வியாழன், 27 ஜூலை, 2017

வெண்புருவ வாலாட்டி ( white-browed wagtail ) - பறவை பார்ப்போம் (பாகம் 15)


ஆங்கிலப் பெயர்: white-browed wagtail
நம் நாட்டில் ஏழுவகையான வாலாட்டிகள் காணப்படுகின்றன. அவற்றுள்
வெண்புருவ வாலாட்டி (white-browed wagtail) அல்லது வரிவாலாட்டிக் குருவி என்பது இந்தியாவின் ஒரே ஒரு, இடம் பெயரா, வாலாட்டிப் பறவை இனமாகும். இதன் உயிரியல் பெயர்
Motacilla maderaspatensis. மற்ற வாலாட்டிக் குருவிகளைவிடச் சற்றுப் பெரியதாக 21 செ.மீ நீளம் வரை இருக்கும். ஆண்டு முழுவதும் காணக் கூடிய பறவை இனமும் ஆகும். சிறு நீர்நிலைகளை ஒட்டி அதிகம் காணப்படுமாயினும் தற்போது நகர்ப் புறங்களில் கட்டிடக் கூரைகளிலும் மாடங்களிலும் கூடு அமைத்து வாழ்கின்றன.

#2

உயிரியல் பெயர்: 'Motacilla maderaspatensis'
இவற்றின் உடலின் மேல் பகுதி கருமையாகவும் கீழ்ப் பகுதி வெண்மையாகவும் இருக்கும். வெள்ளை வாலாட்டிகள் போல நெற்றி முழு வெள்ளையாக இருக்காது. இவை கருத்த முகத்தில் தீர்க்கமான வெண் புருவங்கள், தோளில் மற்றும் வாலின் சிறகுகளில் பளிச்சிடும் வெண் கோடுகள் கொண்டிருக்கும்.  பெண் குருவிகளை விட ஆண் குருவிகள் அடர்ந்த கருப்பாக இருக்கும். குஞ்சுகள் வளரும் வரை  சற்றே வெளிறிய சாம்பல் வண்ணத்தில் இருக்கும்.

#3
வேறு பெயர்: வரிவாலாட்டிக் குருவி 
மற்ற பல வாலாட்டிகளைப் போல இவையும் பூச்சிகளை உண்டு வாழ்பவை. இரண்டு அல்லது மூன்று, நான்கு பறவைகள் ஒன்றாகச் சேர்ந்து அங்குமிங்குமாக ஓடித் திரிந்து வெட்டுக்கிளிகள், சிலந்திகள், வண்டுகள் போன்ற பூச்சிப் புழுக்களை தேடித் தேடி உண்ணும். தன் நீண்ட வாலை நொடிக்கொருமுறை மேலும் கீழும் ஆட்டுவது, மறைந்துள்ள பூச்சிகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே. நீர்நிலைகளின் கரைகளில் கிடக்கும் கற்களின் மீது நின்று சுறுசுறுப்பாக இரை தேடிக்கொண்டிப்பதைப் பார்க்கலாம். 

#4
பூர்வீகம்: ஆசியா
நீர் நிலைகளின் அருகில், செடி மறைவில் தட்டு போன்று புல், வேர், குச்சிகள், துணித் துண்டுகள் போன்றவற்றைக் கொண்டு கிண்ண வடிவில் கூடு கட்டும். 3 முதல் 5 முட்டைகள் வரை இடும். இனப்பெருக்கக் காலம் மார்ச் முதல் அக்டோபர் வரையிலும்.

#5

அதிகாலையில் சுறுசுறுப்பாகக் குரல் கொடுத்துப் பாடத் தொடங்கி விடும். சத்தமாகவும், நீண்டதாகவும், வெவ்வேறு ராகத்திலும் பாட வல்லவை என்றாலும் பொதுவாக ‘வீச் வீச்’ என்று குரல் எழுப்பித் திரியும். 

சிறிய இப்பறவைகள் வெகு வேகமாக மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்தில் வெகுதூரம் பறக்கும் வல்லமை பெற்றவை. அப்படிச் செல்லுகையில் மேலும் கீழும், கீழும் மேலுமாகத் தாழ்ந்தெழுந்து பறக்கும். 

பழங்காலத்தில், பாடும் திறனுக்காக இவைக் கூண்டுப் பறவைகளாக வளர்க்கப்பட்டிருக்கின்றன நம் நாட்டில். 


***

தகவல்கள்:
இணையத்திலிருந்து சேகரித்துத் தமிழாக்கம் செய்தவை

பல்வேறு சமயங்களில் எடுத்த ஒளிப் படங்கள்:
என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 18 )
பறவை பார்ப்போம் (பாகம் 15)

****

12 கருத்துகள்:

  1. படங்களும், தகவல்களும் சுவாரஸ்யம். மரத்தின் மீதோ, உயரங்களிலோ கட்டாமல், தன் கூட்டை தரையிலேவா அமைக்கிறது? பாதுகாப்புப் பற்றிக் கவலைப்படுவதில்லை போலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பத்தியில் சொல்லியிருக்கிறேன் பாருங்கள், ‘...தற்போது நகர்ப் புறங்களில் கட்டிடக் கூரைகளிலும் மாடங்களிலும் கூடு அமைத்து வாழ்கின்றன. ...’! நீர் நிலைகளுக்கு அருகே செடி மறைவுகளில் கூடமைக்க சாத்தியங்கள் இருக்கின்றன. திரு. கல்பட்டு நடராஜன் அவர்கள் இது போல பட்டாணி உள்ளான் எனும் பறவை நீர் நிலையின் கரையில் முட்டைகளை அடை காக்கும் படம் ஒன்றை எடுத்திருக்கிறார்.

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. மாயவரத்தில் மொட்டை மாடிக்கு வரும். கீழ்தளத்தில் எங்கள் இரண்டு சக்கர வாகனத்தில் முன்பு உட்கார்ந்து வாலாட்டி பாடியதை பகிர்ந்து இருந்தேன் முகநூலில்.
    நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.
    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  3. வெண்புருவ வாலாட்டி...

    பறவையும் அழகு பெயரும் அழகு...

    பதிலளிநீக்கு
  4. அழகிய படங்களுடன் விபரங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  5. அசப்பில் பார்த்தால் புறா போல் தோன்றுகிறதோ நான் இப்பறவையை இதுவரைக் கண்டதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இந்தப் பறவைகளை இப்போதைய வீட்டுக்கு வந்தபிறகே அறிய வருகிறேன்:). நன்றி GMB sir.

      நீக்கு