வியாழன், 9 பிப்ரவரி, 2017

செங்குதச் சின்னான் (Red Vented Bulbul) - தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (9)

 செங்குதச் சின்னான்
உயரம்: 20 செ.மீ
ஆயுள்:  9-10 ஆண்டுகள்

6 பிப்ரவரி 2017 தினமலர் “பட்டம்” இதழின்.. 

பக்கம் நான்கில்.. 


படத்துடன் சேகரித்த தகவல்கள்..





ஆங்கிலப் பெயர்:  Red-vented Bulbul 
வேறு பெயர்கள்: 
செங்குதக் கொண்டைக்குருவி, 
கொண்டைக்கிளாறு, 
கொண்டலாத்தி (அ) கொண்டலாட்டி

உயிரியல் பெயர்:  Pycnonotus cafer

மைனாவை விடச் சிறிய, மரங்களில் அடையும் (passerine) பறவைகளுள் ஒன்றாகும். சமவெளிகளிலும் வீடுகளுக்கருகிலும் சிறு குன்றங்களிலும் அதிகமாகக் காணக் கிடைக்கும். மலைப்பகுதிகளில் காணப்படும் நீண்ட கருங்கொண்டையைக் கொண்ட செம்மீசைச் சின்னான்களைப்  போலன்றி
செம்மீசைச் சின்னான்
Red-whiskered bulbul (Pycnonotus jocosus)
இவற்றின் கொண்டைகள் சற்றே சிறிய அளவில் இருக்கும். தலையும் கழுத்துப் பாகமும் கருப்பாக இருக்கும். விழிகள், அலகு மற்றும் கால்கள் எண்ணெய்க் கருப்பில்  இருக்கும். உடலும் உடலை மூடும் இறகுகளும் பழுப்பு நிறமாக இருக்கும். சிறகுகளின் ஓரங்களில் இருக்கும் வெண்மை செதிலுற்றது போன்றதொரு தோற்றத்தை இறகுகளுக்குக் கொடுக்கும். வயிற்றுப்பகுதியும் மேல்-வாலின் மறைவுப்பகுதியும் நல்ல வெண்ணிறமாக இருக்கும். நீண்ட கரும் வாலின் விளிம்பு மட்டும் வெண்ணிறத்தில் கோடு போலத் தெரியும். இப்பறவையின் முக்கிய அடையாளம், வாலின் அடிப்பாகம் செக்கச் செவேலென இரத்தச் சிவப்பாகக் காட்சியளிக்கும். இதனாலேயே செங்குதச் சின்னான் எனும் பெயரைப் பெற்றன. ஆண், பெண் பறவைகள் தோற்றத்தில் ஒரே மாதிரியாகத் தெரியும் என்றாலும் முழுதாக வளர்ச்சியடையாத பறவைகளின் இறகு வண்ணம் சற்று மங்கலாக இருக்கும். ஆண்டு முழுவதுமே உற்சாகமான குரலில் பரபரப்பாகக் கூவும். வெவ்வேறு விதமான ஒலிகளில் பாடும்.

இவற்றின் உணவு - பழங்கள், பூக்களின் மடல்கள், தேன் மற்றும் சிறு புழு பூச்சிகள். கூடுகளைத்  தட்டையாகக் கிண்ண வடிவில் மெல்லிய குச்சிகள், காய்ந்த வேர்கள், புற்கள் மற்றும் கிடைக்கிற உலோகக் கம்பிகளையும் கூட உபயோகித்துக் கட்டுகின்றன. பெரும்பாலும் 6 முதல் 9 அடி உயரத்திலான தாழ்ந்த கிளைகள் மற்றும் வீடுகளின் மேற்புறங்களில் கட்டிக் கொள்கின்றன. 2 முதல் 3 முட்டைகளை இடும். 14 நாட்களில் குஞ்சுகள் வெளி வரும். 6-7 தினங்களான குஞ்சுகளை எடுத்து வளர்த்து பிறகு பறக்கவிட்டு விட்டாலும், நாம் அழைக்கும் போது அருகே வந்து கொடுக்கும் உணவைப் பிரியமாக வாங்கிக் கொள்ளும்.

இந்தியா முழுவதிலும்,குறிப்பாகத் தென்னிந்தியாவில் சற்று அதிகமாகவே காணப்படும் பறவை.  தெற்காசியாவில் இந்தியாவில் தொடங்கி இலங்கை, கிழக்கில் மியான்மர், தென்மேற்கு சீனா வரை பரவலாகக் காணப்படுவதோடு, உள்ளூர் பறவையாகவே கருதப்படுகிறது.

இரு நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவில் இவை செல்லப் பறவைகளாகக் கூண்டில் வளர்க்கப் பட்டிருக்கின்றன. கை விரல்களில் நூலினால் இவற்றைப் பிணைத்துக் கொண்டு ஒன்றோடு ஒன்றை மோத விடும் விளையாட்டுகளும் நடந்துள்ளன. சண்டையில் எதிராளியின் சிகப்பு இறகுகளைப் பறிப்பதே வெற்றியாக இருந்திருக்கிறது.
*
நன்றி தினமலர் பட்டம்!
**
பறவை பார்ப்போம் (பாகம் 9)
படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில் (பாகம் 10)

***

15 கருத்துகள்:

  1. அழகிய படம். சுவாரஸ்ய விவரம். இதே போல ஒரு பறவை - ஆனால் கொண்டை இல்லாமல் - சென்ற வாரம் எங்கள் மொட்டை மாடிக்கு வந்து, அங்கு உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த என்னைச் சுற்றி சுற்றி வந்து சிரித்தது! அதாவது அது கத்துவதே பி எஸ் வீரப்பா போல சிரிப்பு...!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புல்புல் பறவைகளில் பல வகைகள் உண்டு. வில்லச் சிரிப்பு சிரிக்கும் பறவை மறுபடி கண்ணில் பட்டால் ஒரு மொபைல் க்ளிக் எடுத்துப் பகிருங்கள்:).

      நீக்கு
  2. அழகான புல்புல் . மாயவரத்தில் இருக்கும் போது எங்கள் மொட்டைமாடிக்கு தினம் வரும் நான் வைக்கும் சாப்பாட்டை சாப்பிட. மொட்டை மாடி படிக்கு கீழே கூடு கட்டியதை பதிவு போட்டு இருந்தேன் முன்பு. மதுரையில் சில இடங்களில் காணப்படுகிறது.

    தினமலர் பட்டத்தில் பார்த்தேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. நன்றி கோமதிம்மா. மொட்டை மாடியில் பறவைகளுக்கு நீங்கள் உணவளிக்கும் பதிவு பார்த்திருக்கிறேன். கூடு கட்டிய பதிவில் லிங்க், நேரம் இருந்தால் கொடுங்களேன்.

      நீக்கு
    2. http://mathysblog.blogspot.com/2012/08/blog-post.html

      நீங்கள் கேட்டதை இப்போதுதான் பார்த்தேன்.
      கூடு கட்டிய பதிவின் லிங். அப்போது காமிரா சின்னது ஜூம் ஒரளவு தான் செய்ய முடிந்தது.

      நீக்கு
    3. பதிவில் நட்சத்திர மீனைப் பார்த்ததும் முன்னர் படித்த நினைவு வந்து விட்டது:). சுட்டிக்கு நன்றி.

      நீக்கு
  3. அருமை... அழகான படங்களும் தகவல்களும்.. இங்கேயும் புல்புல்கள் உள்ளன என்று சமீபத்தில்தான் பார்த்து வியந்தேன். பொதுவாக hoopoe-வைத்தான் கொண்டலாத்தி என்று எங்கள் பக்கம் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா. கொண்டைக்குருவிகளுக்குப் பொதுவான பெயராக ‘கொண்டலாத்தி’ இருக்கிறது. Hoopoe பறவைக்குதான் அந்தப் பெயர் மிகப் பொருத்தம். அதற்கு முதன்மை பெயர் என்றால் மற்ற கொண்டைக் குருவிகளுக்கு nick name போலத் தெரிகிறது :).

      நீக்கு