புதன், 14 மே, 2025

காட்டுக் கோழி ( Junglefowl )

ஆங்கிலப் பெயர்: Junglefowl 
உயிரியல் பெயர்: Gallus gallus 
வேறு பெயர்: சிகப்புக் காட்டுக் கோழி

சியாவைச் சேர்ந்த, காடுகளில் வாழும் கோழி இனப் பறவை.  இந்த இனத்தில் சிகப்புக் காட்டுக்கோழி, சாம்பல் காட்டுக் கோழிகள், இலங்கை காட்டுக்கோழி, பச்சைக் காட்டுக்கோழி என பல வகைகள் உள்ளன. 

பெரும்பாலும் இந்தியா, இலங்கை மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளிலும் வாழ்கின்றன. சாதாரண வீட்டுக் கோழிகளை விட அளவில் சற்று பெரிய பறவைகளாகவும் இருக்கும். 

#2

இந்தியாவில் காணப்படும் இந்த சிகப்புக் காட்டுக்கோழி இனமே தற்போதைய வீட்டுக் கோழிகளுக்கு மூதாதை என சிலரும்,

இல்லை, வெள்ளைக் கானாங்கோழிதான் முன்னோடி என சிலரும் கருதுகிறார்கள்.

ஆண் சேவல்கள் பளபளப்பான, வண்ணமயமான இறக்கைகள், நீண்ட வால் இறகுகள், கழுத்தில் சதைப்பற்றுள்ள கொண்டை மற்றும் தாடிகள் கொண்டிருக்கும். அங்கே சேவலைப் பார்க்க வாய்ப்பு இல்லாததால் அதன் படம் மட்டும் இணையத்திலிருந்து புரிதலுக்காக இணைத்துள்ளேன்.

[இணையத்திலிருந்து..]

பெண் கோழிகள் மங்கலான பழுப்பு நிற இறக்கைகளையும், சேவல்களை விட சிறிய உடலையும் கொண்டிருக்கும். பெண் கோழிகள் சூழலுக்குத் தக்கவாறு பிற உயிரினங்களுக்குப் புலப்படாத வகையில் நிற உருமறைப்பு (camouflage) செய்யும் பண்பு கொண்டவை. 

#3

இந்த இனத்தில் சேவல்கள் முட்டைகளை அடை காப்பதில் எந்தப் பங்கும் வகிப்பதில்லை. பெண் கோழிகளே இப் பணிகளைச் செய்கின்றன.

காட்டுக் கோழிகள் அனைத்துண்ணிகள். விதைகள்,  பழங்கள், செடிகளின் வேர்கள், பூக்கள் ஆகியவற்றோடு பூச்சிகள் மற்றும் சிறு உயிரினங்களையும் உணவாகக் கொள்கின்றன.

#4

வனங்களின் ஆரோக்கியத்தை அறிய இப்பறவைகளின் எண்ணிக்கை பயன்படுகிறது.

பொதுவாக அமைதியான பறவைகள்.  வீடுகளில் வளர்க்கப்படும் போது தம்மை எளிதாக அந்த சூழலுக்குப் பொருத்திக் கொள்ளக் கூடியவை.  இவற்றில் சேவல்கள் 'சேவல் சண்டை', கோயில் பலி ஆகியவற்றுக்காகப் பெரும்பாலும் வளர்க்கப்பட்டன. இறைச்சிக்காகவும் இவை வளர்க்கப்படுவதாகத் தெரிகிறது.

#5

இலங்கைக் காட்டுக்கோழி (Ceylon Junglefowl - Gallus lafayettii), இலங்கையின் தேசியப்பறவை என்பது குறிப்பிடத் தக்கது.

வனங்களின் அழிவால் வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் காட்டுகோழி இனங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இந்தியாவில் காட்டுக்கோழி இனங்கள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப் படுகின்றன.

*

இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்த தகவல்கள்.

*

படங்கள் மைசூர் காராஞ்சி ஏரி இயற்கைப் பூங்காவில் எடுக்கப்பட்டவை.

*

பறவை பார்ப்போம் - பாகம்: 123

*

7 கருத்துகள்:

  1. இவை மனிதர்களை தாக்கக் கூடியதா?  வீட்டில் வளர்ப்பார்களா?  தகவல்கள் சுவாரஸ்யம்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. நல்ல கேள்விகள். பொதுவாக அமைதியான பறவைகள்தாம். ஆனால் இனப்பெருக்கக் காலத்தில் குஞ்சுகளையும், முட்டைகளையும் தற்காத்துக் கொள்ள, மனிதர்கள் நெருங்கினால் தாக்க முற்படும்.

      வீடுகளில் வளர்க்கப்படும் போது தம்மை எளிதாக அந்த சூழலுக்குப் பொருத்திக் கொள்ளக் கூடியவை. சேவல் சண்டைகள், கோயில் பலிகள் ஆகியவற்றுக்காகவே பெரும்பாலும் வளர்க்கப்பட்டன. பின்னர் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுவதாகத் தெரிகிறது.

      இந்தக் குறிப்புகளைப் பதிவில் சேர்க்கிறேன். நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. காட்டுக்க்கோழி அழகாய் இருக்கிறது, சேவலும் நன்றாக இருக்கிறது.
    காட்டுக்கோழி விவரங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேவல் அங்கே காணக் கிடைக்கவில்லை. சேவல் வண்ணமயமாக அழகாக உள்ளது. கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. பெயரில்லா15 மே, 2025 அன்று 2:52 PM

    காட்டுக் கோழி படங்களும் தகவல்களும் நன்றாக இருக்கின்றன. சுவாரசியமான தகவல்கள். பொதுவாகவே உயிரினங்கள் (வீட்டில் வளர்க்கப்படுபவை கூட சில சமயங்களில்) தங்கள் குஞ்சுகளை, குட்டிகளைப் பாதுகாக்கும் நேரத்தில் தாக்கும்.

    படங்களை ரசித்துப் பார்த்தேன். மைசூர் உயிரியல் பூங்காவிலா இவை?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், தாய்ப்பாசம் எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். படங்கள் மைசூர் கராஞ்சி ஏரி பறவைப் பூங்காவில் எடுத்தவை. பதிவின் இறுதியில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துகளுக்கு நன்றி கீதா.

      நீக்கு