வியாழன், 19 மார்ச், 2009

இளமை வெகு இனிது



இது ஒரு வயது
இளமை அது இனிது

கடந்தவை பற்றிய
கவனம் இன்றி
வரவிருப்பவை பற்றிய
வருத்தமோ வாட்டமோ
இன்றி
இன்றைய பொழுது
இனிப்பாய் கழிந்தால்
இதுதான் வாழ்க்கை
இதுதான் சொர்க்கம்
என்றே நினைக்கும்-
இது ஒரு வயது
இங்கு
இளமை வெகு இனிது.


காதல் தவறென்றால்
ஏற்காது மனசு.
களிப்புகள் தவறென்றால்
இசையாத இளசு.
கலாச்சாரம் கலைப்பது
இல்லைதான் நோக்கம்.
காண்பவர் பார்வை
வேறுபடுவதும் சோகம்.
விளிம்புகள் எதுவரை
என்பதில் விவரம்
இருக்குமாயின்
வீழாது வாழலாம்.
உமை
நோக்கி நீளுகின்ற
விரல்களை வெகு
எளிதாக மடக்கலாம்.

நாளையை உமதாக்கிட
ஒருமுறை உமைச்சுற்றி-
ஒரேயொரு முறை
உமைச் சுற்றி-
உற்று நீவிர் நோக்கலாம்.
நோகாமல் நுங்கு உண்ணும்
குருட்டு அதிர்ஷ்டக் குதிரையிலே
பயணிக்க விரும்பாது
போட்டிகள் சூழ்ந்த இவ்வுலகில்
போராடி ஜெயித்திடத்தான்
ஓடுகிறார் ஓட்டமாய் உம்
வயதொத்த வாலிபர் பலரும்
கூட்டம் கூட்டமாய்.
'மாரத்தான்' ஓட்டமதில்
சேர்ந்திடத்தான் வேண்டுமெனில்
மாறத்தான் வேண்டும் சற்று.

உம்மோடு வளர்ந்தவரும்
உம்மோடு படித்தவரும்
ஆடிப் பாடியவரும்
நட்போடு நடந்தவரும்
நகைத்து மகிழ்ந்திருந்தவரும்-
நாளை ஒரு நாளில்
விண்ணினையே வளைத்து
வெண்ணிலவைப் பிடித்து
வெற்றிக் கோப்பையாகக்
கையில் ஏந்தி நிற்க-
நட்சத்திரங்களைப் பறித்து
நெஞ்சருகே பதக்கங்களாய்
பதித்திருக்க-
நீங்கள்
அண்ணாந்து மட்டுமே
பார்த்திருக்கப் பிறந்தவராய்
ஆகிடலாமா?
அவர் அருகே போயிடவே
அஞ்சும் நிலைக்கு
ஆளாகிடலாமா?

விழித்திடலாம் இப்போதே
பயணிக்க வேண்டிய
பாதை நெடுக
முட்களாய் இருந்தாலும்
முயற்சி கை கொடுக்கும்.
எடுத்திடலாம் இப்போதே
இதுதான் என் இலக்கென
இதயத்தில் ஒரு உறுதி-
எந்த ஒரு
இருளிலும் வழி மட்டும்
தெரிந்திடும்
தெள்ளத் தெளிவாக-
இதுவே வயது
இளமை வலியது!

*** ***


படம் நன்றி: ஜீவ்ஸ்

[இக்கவிதை மார்ச் 19, 2009 இளமை விகடன்

இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.]

வெள்ளி, 13 மார்ச், 2009

கருப்பு வெள்ளைக் காவியங்கள்! - [PiT-மார்ச்]

கருப்பு வெள்ளைக் காவியங்கள்
கண் நிறைக்கும் ஓவியங்கள்
எதைக் கொடுக்கட்டும் சொல்லுங்கள்!



மின்னும் கண்களுடன்
மிடுக்காய் தேவதை!





இனிய புன்னகை சிந்தி
இதயத்தை அள்ளும் இளவரசி!






இறைவன் படைப்பில் ஒவ்வொரு
உறுப்பும் தாளாத வியப்பு!
உள்ளங்காலில் முடிகின்ற பிரமிப்பு
உச்சந்தலையில் அன்றோ ஆரம்பிக்கிறது?
ஆகா, என்னே ஒரு வடிவமைப்பு!





ஆக இந்த மாத போட்டிக்கான தலைப்பாக PiT அறிவித்திருப்பது கருப்பு வெள்ளைப் படங்கள்! வழக்கம் போல ‘உள்ளேன் ஐயா’ என்று வருகைப் பதிவின் போது குரல் கொடுக்க வந்திருக்கிறேன் நானும்! மூன்றிலே முதலாவதில் ஒளியமைப்பு[லைட்டிங்] கூடுதல் சிறப்போ எனத் தோன்றுகிறது எனக்கு! சரி உங்களுக்கு? சொல்லி விட்டுப் போங்களேன், நாளைக்கு அனுப்பவிருக்கிறேன் போட்டிக்கு:)!
*** *** ***

ஞாயிறு, 8 மார்ச், 2009

மங்கையராலே.. பொங்கிடும் அன்பு! தங்கிடும் சுபிட்சம்!




தாய்மை என்பது அன்பின் உச்சம்.
உலகின் ஜனத்தொகையில் பாதியாகிய பெண்கள் அந்த உச்சத்தை அடைந்து அனுபவிப்பதாலேயே அன்பு உலகில் நிலைக்கிறது, பரவுகிறது.

அன்பின் வடிவாய்.. தன் குழந்தைகளுக்காகத் தன்னையே உருக்கிக் கொள்ளும் தாயினைப் பார்த்து ஒரு பெண் சிறுமியாய் இருக்கும் போதே தானும் ஒரு மகளாய் ஒரு தமக்கையாய் ஒரு தங்கையாய் தாய்மை உணர்வில் பரிமளிக்கத் தொடங்கி விடுகிறாள்.

புகுந்த இடத்திலும் அத்தனை பேருக்கும் தாய்மையின் வடிவாய் தன்னை அர்ப்பணிக்கிறாள். அதன் பிரதிபலிப்புத்தான் ஆண் பெண் பாகுபாடின்றி குடும்பத்திலுள்ள அத்தனை பேரும் அன்பின் வசமாகி மனமது தெளிவாகி நல்லது கெட்டது புரிவாகி பக்குவப்பட்டு நிற்கிறார்கள். வெற்றியையும் கை வசமாக்கிக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு குடியும் இவ்வாறாகப் பெண்ணினால் பக்குவப் பட்டு நின்றால் போதுமே: "குடி உயரக் கோல் உயரும்; கோல் உயரக் கோன் உயர்வான்"! ஒளவை சொன்னதுதான்!

இப்படித் தாய்மை உள்ளத்தில் பரிமளித்துத் தத்தமது குடிகளை உயர்த்துகிற பெண்களுக்கு மத்தியிலே தாய்மையே உருவான அன்னை தெரசா போன்றவர்கள் கருணைக்கும் தியாகத்துக்கும் எடுத்துக் காட்டாக இருந்து சாதி மத இன பேதம் தாண்டிய பரஸ்பர அன்பு பரவிடக் காரணமாயிருந்தார்கள்.

அத்தகைய பரஸ்பர அன்பே அகிலத்தின் அமைதிக்கான அடிப்படை. இன்று அமைதி என்பது ஆங்காங்கே அவ்வபோது ஆட்டம் கண்டபடியே இருப்பது ஏன் எனச் சற்று ஆராயத்தான் வேண்டும். அப்படி ஆராய்கையில், தாய்மையும், பெண்மையின் தன்னிகரற்ற தியாக உள்ளமும் போற்றப் பட ஆரம்பித்த பிறகுதான் இந்த 'உலகின் சுபிட்சம்' உச்சத்துக்கு செல்லத் துவங்கிய உண்மை புரியும்.

பத்தொன்பதாவது நூற்றாண்டின் வரையிலும் கூட உலகின் பல நாடுகளில் பெண்கள் ஓட்டுரிமை பெற்றிருக்கவில்லை. வளர்ந்த நாடாகத் தன்னைக் காட்டிக் கொண்ட அமெரிக்காவில் 1920ஆம் ஆண்டுதான் பெண்கள் மதிக்கப்பட்டு ஓட்டுரிமை தரப் பட்டார்கள்.

உன்னிப்பாக உலக சரித்திரத்தைக் கவனித்தால் வியக்கத்தகு வளர்ச்சி என்பது மங்கையர் மதிக்கப்பட ஆரம்பித்த இருபதாம் நூற்றாண்டில்தான் வந்தது என்றிடலாம். 1905-ல் கண்டு பிடிக்கப் பட்ட விமானம் முதல் தொலைக்காட்சி, அலைபேசி, இணையம் போன்ற உலகத்தை ஒரு வளையத்துக்குள் கொண்டு வந்த அத்தனை சமாச்சாரங்களுக்கும் இருபதாம் நூற்றாண்டே சாளரங்களை விரியத் திறந்து விட்டது.

இந்தியாவில் 'உடன்கட்டை' வழக்கம் முற்றிலுமாக ஒழிந்தது. பெண்களும் கல்விக்காக வெளிவரத் தொடங்கினார்கள். பரவலாக வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். பொருளாதார ரீதியாகவும் குடும்பப் பொறுப்பினைத் தாங்க ஆரம்பித்தார்கள். உடலால் பலவீனமானவர்களாய் அறியப் பட்ட பெண்கள் வீட்டையும் கவனித்துக் கொண்டு வேலையிலும் பெரும் வெற்றிகளைக் குவித்த படி பெரும் சக்திகளாய் மாறலானார்கள்.

மகாக் கவி பாரதி பெண்களின் விடுதலை வேண்டிப் பாடிய கும்மிப் பாட்டு அட்சரம் பிசகாமல் மெய்ப் பட்டது.

'சிவனின்றி சக்தி இல்லை. சக்தியின்றி சிவனில்லை’ என்பது வேதகாலப் பாடமாக மட்டுமின்றி நடைமுறை வாழ்க்கையிலும் நடக்கக் கண்டார்கள். வேலைக்குச் செல்லாவிடினும் வீட்டிலிருந்த படி குடும்பப் பொறுப்புகள் நிர்வகிப்பதில் ‘ஒன்றும் தெரியாது உனக்கு’ என்கிற மாதிரியான பிம்பங்கள் உடைத்து திறமைமிகு மதி மற்றும் நிதி மந்திரிகளானார்கள்.


யின்-யாங்


சீனர்களின் யின்-யாங் தத்துவம் எதிரெதிரான பெண் ஆண் சக்திகளின் அலைகள் ஒன்றில்லா விட்டால் மற்றதில்லை எனும் அளவுக்கு ஒன்றையொன்று சார்ந்து ஒன்றின் உயர்வுக்கு மற்றது காரணமாய் அமைவதே இயற்கையின் நியதி என்கிறது. அது உண்மையென்றே படுகிறது.

இப்படி சரிவிகித அலை உலகிலே என்றும் இருக்குமாயின் செழிப்பிற்குக் குறைவிருக்காது. கருணை என்பது கடலெனப் பெருகி தீவிரவாதம் தீய்ந்தே போய்விடும். எப்போதெல்லாம் இந்த அன்பின் தூதர்களும் சுபிட்சத்தின் காவலர்களுமான பெண்கள் அனுசரணையாக நடத்தப் படாது போகிறார்களோ அப்போதெல்லாம்தான் வருகிறது அமைதிக்குப் பங்கமும் சுபிட்சத்துக்குப் பஞ்சமும். இதைக் கருத்தினில் கொண்டு கொண்டாடுங்கள் மகளிரை!
*** *** ***

அனைவருக்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

*** *** ***

முதல் படம் நன்றி: முத்துலெட்சுமி கயல்விழி
இரண்டாவது படம்: இணையத்திலிருந்து..

  • இளமை விகடன் 5 மார்ச் 2009-ல் வெளியிட்டிருக்கும் மகளிர் தினச் சிறப்பிதழான சக்தி 2009-ல் இக்கட்டுரையைக் காண்க இங்கே:




திங்கள், 2 மார்ச், 2009

முயற்சிகள் வெற்றிகள் விருதுகள் நன்றிகள்

'விகடனில் நானும்' என பதிவிட்டிருந்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்து யூத்ஃபுல் விகடனில் என் படைப்புகள் இடம் பெற்று வருகின்றன. இன்று எனது குறள் கதை வெளியாகியுள்ளது. நன்றி இளமை விகடன்!
அடுத்த மகிழ்ச்சி 'டாப் டென்னில் நானும்...!'

நமது வலைப்பூக்களாகிய செடிகளில் மொட்டு விடும் பதிவுகள் ஒவ்வொன்றும் மலருகையில் அதன் மணத்தைப் பரப்பி வரும் தோட்டம் இப்போது விருது விழா 2008 என்கிற மலர்க் கண்காட்சியை நடத்தி முடித்திருக்கிறது! நன்றி தமிழ்மணம்!

வெற்றி பெற்ற யாவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

முதல் சுற்றில் 'கலாச்சாரம்' பிரிவில் எனது "திண்ணை நினைவுகள்:கயல்விழி முத்துலெட்சுமிக்கு ராமலெட்சுமியின் கடிதம்" மூன்றாவது இடத்தில்.

முத்துலெட்சுமி எழுதிய திண்ணை பதிவினால் ஈர்க்கப்பட்டு அவருக்கு வரையும் மடலாகவே நான் ரசித்து ரசித்து நினைவுகளில் மூழ்கி மூழ்கி எடுத்த முத்து.

'காட்சிப் படைப்பு' பிரிவில் "எம்மதமும் எமக்கு...[PiT- இறுதிச் சுற்று-'கட்டமைப்பு'க்கு]" நாலாவது இடத்தில்.

மாதாமாதம் விதவிதமான தலைப்புகள் தந்து நமக்கு புகைப்பட போட்டிகள் நடத்தும் PiT குழுவினரால் எழும்பிய ஆர்வம். அவர்களுக்கு நன்றி ஏற்கனவே நவின்றாகி விட்டது எனது ஜனவரி மாத பிட் பதிவில்.டெக்னிக்கலாக அதிகம் தெரியா விட்டாலும் புகைப்படங்களை நான் கவிதையுடனும், ஒரு மெசேஜ் அல்லது கான்செப்டுடன் அளிக்கும் விதத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக இதை எடுத்துக் கொள்கிறேன். இப்பதிவு வரிசையில் முந்தும் என என்னை விட ஆர்வத்துடன் ஆருடம் சொன்ன திகழ்மிளிருக்கும் நன்றி:)!

படைப்பிலக்கியப் பிரிவில் "'புகை'ச்சல்" கவிதை பதினைந்தாவது இடத்தில். ‘புகையைக் கை விடுங்களேன்’ என்று இதில் நான் வேண்டிக் கேட்டுக் கொண்டிருக்கும் செய்தி மனதுக்குத் தருகிறது மகத்தான திருப்தி.

ஆக.. என் பதிவுகள் இவ்விடங்களுக்கு வரக் காரணமாய் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்!





இந்த நேரத்தில் "For the coolest Blog I ever Know" எனும் மேலிருக்கும் பட்டாம்பூச்சி விருதை வரிசையாக எனக்கு வழங்கிய கடையம் ஆனந்த் [என் பதிவுகளுக்கிடையே இடைவெளி அதிகமாகையில் 'எப்போது அடுத்தது' என எழுப்பிடுவார் கேள்வி], என் சிறுகதைகளையும் செய்தி சார்ந்த கவிதைகளையும் பாராட்டி வழங்கிய பாசமலர், டைமிங்காகக் கவிதைகள் போடுவதாய் சிலாகித்து, செல்லமாக ‘வலையுலகக் கவிக்குயில்’ என அழைப்பதில் மகிழும் புதுகைத் தென்றல், 'புகைப்படம், எனது கருத்து, தொடர்ந்த முயற்சிகளைப் பாராட்டி' வழங்கிய மதுமிதாவுக்கும் என் நன்றிகள்.

கூடவே, வழங்க விரும்புவதாகப் பதிவிட்ட அமுதா, சந்தனமுல்லை, தர விரும்புவதாக தனி மடல் அனுப்பிய ரிஷான் ஷெரீஃப் இவர்களுக்கும் என் நன்றி!  எங்கு திரும்பினும் திறமைகளாய் கொட்டிக் கிடக்கும் பதிவுலகில் எந்த மூவரை எனத் தேர்ந்தெடுப்பீர்களென அவருக்கு பெற்ற விருதினை அத்தனை பேருக்கும் பிரித்துக் கொடுக்குமாறுஅவருக்கு வழங்கிய ஆலோசனையை நானும் கடைப்பிடிக்கிறேன் இப்போது. 

உத்வேகம் தந்தவர்கள்:


நெல்லைச் சீமையைச் சேர்ந்தவர்கள் மூவர். முதலாவதாக நெல்லை சிவா.தமிழில் வலைப்பூ என்பதை இவரது மின்மினி மூலமே அறிந்தேன். அப்போது பதிவுலகினுற்குள் வராத காலமாகையால் பின்னூட்டங்கள் அதிகம் இட்டதில்லை. இருப்பினும் பல பதிவுகளை ரசித்துப் படித்திருக்கிறேன்.

அடுத்து நைன்வெஸ்ட் நானானி. இவரது பதிவுகளால் ஈர்க்கப் பட்டு இட ஆரம்பித்த பின்னூட்டங்களே என் பதிவுலகப் பிரவேசம்,தொடர்ந்து என் ஒவ்வொரு பதிவையும் உற்சாகப் படுத்தி வருபவர்.

வள்ளுவம் கோமா. நண்பர் வட்டம் இலக்கியப் பத்திரிகை, திண்ணை இணைய இதழ் ஆகியவற்றில் வந்த என் எழுத்துக்கள் அத்தனையும் அறிந்தவர், அப்போதே ஊக்கம் தந்தவர், வலையிலும் வரவேற்பு கூறி என் முதல் பதிவுக்கு முதல் பின்னூட்டமிட்டவர்.

இவர்களைப் போல நேரடியாக அன்றி, தன் எழுத்துக்களால் எனக்கு ஒரு உத்வேகத்தைத் தந்தவர் இன்னும் தந்து கொண்டிருப்பவர் ஒருவர், சர்வேசன். எனது சமீபகால கவிதைகள் பலவற்றிற்கான பொறியினை இவரது பதிவுகளிலிருந்து பெற்றேன் என்றால் அது மிகையாகாது. சர்வேசன்-ஆக்கியவன் அல்ல அளப்பவன் என்கிற இவரது வலைப்பூ "surveys about anything and everything in Tamil for the Tamil" என்றே சொல்கிறது. சமூகத்தைப் பற்றி சகலதையும் அலசும் இவரது எழுத்துக்களில் காணப்படும் வீச்சும், பேச்சு வழக்கிலே எழுதும் ஸ்டைலும் பிடிக்கிறது எனக்கு. முத்துச்சரத்தின் ப்ரொஃபைல் படம் இவர் எடுத்ததே. நன்றாயிருக்கிறது என்றதுமே தந்து விட்டார் என் வலைப்பூவுக்கு. எதற்கு நன்றி சொன்னாலும் ‘தன்யனானேன்’ என்றிடுவார் தன்னடக்கத்துடன். ஏ.ஆர். ரஹ்மானின் ரசிகரல்லவா:)?

துளசி தளம் எல்லோருக்கும் கற்றிட பாடங்கள் கொண்ட நூலகம். பள்ளி நினைவுகள், வாழ்க்கையில் கடந்த வந்த பாதைகள் ['அக்கா’ தொடர்] ஆகியவற்றைப் படித்துப் பிரமித்துப் போயிருக்கிறேன். அது போல எழுத முடியுமா தெரியாது. ஆனால் அப்படி ஒரு ஆசை அடி நெஞ்சில் இருக்கிறது. ஒரு புகைப்படப் பதிவை எப்படி சுவாரஸ்யமாகக் கொடுக்க வேண்டும் என்பதற்கான பொறியை இங்கிருந்தே பெற்றேன். எனக்கேற்றவாறு ஒருபாணியை அமைத்தும் கொண்டேன். அதே போல பின்னூட்டமிடுபவர் ஒவ்வொருவரையும் ‘வாங்க’ என அன்பாய் விளித்துப் பதிலளிப்பார். தனித்தனியாக பதில் தரவும் இவரிடமே கற்றேன்.


ஊக்கம் தந்தவர்கள்:


ஒருவரா இருவரா எத்தனை பேர். இருந்தாலும் சிலரைக் குறிப்பிட்டாக வேண்டும். இணைய இதழ்களில் எழுதுவதை நிறுத்தியிருந்த என்னை மீண்டும் எழுத வைத்த ரிஷான் ஷெரீஃப், கவிதைகளை எளிமையாய் எழுதுதிலும் இருக்கிறது ஒரு நன்மை, சுலபமாய் நுழைந்து விடும் பிறர் மனதிலே சொல்ல வந்த கருத்து எனப் புரிய வைத்த கிரி, தூரத்தில் இருந்தபடி வலைப்பூ அமைப்பில் என்ன சந்தேகம் வந்தாலும் உடனுக்குடன் தீர்த்து வைக்கும் தமிழ் பிரியன், எழுதுவோடு நின்றிடாமல் புகைப்படங்களிலும் கவனம் செலுத்துங்கள் என ஃப்ளிக்கர் தளத்தில் நுழையக் காரணமாய் இருந்த ஜீவ்ஸ், பத்திரிகைகளிலும் முயற்சிக்குமாறு அடிக்கடி ரிஷானைப் போலவே வலியுறுத்தி வரும் ஷைலஜா, தனிமடலில் இலக்கியம் பேசும் சதங்கா[இருவருக்கும் இருந்த ‘விகடனில் நுழையும் கனவு’ மெய்ப்பட்டது ஒரே சமயத்தில் என்பது உங்களுக்கு கூடுதல் தகவல்!].

வலைக்குள் வந்த சமயத்தில் பலவிதமானவர்களின் படைப்புகள் படிக்கக் கிடைத்தன். அச்சமயத்தில் நாம் இத்தனை எளிமையாய் எழுதுவதும் கவிதைதானா என்கிற மிரட்சியுடன் திருவிழாவில் தொலைந்த குழந்தை போலத் ‘திருதிரு’வென விழித்து நின்ற போது ‘வாங்க அப்படியெல்லாம் பார்த்தால் நம் எண்ணங்களை நாம் வெளிப்படுத்த வாய்ப்பே இல்லாது போகும். மற்றவர் சொல்வதைப் பற்றி நினையாமல் மனதுக்கு பிடித்ததை செய்யலாம்’ என அன்போடு முத்துச்சரத்தைக் கை பிடித்து அழைத்துச் சென்று தன் வலைப்பக்கத்திலே ஓர் இடமும் தந்தவர் கவிநயா. எப்போதும் இவர் என் 'நினைவின் விளிம்பில்’.

அடுத்து வலைச்சரம். அங்கு ஆயில்யன், தமிழ்பிரியன், நானானி, கவிஞர் N.சுரேஷ், ரிஷான் ஷெரீஃப், ரம்யா,கோமா ஆகியோர் எனக்களித்த பாராட்டு. அதற்குக் களம் தந்த சீனா சார். எனக்கு இவற்றால் அதிகரித்தது ஒரு பொறுப்புணர்வு.

உடன் வருபவர்கள்:


இவர்கள் உடன் மட்டும் வரவில்லை உத்வேகம் ஊக்கம் ஆகியவற்றோடு உற்சாகத்தையும் சேர்த்துத் தருபவர்கள். என் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்த்த மறக்காத வல்லிம்மாவில் ஆரம்பித்து பலரும் இருக்கிறீர்கள். தனித்தனியாக யாரையும் குறிப்பிடவில்லை என நினைத்துக் கொள்ள வேண்டாம்.

வலைப்பூவைத் தொடருபவர்கள், follower ஆக இல்லாவிட்டாலும் தொடர்ந்து என் ஒவ்வொரு பதிவுக்கும் வந்து உள்ளார்த்தமான கருத்துக்களைப் பதிந்து செல்லுபவர்கள், 'பரவாயில்லை இனித் தொடர்ந்திடலாமோ முத்துச்சரத்தை' என இப்போது நினைக்கின்ற சில பேர்கள்.. இவர்கள் எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!