புதன், 18 செப்டம்பர், 2019

கணக்கு நோட்டின் கடைசிப் பக்கம் - ‘தென்றல்’ அமெரிக்கத் தமிழ் மாத இதழில்..

தென்றல் அமெரிக்கப் பத்திரிகையின் இந்த மாத இதழில் நான் எடுத்த படத்தோடு வெளியாகியுள்ள மற்றுமோர் கவிதை...

கணக்கு நோட்டின் கடைசிப் பக்கம்
 

பரந்த பள்ளி மைதானத்தின்
கிழக்கு மூலை
கல் பெஞ்சில்
தனித்து அமர்ந்திருக்கிறாள்
மவுனமாக.

பதின்ம வயதுக்கே உரிய
உற்சாகத்துடன்
வகுப்புத் தோழமைகள்
எழுப்பிக் கொண்டிருந்த கூச்சல்
அவளுக்குச் சம்பந்தமே இல்லாத
உலகமாக.

அவளது 
உள்நெஞ்சின் புழுக்கத்தை
உணராத காற்று
தவறுகிறது தலை கோத.

வாடிய அவள் முகத்தின் மேல்
அந்தி மஞ்சள் வெயிலும் 
தகிக்கிறது அனலாக.

அருகிலிருந்த செடியில்
நிலம் நோக்கிக் கவிழ்ந்திருந்த 
இளஞ்சிகப்பு ரோஜா 
நினைவு படுத்துகிறது
சென்ற வாரம் இதே கிழமையில்
தூக்கில் தொங்கிய
அம்மாவை.

பெருந்துயரை இறக்கி வைத்திட
இயற்கையிடமும்
அடைக்கலம் கிடைக்காத
இளம் மனது
வடிக்கத் தொடங்குகிறது
தன் முதல் கவிதையை
கணக்கு நோட்டின் காலியான  
கடைசிப் பக்கத்தில்,
அவளோடு அழுவதற்கு
அவளது வரிகள் மட்டுமே
துணை வருமென்று.

*

தென்றல் இதழின் இணையதளத்தில் கணக்கை உருவாக்கிக் கொண்டு வாசிக்கலாம் இங்கே .  நன்றி தென்றல்!

**
ஒலி வடிவித்திற்கு   மிக்க நன்றி திருமதி. சரஸ்வதி தியாகராஜன்!

***

10 கருத்துகள்:

  1. துயரங்களுக்கு கவிதை வடிகாலாகட்டும்.   

    பதிலளிநீக்கு
  2. அடடா... எத்தனை சோகம் அந்த பிஞ்சு நெஞ்சில்....

    நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  3. சோகமான கவிதைக்கும் உயிர் ஊட்டுகிறது உங்கள் படம்.
    குழ்ந்தையின் கணக்கு நோட்டு கவிதை மனதை கனக்க வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  4. பள்ளிச் சூழலைச் சித்திரம் போல் தீட்டி அதில் சோக கீதத்தை இசைத்து விட்டீர்கள். ஒலி வடிவில் கவிதையின் கடைசி வரிகள் இன்னும் நெருக்கமாகவும் உருக்கமாகவும். படித்து முடித்ததும் சோகம் மனதில்.

    பதிலளிநீக்கு