செவ்வாய், 6 மே, 2025

கருப்பு அன்னம் ( Black Swan )

 கருப்பு அன்னம்:

ஆங்கிலப் பெயர்: Black Swan
உயிரியல் பெயர்: Cygnus atratus
வேறு பெயர்: காரோதிமம் 

பிரதானமாக ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற, அளவில் பெரிதான நீர்ப் பறவை.

நியூசிலாந்தில் இந்த இனப் பறவைகள் ஒரு காலக் கட்டத்தில் முற்றிலுமாக அழியும் அளவிற்கு வேட்டையாடப்பட்டாலும் பின்னாளில் மீண்டும் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப இடம் பெயர்ந்து (வலசை) செல்கின்ற உயிரினம். 

தனியாகவோ அல்லது சிறு கூட்டங்களாகவோ காணக் கிடைக்கும். சில நேரங்களில் நூற்றுக் கணக்கில் அல்லது ஆயிரக் கணக்கில் கூட சேர்ந்து தென்படும்.

உடல் முழுவதும் கருப்பு நிறத்திலும் அலகுகள் சிகப்பாக நுனிப் பகுதியில் வெள்ளைத் திட்டுடன் இருக்கும். 

#2


வளர்ந்த கருப்பு அன்னம் சுமார் 43 முதல் 56 அங்குல நீளத்தையும், மூன்றரை முதல் ஒன்பது கிலோ எடையையும் கொண்டிருக்கும்.  இறக்கைகளை விரிக்கையில் ஐந்து முதல் ஆறரை அடி அளவு நீளத்தில் பிரமாண்டமாகத் தெரியும். மற்ற வகை அன்னங்களை விட நீண்ட கழுத்தினைக் கொண்டிருப்பது மட்டுமின்றி, "S" வடிவில் அவை வளைந்து காணப்படுவது  தனிச் சிறப்பாகிறது.

#3

பறக்கும் போது அகலமான வெள்ளை நிற இறக்கைகள் வெளிப்படும். [பழுப்பு வண்ண Pond Heron குளநாரைகளுக்கும் கூட இந்தத் தன்மை இருப்பதைக் கவனித்திருக்கிறேன், படமாக்கியிருக்கிறேன். நிற்கும் போது பழுப்பாகவும் பறக்கையில் இறக்கைகள் தூய வெள்ளையிலும் இருக்கும்.]

#4

[2012_ஆம் ஆண்டு எடுத்த படம் ஒன்றும்]

இவை எழுப்பும் ஒலி நீண்ட தொலைவுக்குக் கேட்கும், மெல்லிசை போலவும் இருக்கும். கூடு அடையும் மாலை வேளைகளிலும், இரை தேடிச் செல்லுகையிலும் ஏதேனும் குழப்பங்கள் ஏற்படுகையில் சீட்டியடிப்பது போன்ற ஒலியினை எழுப்பும்.

வானில் கூட்டமாகப் பறக்கும் போது நேர்க் கோட்டிலோ அல்லது  V வடிவத்திலோ பறக்கும் தன்மையைக் கொண்டவை.

பாரம்பரியமாக அன்னங்கள் என்றாலே வெள்ளையாக இருக்கும் எனக் கருதப்பட்டு வந்த நிலையில் கருப்பு அன்னம் வித்தியாசமான, தனித்துவமான அழகின் அடையாளமாக விளங்குகிறது.  இலக்கியத்தில் கருப்பு அன்னம் ஒரு ஆழமான குறியீடாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு கதையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பம் அல்லது மாற்றத்தைக் குறிக்க உருவகமாகப் பயன்படுத்தப் படுகிறது. நவீன இலக்கியத்தில் நசீம் நிக்கோலஸ் தாலேப் எழுதிய  "தி பிளாக் ஸ்வான்" என்ற புகழ்பெற்ற நூல், எதிர்பாராத நிகழ்வுகளின் தாக்கத்தைப் பற்றி விவரிக்கும் ஒன்றாகும். ஐரோப்பிய நாட்டுப்புறக் கதைகளிலும், ஆப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடியினரின் புராணங்களிலும் கருப்பு அன்னம் முக்கிய இடம் பெறுகிறது.

#5


அருகி வரும் உயிரினமாகக் கருதப்படும் கருப்பு அன்னங்கள் உயிரியல் பூங்காக்களிலும், பறவையினச் சேகரிப்பு நிலையங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதிக எண்ணிக்கையில் காணப்படும் ஆஸ்திரேலியாவிலும் தேசியப் பூங்காக்களிலும், வனவிலங்குச் சட்டம் மூலமாகவும் இவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

*

படங்கள் மைசூர் காராஞ்சி ஏரி இயற்கைப் பூங்காவில் எடுக்கப்பட்டவை.

*

பறவை பார்ப்போம் - பாகம்: 122

*

6 கருத்துகள்:

  1. அறியாத ஆனால் சுவாரஸ்யமான விவரங்கள். கருப்பு சிவப்பு வெள்ளை நிறம் கொண்டிருப்பதால் இவை அதிமுக பறவையோ!!!

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான விவரங்கள் . கருப்பு அன்னம் படங்கள் எல்லாம் மிக அழகு.
    தேசிய பூங்காவில் பாதுகாக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
    வெள்ளை அன்னம் மட்டும் அல்ல கருப்பு அன்னமும் அழகுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், கருப்பு அன்னமும் மிக அழகு கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. பெயரில்லா8 மே, 2025 அன்று 11:18 AM

    கருப்பு அன்னம் அழகு! படங்கள் நீங்க எடுத்த விதமும் ரொம்ப அழகா இருக்கு. எங்கு பார்த்தீங்க? இங்கா?

    விவரங்களும் The Black swan புத்தகம் பற்றிய விவரமும் அறிய முடிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா. பதிவின் இறுதியில் குறிப்பிட்டுள்ளேன். மைசூர் கராஞ்சி ஏரி இயற்கைப் பூங்காவில் எடுத்தவை. இந்தப் பூங்கா உயிரியல் பூங்காவிற்கு மிக அருகில் உள்ளது.

      நீக்கு