வெள்ளி, 29 ஜனவரி, 2021

வெண்தொண்டைச் சில்லை ( Indian Silverbill )

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (90) 
 பறவை பார்ப்போம் - பாகம்: (58)

#1

வெண்தொண்டைச் சில்லை


#2

ஆங்கிலப் பெயர்கள்:

White-throated munia; 

Indian Silverbill

#3

உயிரியல் பெயர் :

Euodice malabarica

வெண்தொண்டைச் சில்லை குடும்பத்தை சேர்ந்த, கிளைகளைப் பற்றி அமரும் 'பாசரைன்' (Passerine) வகைப் பறவை. ஆப்ரிக்க சில்வர்பில் [African silverbill - Euodice cantans] பறவைகளோடு நெருக்கமாக ஒப்பிட முடிகின்றவை. சுமார் நான்கு அங்குல உயரமே கொண்ட மிகச் சிறிய இப்பறவைகள் பெரும்பாலும் 50 முதல் 60 வரையிலுமான எண்ணிக்கையில் குழுக்களாகவே திரியும்.  எங்கள் தோட்டத்திற்கும் 10-15 வரையிலுமான எண்ணிக்கை கொண்ட குழுவாகவே வருகை புரிந்தன. 

#4


புல்வெளிகள் மற்றும் புதர்கள் நிறைந்த நிலங்களில் அதிகம் காணலாம்.  வருடத்தின் குறிப்பிட்ட காலத்தில், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் தென்படுகின்றன. படங்கள் 4,5,6 ஆகியன 3 வருடங்களுக்கு முன்னர் இவை மாநாடு நடத்திக் கொண்டிருந்தபோது எடுத்தவை:)! (மற்ற படங்கள் சமீபத்தில் 3 மாதங்களுக்கு முன்னர்  வருகை புரிந்த போது எடுத்தவை.)

#5


#6

வளர்ந்த பறவைகள் 11 முதல் 12 செ.மீ (சுமார் நான்கே அங்குல) உயரம் கொண்டவை.

ஆங்கிலத்தில் சில்வர்பில் எனப் பெயர் வந்ததற்குக் காரணம் இவற்றின் கூம்பு வடிவ, வெள்ளியும் சாம்பலும் கலந்த அலகுகள். மேல்பாகம் மண் பழுப்பு நிறத்திலும் வெண்மையும் வெளிர் மஞ்சளுமான நெஞ்சுப் பகுதியும், ஆழ்ப் பழுப்பிலான சிறகுகளையும், புசுபுசுவென்ற இறகுகளையும் கொண்டவை.

#7


உடலின் நடுப்பாகத்திலிருந்து வெளிப்புறமாக இறகுகளின் நீளம் குறைந்து கொண்டே வருவதால் வாலின் நுனி கூர்மையாகக் காணப்படும். சிப், சிப், சிர்ப், சிர்ப் எனும் தொடர்ச்சியான கீச்சொலியை எழுப்பும்.

#8


நெல், சோளம் போன்ற பயிர்களின் விதைகள் மற்றும் புல்பூண்டுகளின் விதைகளையும் உண்டு வாழ்பவை. புழுக்கள் எறும்புகளையும் இரையாக்கிக் கொள்ளும். தேன் நிறைந்த மலர்களையும் நாடிச் செல்பவை. நீர் நிலைகளில் தண்ணீரை வேகமாக உறிஞ்சிக் குடிக்கும்.

#9


சமவெளிகளில் வாழ்பவை என்றாலும் 1200 மீட்டர் உயரத்தில் இமய மலையைச் சுற்றியப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.

#10


இவற்றின் இனப்பெருக்கக் காலம் இடத்திற்கு இடம் மாறுபடும். தென்னிந்தியாவில் குளிர்காலத்திலும் வட இந்தியாவில் கோடைகாலத்திற்குப் பிறகும் கூடு கட்டும். ஒழுங்கற்ற முறையில் புல் மற்றும் நார்களைக் கொண்டு ஒரு பக்கம் திறந்தாற் போன்ற பந்து வடிவக் கூடுகளை உயரம் குறைந்த புதர்கள் மற்றும் முட்செடிகள் மேல் அமைக்கும். தூங்கணாங்குருவிகளின் பழைய கூடுகளையும் பயன்படுத்தும். சில சமயங்களில் கழுகு மற்றும் நாரைகளின் அகலமான கூடுகளின் கீழேயும் தம் கூடுகளை அமைத்துக் கொள்ளும். 4 முதல் 8 முட்டைகள் வரை இடும். பெற்றோர்களில் ஆண்- பெண் இரு பறவைகளுமே 11 நாட்கள் வரையிலும் அடை காக்கும். கூட்டில் இருக்கும்  குஞ்சுகளுக்கு உணவளிக்கும் வேலையைப் பெற்றோரைத் தவிரப் பிற வளர்ந்த பறவைகளும் (helpers - உதவியாளர்கள்) பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.

#11

**

[இணையத்திலிருந்து சேகரித்துத் தமிழாக்கம் செய்த தகவல்கள்]

***

8 கருத்துகள்:

  1. மிக அருமையான அழகான குருவிகள். எங்கள் வீட்டில் கூடு கட்டியது.
    பசும் தளைகளை, செடியின் இளம் குருத்துக்களை கிள்ளி கொண்டு வந்து வைத்து கூடு கட்டுவதே அழகு.
    கூட்டமாய் உறவுகள்புடைசூழ கிளையில் அமர்ந்து இருக்கும் காட்சி அழகோ அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இக்குருவிகளை அருகாமையில் ரசித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி. கருத்துக்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. சுவாரஸ்யமான விவரங்கள்.  எனக்கு இந்தப் பெயரெல்லாம் தெரியாது!  என் பார்வையில் எல்லாமே குருவிகள்தான்!  நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அதன் ஒலிக்குறிப்பை வைத்து நானும் அதைப் பார்த்திருப்பேனோ என்று தோன்றுகிறது.  அபாயத்தைப் பற்றிக் கவலைப்படாமல் எங்கு வேண்டுமானாலும் கூடு கட்டும் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதென்னவோ உண்மைதான். எல்லாமே குருவிகள்தாம் (munias and bulbuls). அவற்றின் வாழ்வியலில் உள்ள வித்தியாசங்களைத் தெரிந்து கொள்ளவே இந்தப் பெயர்கள். நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. மிக துல்லிய காட்சிகள் ....வெகு அழகு

    பதிலளிநீக்கு
  4. எத்தனை ஸ்வாரஸ்யமான தகவல்கள். படங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு