செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

குழந்தைகளின் அழுகுரல் ( பாடல் 1) - எலிஸபெத் பேரட் பிரெளனிங்


1.
குழந்தைகள் அழுவது கேட்கிறதா, ஓ என் சகோதரர்களே,
வருடங்களோடு வரப்போகும் சோகங்களுக்கு முன்னதாகவே?
தாய் மடியில் தங்கள் பிஞ்சுத் தலைகளைச் சாய்த்துக் கொண்டாலும்,-
நிறுத்த முடியவில்லை வழிந்தோடும் கண்ணீரை.
ஆட்டுக்குட்டிகள் கூச்சலிட்டுத் திரிகின்றன புல்வெளியில்;
பறவைக் குஞ்சுகள் கீச்சிடுகின்றன தம் கூடுகளில்;
மான் குட்டிகள் நிழலோடு விளையாடுகின்றன;
அன்றலர்ந்த மலர்கள் ஆடிக் காற்றில் ஆடுகின்றன;
ஆனால் இந்தப் பிஞ்சு, இளம் பிஞ்சுக் குழந்தைகள், ஓ என் சகோதரர்களே,
சொல்லொண்ணாத் துயரில் அழுகிறார்கள்!
மற்றவர்களின் விளையாட்டு நேரத்தில் அழுது கொண்டிருக்கிறார்கள்
இந்தச் சுதந்திரத் திருநாட்டில்.
*
மூலம்: “The Cry of the Children”
by Elizabeth Barrett Browning
*
விக்டோரியன் காலக்கட்டத்தில் வாழ்ந்த எலிஸபெத் பேரட் பிரெளனிங் எழுதிய கவிதைகள் இங்கிலாந்தில் மட்டுமின்றி அமெரிக்க நாட்டிலும் போற்றப்பட்டவை. 1806_ஆம் ஆண்டில் துர்ஹாமில் பிறந்தவர். பனிரெண்டு குழந்தைகளில் பெற்றோருக்கு மூத்த குழந்தை. வீட்டிலேயே கல்வி கற்றவர், ஆறாவது வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கியவர். 1844_ல் வெளியான கவிதைத் தொகுப்பு பெரும் பெயரைத் தேடித் தந்தது. இவரது எழுத்துகளால் ஈர்க்கப்பட்ட எழுத்தாளர் ராபர்ட் பிரெளனிங் உடனான நட்பு பின்னாளில் திருமணத்தில் முடிந்தது. அதை ஏற்றுக் கொள்ளாத பெற்றோரையும் உடன் பிறந்தோரையும் விட்டு விலகி இத்தாலிக்குச் சென்று விட்டார் கணவருடன். இவர்களுக்கு ராபர்ட் பேரட் பிரெளனிங் என்ற ஒரு மகன் உண்டு. 1861_ல் நுரையீரல் பாதிப்பால் காலமடைந்தார். அதற்குப் பிறகு, இவரது கடைசிக்காலப் படைப்புகளையும் தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கிறார் கணவர் ராபர்ட் பிரெளனிங்.
“குழந்தைகளின் அழுகை” 13 பத்திகளைக் கொண்ட இப்பாடல்களில் குழந்தைத் தொழிலாளர்களின் வேதனையையையும் அவலத்தையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார் கவிஞர். இங்கிலாந்தின் தொழிற்சாலைகளிலும், நிலக்கரிச் சுரங்கங்களிலும் குழந்தைகள் பட்ட சிரமங்கள், விளையாடச் சொன்னால் கூட மறுத்து விடும் அவர்களின் பயந்த மனநிலை, சுரங்கங்களில் வேலை பார்ப்பதால் சின்ன வயதிலேயே ஏற்பட்ட வியாதிகள், அதனால் பல குழந்தைகள் மரணித்த கொடுமை ஆகியவற்றைப் பேசும் இந்தப் பாடல்கள் 1842_ஆம் ஆண்டில் Blackwoods பத்திரிகையில் வெளியாகி, பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான குரல்களை எழுப்பி, 1844_ல் சட்டத் திருத்தங்களுக்கும் வித்திட்டிருக்கிறது.
*
[அடுத்த 12 பாடல்களும் இரண்டு இரண்டாகத் தொடரும்..]
படங்கள்: நன்றி இணையம்

6 கருத்துகள்:

  1. குழந்தைத் தொழிலாளர் கொடுமை. துயரத்தின் வரிகள். அருமை.

    பதிலளிநீக்கு
  2. 1844ல் குழந்தைத் தொழிலாளர் கொடுமை இன்னும் ஓயவில்லையே!

    மனதை வருத்தும் கவிதை.
    எலிஸபெத் அவர்களின் கவிதையை அருமையாக மொழிபெயரத்து கொடுத்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  3. கவிதை மனதைச் சற்று கனமாக்கித்தான் விட்டது. கவிதையுடன் சேர்த்து கவிஞரின் விரிவான அறிமுகமும் நன்று.

    பதிலளிநீக்கு