சனி, 22 நவம்பர், 2014

“நம்பிக்கை மனுஷிகள்” - குறும்பட வெளியீடு


வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி மலர்ந்த முகம், உதவும் உள்ளம், உற்சாகமான பேச்சு, உறுதியான நம்பிக்கை, தெளிவான சிந்தனை கொண்ட சகோதரிகள் .Muscular dystrophy-தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட இவர்கள் கடந்த வந்த பாதை, வலிகளை வலிமையாக்கிக் கொண்ட விதம், தளராத போராட்ட குணம் இவற்றால் வியக்கவும் பாராட்டவும் வைக்கிறார்கள்.

சக்கர நாற்காலிகளில் இருந்தபடி இவர்கள் ஆற்றிவரும் ஆக்கப்பூர்வமான பணிகள் அதிசயிக்க வைக்கின்றன. இயன்றவரை தங்கள் வேலைகளைத் தாங்களாகப் பார்த்துக் கொள்கிறார்கள் என்றாலும் இப்போதும் வெளியிடங்களுக்குப் பயணம் செய்ய மற்றவர் உதவியை நாடவே வேண்டியிருக்கிறது. பல கிராமங்களுக்கும் பயணப்பட்டு, தம்மைப் போல் பாதிக்கப்பட்டவர்களைத் தேடிச் சென்று, அவர்தம் பெற்றோருடன் பேசி, தாங்கள் எப்படி இந்த அளவுக்குத் தன்னம்பிக்கையோடு இயங்குகிறோம் என்பதையே முன் உதாரணமாகக் காட்டி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதில்தான் வித்தியாசப்பட்டு நிற்கிறார்கள் இந்தச் சகோதரிகள்.

இந்நோய்க்கான மருந்து இன்றுவரை கண்டறியப்படாத நிலையில்.. ஆயுட்காலமும் குறைவு என மருத்துவர்கள் கைவிட்ட நிலையில்.. பெரும்பாலான பெற்றோர் விதி விட்ட வழி என எந்த சிகிச்சையும் தேவையில்லை என்ற முடிவில் இருக்க, அவர்கள் மனதை மாற்றி அக்குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்து வருகின்றனர். “உங்களைச் சந்தித்த பிறகே சிரிக்க ஆரம்பித்துள்ளேன்’ என இவர்களிடம் சிகிச்சைக்கு வந்த சிறுமி சொன்னதையே தம் வெற்றியாக அகமகிழும் இச்சகோதரிகள் “ஆதவ் ட்ரஸ்ட்” [ Aadhav Trust, 489-B, Bank Staff Colony, Hasthampatty, Salem – 636007, Tamil Nadu, INDIA] எனும் அமைப்பைத் தொடங்கி தங்கள் சேவையை ஆற்றி வருகின்றனர். யோகா, ஃபிஸியோதெரபி உட்பட இவர்கள் வழங்கும் சிகிச்சையினால் வருகிறவர்கள் வாழ்வில் ஏற்படும் பெரிய மாற்றங்கள் தங்களுக்கு மனநிறைவைத் தருவதாகச் சொல்கிறார்கள். இவர்களின் உதவியை நாடி வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு இப்போது இயங்கும் இடமும் இருக்கும் வசதிகளும் போதுமானதாக இல்லாததால், இன்னும் பெரிய அளவில் இதை எடுத்துச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுப்பட்டிருக்கும் சகோதரிகளின் எண்ணம் ஈடேற வாழ்த்துவோம். உதவுவோம்.

இவர்களது அத்தனை செயல்பாடுகளுக்கும் பக்கபலமாக இருந்து வருகிறவர்களுக்கும், குறும்படமாக “நம்பிக்கை மனுஷிகளை” நம் முன்னே கொண்டு வந்திருக்கும் திருமதி. கீதா இளங்கோவனுக்கும் நம் பாராட்டுகள்!

பதினைந்து நிமிடங்கள் ஒதுக்கி இந்த நம்பிக்கை மனுஷிகளைச் சந்தியுங்கள்!


இன்று பத்துமணி முதல் பனிரெண்டு மணி வரையிலுமாக வெளியாகிறது இக்குறும்படம் நண்பர்கள் பலரின் தளங்களில். விருப்பமானவர்கள் தங்கள் சிறு விமர்சனத்துடன் குறும்படத்தைத் தங்கள் பக்கங்களில் பகிர்ந்திடலாம்.
***

14 கருத்துகள்:

  1. படத்தைப் பார்த்தேன். மனம் ஏதோ செய்ய ஆரம்பித்தது. அவர்களுடைய நம்பிக்கையும் மன உறுதியும் பாராட்டத்தக்கது. பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பாராட்டுகள்.

    எங்கள் வீட்டில் என் ஒன்று விட்ட சகோதரியின் மகன் இந்த மாதம் 17 ஆம் தேதி அன்று இதே நோய்க் காரணத்தால் மறைந்தான். 17 வயது. கண்கள் தானம் செய்தான்.

    பதிலளிநீக்கு
  3. @ ஸ்ரீராம்.

    வருத்தம் அளிக்கும் செய்தி. குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கப் பிரார்த்தனைகள். கண் தானம் பாராட்டுக்குரிய செயல். நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  4. குறும்படம் பார்த்தேன். என் கூடவும் இந்த மாதிரி பாதிக்கப் பட்ட பெண் படித்தாள் அவள் அம்மா அழைத்து வருவார்கள்.

    தங்கள் குறையை பெரிது படுத்தாமல் சகோதரிகள் இருவரும் நம்பிக்கையுடன் தங்களை போல் உள்ளவர்களுக்கு உதவ முன் வருவது பாராட்ட வேண்டிய விஷ்யம். அவர்களை வணங்க தோன்றுகிறது. பெண் என்பதால் ஏற்படும் கஷ்டங்களை தங்கை சொல்லும் போது கடவுளே ஏன் இந்த நிலை இந்த சிறு பெண்களுக்கு கொடுத்தாய் ? என்று கேட்க தோன்றுகிறது.
    திருமதி .கீதா இளங்கோவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. சகோதரிகள் இருவரும் நம்பிக்கையுடன் தங்களை போல் உள்ளவர்களுக்கு உதவ முன் வருவது பாராட்ட வேண்டிய விஷ்யம்.
    பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. பாராட்டுகள்...

    திருமதி. கீதா இளங்கோவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. கண்களில் நீர் மல்க இந்தக் குறும்படத்தைப் பார்த்தேன். எனது தோழியின் இரண்டு குழந்தைகளுக்கும் இதுபோல நோய். இரண்டாமவன் 13 வயதில் இறந்து போனான். பெரியவன் 25 வயது வரை இருந்தான். என் தோழி தான் அந்த முழு வளர்ச்சியடைந்த பையனை தூக்கிக்கொண்டு போய் பாத்ரூமில் விடுவதிலிருந்து எல்லாம் செய்து கொண்டிருந்தார். ஒரு பக்கம் படுத்துவிட்டால் அடுத்த பக்கம் திரும்ப முடியாது. அம்மா தான் வந்து அந்தப் பக்கம் திருப்பி விடவேண்டும். அந்த பிள்ளை படும் அவஸ்தை, அவன் தாய் படும் அல்லல் பார்க்கவே முடியாது. மனதைப் பிசையும்.

    பெண்களையும் இந்த நோய் தாக்கும் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன்.

    எனது வலைத்தளத்தில் இந்தக் குறும்படத்தை பகிர்ந்து கொள்ளுகிறேன்.

    நன்றி ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  8. இன்றுதான் அக்கா இந்தப் படத்தைப் பார்த்தேன்... இந்த மனுஷிகளுக்குள்தான் எத்தனை நம்பிக்கை...

    தங்களது உடல் நோய் குறித்த வருத்தம் சிறிதும் இன்றி... ஆஹா பாராட்டுவோம்...

    பதிலளிநீக்கு
  9. @ திண்டுக்கல் தனபாலன்,

    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  10. @ Ranjani Narayanan,

    பகிர்ந்து கொண்டிருக்கும் செய்தி வருத்தம் அளிக்கிறது.

    நல்லது. குறும்படத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    நன்றி ரஞ்சனிம்மா.

    பதிலளிநீக்கு
  11. @-'பரிவை' சே.குமார்,

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு