புதன், 21 ஜூலை, 2021

புன்னகை இதழ் 79: அலார கடிகாரத்தைத் தூக்கி எறிதல் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (13)

ம்மாதம், ஒரு கவிதைத் தொகுப்பின் வடிவில் 74 பக்கங்களுடன் வெளியாகியுள்ள “புன்னகை” சிற்றிதழின் 79_வது இதழில் நான் தமிழாக்கம் செய்த, சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் மூன்று கவிதைகள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒன்று...


அலார கடிகாரத்தைத் தூக்கி எறிதல்

என் அப்பா எப்போதும் சொல்வார்,
“முன் தூங்கி முன் எழல்
மனிதனை எப்போதும் 
ஆரோக்கியமாக, செல்வந்தனாக
அறிவாளியாக வைத்திருக்கும்.”

அக்காலத்தில் இரவு எட்டு மணிக்கெல்லாம் 
எங்கள் வீட்டில் விளக்குகள் அணைக்கப்படும்
அதிகாலையில் நாங்கள் எழுந்திடுவோம் 
காஃபி மற்றும் வறுக்கப்படும் பன்றி இறைச்சி, 
முட்டைப் பொறியலின் வாசத்திற்கு.

இந்தப் பொதுவான வழக்கத்தை 
வாழ்நாள் முழுவதும் பின் பற்றிய என் அப்பா
இளம் வயதில் நொடிந்து, இறந்தார் 
மேலும், நான் நினைக்கிறேன், 
அத்தனை விவேகமுடையவரும் அல்ல.

குறிப்பாக, அவரது ஆலோசனையை நிராகரித்த எனக்கு,
பின் தூங்கி பின் எழலே வழக்கமானது.

இப்போது,  உலகத்தையே நான் வென்று விட்டதாகச் சொல்லவில்லை,
ஆனால் எண்ணற்றப் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்க முடிந்திருக்கிறது,
பொதுவான சில ஆபத்துகளை மாற்றுவழியில் கடக்க முடிந்திருக்கிறது,
மேலும் விந்தையான, அற்புதமான சில மனிதர்களைச் சந்திக்க முடிந்திருக்கிறது.

அதில் ஒருவர்
யாரெனில்
நானே - என் அப்பாவுக்கு
ஒரு போதும் தெரியாத
யாரோ.

*

மூலம்:
"Throwing Away the Alarm Clock" By Charles Bukowski

**

கவிதைக்கான படம்: இணையத்திலிருந்து..!

**

ருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படும் ஹென்ரி சார்லஸ் புக்கோவ்ஸ்கி (1920 – 1994) , நாவலாசரியரும் சிறுகதை எழுத்தாளரும் கூட. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார். கூடப்பிறந்தவர்கள் கிடையாது. குடித்து விட்டுத் தாயையும் தன்னையும் அடிக்கும் வழக்கம் கொண்ட தந்தையை எதிர்க்க, சோகத்தை மறக்க தானும் அதே பழக்கத்தில் விழுந்தவர். லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டி கல்லூரியில் பத்திரிகைத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் பெரும்பாலும் விளிம்பு நிலை வேலைகளையேத் தொடர்ந்து பார்த்திருக்கிறார். இவரது எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. ஆறு நாவல்கள், ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள் யாவும் சுமார் அறுபதுக்கு மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. அனைத்தும் அமெரிக்க விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாகக் கொண்டவை.

***

நன்றி புன்னகை!

இதழைப் பெற விருப்பமானவர்கள் 
அணுக வேண்டிய அலைபேசி எண்: 
6381633404

***

8 கருத்துகள்:

  1. அருமையான மொழி பெயர்ப்பு. அருமையான கவிதை

    பதிலளிநீக்கு
  2. புகோவ்ஸ்கி சுவாரஸ்யமான ஆள்! நல்ல தமிழாக்கம் எனத் தோன்றுகிறது.
    ’புன்னகை’ பற்றிச் சொன்னதற்கு நன்றி

    பதிலளிநீக்கு