செவ்வாய், 16 மே, 2017

வினா வினா - சொல்வனத்தில்..

புரிபடாத விடயங்கள்
குறித்த வினாக்கள்
புரிந்து செய்த செயல்கள்
குறித்த மனக்கிலேசங்கள்
ஆகாயத்தின் பிரமாண்டத்துடன்
அச்சுறுத்தின பெரிதாக

பெரிய வினாக்களுக்கு
தயாராக இருந்தன
ஒரு நட்சத்திர அளவில்
எப்போதும் என்னிடத்தில்
சிறிய விடைகள்

காலைப் பனித்துளி அளவிலான
சிறிய வினாக்களுக்கோ
விடாது பெய்யும் அடைமழையாக
சரளமாக அளிக்க இயன்றது
விரிவான விடைகளை

சிறிய வினாக்களுக்கான
என் பெரிய விடைகளில்
தைரியம் தன்னம்பிக்கையோடு
கலந்தே இருந்தன அகந்தையும்
சற்று அலட்சியமும்.
தம்மை ஒப்புக் கொள்ளச் சொல்லி
நம்பச் சொல்லி 
அதிகாரத்துடன் அதட்டின 

பெரிய வினாக்களுக்கான
சிறிய விடைகளில்
குழப்பமும் தயக்கமும் இருந்தாலும்
பணிவுடனும் பயத்துடனும்
வெளிப்பட்டு அவை என்
ஆன்மாவுக்கு நெருக்கமாயின

சிறிது பெரிதாகி
பெரிது சிறிதாகி 
உயர்வெது தாழ்வெது
எழுந்த வினா
பெரிதா சிறிதா
நான் தீர்மானிக்கக் காத்திருக்கின்றன
எனது விடைகள்

சிறு பனித்துளிக்குள்
பிரபஞ்சமே அடங்கி இருப்பதையும்
முழு இரவுக்குப் போதுமான போரொளியை 
சிறு நட்சத்திரங்கள் கொண்டிருப்பதையும்
முழுமையாக நான் உணரும் வரை
என்னை விடப் போவதில்லை..
பெரிய வினாக்களுக்கான சிறிய விடைகளும்
சிறிய வினாக்களுக்கான பெரிய விடைகளும்.
***

நன்றி சொல்வனம்!
***

16 கருத்துகள்:

  1. ஆஹாஅற்புதம்
    கருத்தும் சொற்கட்டும்
    முடித்த விதமும்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஆகாயத்தின் பிரமாண்டம், நட்சத்திர அளவு, பனித்துளி, அடைமழை என ஒப்புமைகள் மிக அழகு. பணிவு, பய உணர்வு இறைவனின் கொடை. அற்புதமான சொல்லாடலும்,கருத்தும்.

    பதிலளிநீக்கு
  3. பல சிறிய , பெரிய வினாக்களும் ...

    சில சிறிய , பெரிய விடைகளும்...

    இரு முறை, பல முறை வாசித்தேன்...சில குழப்பங்களும், பல தெளிவுகளும்...

    அருமை...

    பதிலளிநீக்கு