புதன், 5 மார்ச், 2014

பாதுகாப்பு – சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை (2)

என்னை வருத்தத்துக்கு உள்ளாக்குகிறது அடுத்த வீடு.
அதிகாலையில் எழுந்து வேலைக்குச் செல்லும்
கணவனும் மனைவியும் வெகு சீக்கிரமாக
சாயும்பொழுதில் வீடு திரும்பி விடுகிறார்கள்.
இளம் மகனும் மகளும் கொண்ட அவர்களது
வீட்டின் விளக்குகள் அனைத்தும்
இரவு ஒன்பது மணிக்குள் அணைக்கப்பட்டு விடும்.
மறுநாள் காலையில் மீண்டும் கணவன் மனைவி இருவரும்
அதிகாலையில் எழுந்து வேலைக்குச் சென்று
சாயும்பொழுதில் வீடு திரும்புவார்கள்.
இரவு ஒன்பது மணிக்கெல்லாம்
விளக்குகள் அணைக்கப்பட்டு விடும்.

என்னை வருத்தத்துக்கு உள்ளாக்குகிறது அடுத்த வீடு.
அவர்கள் இனிமையானவர்கள், எனக்கு
மிகவும் பிடிக்கும் அவர்களை.

என் கண்ணெதிரே மூழ்கிக் கொண்டிருக்கும் அவர்களைக்
காப்பாற்ற முடியாதவனாக இருக்கிறேன்.

அவர்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் வீடற்றவர்கள் அல்ல.

ஆனால் அதற்குத் தருகிற விலை
கொடுமையானது.

சிலவேளைகளில் காலைப் பொழுதில்
நான் அந்த வீட்டைப் பார்ப்பேன்
அந்த வீடும் என்னைப் பார்க்கும்
அதன் விசும்பலொலி எனக்குக் கேட்கும்
ஆம், கேட்கும், நான் உணர்ந்திருக்கிறேன்.
*

அதீதம் 2014 மார்ச் முதலாம் இதழுக்காகத் தமிழாக்கம் செய்த கவிதை.

மூலம் ஆங்கிலத்தில்..
“Safe” by Charles Bukowski
*

படம் நன்றி: இணையம்
**

14 கருத்துகள்:

  1. படிப்பவர்களும் நிச்சயம் உணர்வார்கள்
    அற்புதமான கவிதையை அருமையாக
    மொழிபெயர்த்துத்
    தந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நகரங்களில் இந்த விசும்பலொலி அதிகம் தான்... கொடுமை தான்...

    தமிழாக்கத்திற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  3. அருமை. பணத்தின்பின் வாழ்வு! இயந்திரமயமான வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
  4. இரண்டு விஷயங்கள் ராமலக்ஷ்மி.

    ஒன்று :உங்களின் இந்தப் பதிவு/மொழிபெயர்ப்பு மூலம் சார்ல்ஸ் புகோவ்ஸ்கி எனக்கு அறிமுகம்.

    இரண்டு: எனக்கு இப்போது தெரியவந்திருக்கிறது அதீதம் இணைய இதழ் பற்றி. படைப்புகளை அனுப்ப முயற்சிக்கிறேன்.

    சார்ல்ஸ் புக்கோவ்ஸ்கியின் 'What can we do?' என்கிற கவிதையையும் நீங்கள் மொழிபெயர்த்து வெளியிடலாம்.
    நன்றி.
    -ஏகாந்தன்

    பதிலளிநீக்கு
  5. @aekaanthan,

    நல்லது. முயன்றிடுகிறேன். நன்றி.

    அதீதத்துக்கு படைப்புகளை அனுப்பி வையுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. நகரங்களில் பல வீடுகளில் இதே நிலை.....

    நல்ல கவிதை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. இயந்திரமான வாழ்க்கையில் வீடுகளின் நிலை, அற்புதமான கவிதை.

    பதிலளிநீக்கு