாரற்று/

    பதிலளிநீக்கு