வியாழன், 18 டிசம்பர், 2025

ஆயிரம் வேர்களும் பதிலற்ற வினாக்களும் - 'புன்னகை' இதழ்: 86



நாம் நடந்து கொண்டிருப்பது 
எஞ்சிய தடங்களில்,
வேர்கள் ஒரு காலத்தில் 
பற்றிக் கொண்டிருந்த
மண்ணின் நெஞ்சங்களில். 
அவை தம் மூச்சை வைத்து 
உயிர் வாழ்ந்திருந்த இடத்தில் 
இப்போது இருப்பதெல்லாம்கருகிய மெளனமும் 
சிதைந்த கட்டைகளுமே.

காற்றுக்குச் செவிமடுக்கும் 
உயர்ந்த கோபுரங்களாக இருந்த
மரங்கள் ஒவ்வொன்றும்
இன்று முறிந்து உடைந்து 
தத்தமது நினைவுகளாகி 
அலைக்கழிகின்றன 
அதே காற்றில். 

வனத்திற்கும் உண்டு 
வளமான கதைகள்:
பச்சை நாக்குகள் 
அளவளாவிய வரலாறுகள்
உச்சரித்த பெயர்கள்
பகிர்ந்த கனவுகள் - யாவும்
புழுதியின் உதடுகளில்
ஊமையாகி உறங்குகின்றன.

காற்று உணர்வதெல்லாம்
சாம்பலின் சுவையையும் 
முடிவுகளின் விசும்பலையும்.
பதிலற்றக் கேள்விகளாக 
சுருளுகிறது கரும்புகை.
வனத்தின் இதயத்தை வீழ்த்தி 
உருவாக்கிய இந்த வெளியில் 
நாம் எதைத் தேடுகிறோம்?

தாங்க முடியாத 
பாவங்களின் எடையால்
கனத்துக் கொண்டே போகின்றன 
நமது கரங்கள்.
காண்டாமணியின் பேரோசையாக
சூழ்கிறது நம்மை 
வெறுமையின் எதிரொலி.

இயற்கையின் எச்சரிக்கையை 
செவிடராகப் புறந்தள்ளி 
இன்னும் சாய்க்கிறோம், 
குற்றவுணர்வின்றி 
இன்னும் வெட்டுகிறோம்
நாம் எரித்துக் கொண்டிருக்கும்
எதிர்காலத்தை
பாராத குருடராக.
*
[படம்: AI உருவாக்கம்.]
*

‘புன்னகை’ நவம்பர் 2025, இதழ் 86_ல்.., 
நன்றி புன்னகை!

**
காலம் சென்ற பெரிய கவிஞர்களின் சிறந்த கவிதைகளின் அறிமுகத்துடன் ஆரம்பித்து, பல அருமையான கவிதைகள் மற்றும் விமர்சனக் கட்டுரைகளைத் தந்து,  புதிய(வர்களின்) குரல்களுடன் நிறைவுற்றுள்ளது இதழ் 86. கவிதைக்கான ஒரு சிற்றேடு! 
நூலை வாங்குவதற்கான தொடர்பு எண்: 90955 07547 ; 9865301965
பக்கங்கள்: 99 ; விலை: ரூ.100.
***





2 கருத்துகள்:

  1. மனதைத் தொட்ட கவிதை. கவிதைத் தொகுப்பில் உங்கள் கவிதையும் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. புன்னகை என்றொரு இதழா?  அச்சிதழா, மின்னிதழா?

    கவிதை அருமை.  மனிதன் தனக்குத் தானே தோண்டிக் கொள்ளும் குழி இயற்கையைச் சீண்டுவது.  புதிய சிந்தனைகளை எனக்குள்ளும்  தோற்றுவித்தன பல வரிகள்.

    பதிலளிநீக்கு