வியாழன், 31 டிசம்பர், 2009

சில ஸ்தலங்கள்.. சில படங்கள்.. பலப்பல நன்றிகள்..!

என் எழுபத்தைந்தாவது பதிவு. நான் பதியும் வேகத்துக்கு சதம் காண இன்னும் எவ்வளவு காலமாகும் எனத் தெரியாததாலே முக்கால் சதம் முடித்ததையும் முன் வைக்கிறேன்:)!

இந்த ஆண்டிலும் என் கூடவே வந்து வாசித்து கருத்து சொல்லி ஊக்கம் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

இருதினம் முன்னே என் பிறந்த தினத்தன்று பதிவிட்டு வாழ்த்திய ஆனந்த், தமிழ் பிரியன், ஆயில்யன், முத்துலெட்சுமி மற்றும் வல்லிம்மாவுக்கும் தொடர்ந்து வாழ்த்தியிருந்த அத்தனை பேரின் அன்புக்கும் நெகிழ்வுடன் இங்கும் என் நன்றிகள்!

எழுதும் நம்மை பலரிடம் கொண்டு சேர்த்து வரும் திரட்டிகளான தமிழ்மணத்துக்கும் தமிழிஷுக்கும் நன்றிகள். ஆறு மாதங்களுக்கு முன்னர் தமிழிஷில் இணைந்தேன். வாக்களித்து தொடர்ந்து அங்கு பதிவுகளை 'பிரபல படைப்புகள்' ஆக்கிய அனைவருக்கும் நன்றிகள்! தமிழ்மணத்தில் பரிந்துரைத்தவர்களுக்கும் நன்றிகள்!

இவ்வருடத்தில் என் படைப்புகள் பலவற்றை வெளியிட்டும், பதிவுகள் சிலவற்றை குட்ப்ளாக்ஸ் பிரிவில் பரிந்துரைத்தும் உற்சாகம் தந்த யூத்ஃபுல் விகடனுக்கு நன்றிகள்!

வார்ப்பு கவிதை வாராந்திரியில் தொடர்ந்து கவிதைகள் வெளிவருவதும்; கலைமகள், வடக்கு வாசல், இலக்கியப்பீடம் ஆகியவற்றில் தடம் பதிக்க முடிந்ததும்; தேவதையில் வலைப்பூ அறிமுகமானதும் கூடுதல் மகிழ்ச்சி.

சென்னைப் புத்தகத் திருவிழாவையொட்டி இந்த வாரம் ஆதிமூலகிருஷ்ணன் பதிவர்களைக் கண்ட தொடர் பேட்டியில் எனது பங்களிப்பு இங்கே. அனைவரது பேட்டியும் ஒருதொகுப்பாக இங்கே. நன்றி ஆதி!


PiT போட்டிகளுக்கு மட்டுமேயென புகைப்படப் பதிவுகள் தந்து வந்த நான் 'தேவதை' தந்த உற்சாகத்தில், அவர்கள் சிலாகித்திருந்த ‘பேசும் படங்கள்’ எனும் தலைப்பிலேயே அவ்வப்போது புகைப்படங்களைப் பகிர்ந்து வர எண்ணியதின் முதல் கட்டமாக சில மாதங்கள் முன்னர் சென்றிருந்த ஸ்தலங்களின் படங்கள் பார்வைக்கு...

படங்கள் கணினித்திரையை விட்டு வெளியேறித் தெரிந்தால் please click view-zoom-zoom in! [குறிப்பாக இத்தகவல் திவா அவர்களுக்காக:)!]

மதுரை மீனாக்ஷி சுந்தரேஷ்வரர்


வானுயர்ந்த கோபுரமும்
தரணி போற்றும் பொற்றாமரைக் குளமும்




தகதகக்கும் தங்கத் தாமரை






மதுரை கூடலழகர்
நெடிந்துயர்ந்த தங்கஸ்தூபியும்
நாற்திசைப் பார்த்திருக்கும் நந்தி(கள்) மாடமும்



பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்



திருக்கோவிலின் தெப்பக் குளம்





திருச்செந்தூர்




கனகவேல் காக்க



அண்ணன் உலாப் போகும் நேரம்


குளித்து முடித்து வெளியில் கிளம்பக்
குஷியாய் போடுகிறார் ஆட்டம்

*** *** ***


தம்பிக்கு ஓய்வு நேரம்


கழுத்து மணிகள் கழற்றி ஆணியில் போட்டாச்சு
‘தூங்கலாமா’ கண்கள் சுழற்றி சிந்தனை வந்தாச்சு
*** ***


கடலருகே அலையலையாய் பக்தர்கூட்டம்


சுற்றிவரும் பிரகாரம்



எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

திங்கள், 21 டிசம்பர், 2009

பவனி


பளபளக்கும் பட்டுடையும்
மினுமினுக்கும் நகைநட்டும்
சரிகை இழையோடும்
தலைப்பாகையுமாய்..
அலங்கரித்த
வெண்புரவிகளில்
கம்பீரமாய் பெருமிதமாய்
அரசத்தம்பதியர் வீற்றுவர
கண்நூறுதான் கண்டுமகிழ..

ஊர்உலா முடிந்து
உடைமாற்றி நகை களைந்து
நின்றார்கள் கூலிக்கு
இன்றாவது கிடைக்குமாவென..

கனைக்காத குதிரைக்குக்
கால்களாய் இருந்த
களைப்பு மிகுதியில்
ராஜாவும்..
செழிக்காத கலைக்குச்
சேவகியாய்-
மெய் வருத்திப்
பொய்க் களிப்புடன்
பவனிவந்த ராணியும்!
***



படம் நன்றி: வடக்கு வாசல்
[இக்கவிதைக்காகவே ஓவியர் சந்திர மோகன் வரைந்தது].


  • 'வடக்கு வாசல்' பத்திரிகையின் டிசம்பர் 2009 இதழிலும் மற்றும் அதன் இணைய தளத்திலும் வெளிவந்துள்ள கவிதை.



ஞாயிறு, 13 டிசம்பர், 2009

ஏக்கம்


விருந்தினர் வருகை
நாளெல்லாம் வேலை

'இன்று வகுப்பிலே..'
'பக்கத்து வீட்டு நாய்க்குட்டி..'
'இந்த வீட்டுக்கணக்கு..'

முடிக்கும் முன்னரே
ஒவ்வொரு முறையும்
'அப்புறமாய் சொல்லுடா'
அன்பாய் தலைகலைத்து
அவசரமாய் அடக்கிவிட்டு

வந்தவர்க்ளைக் கவனித்து
வழியனுப்பி வைத்தபின்
திரும்பிப் பார்த்தால்
உறங்கிப் போயிருந்தது
குழந்தை
பொம்மையை இறுக
அணைத்தபடி

விலகியிருந்த அதன்
போர்வையைச்
சரி செய்தவளை
ஏக்கமாய்ப்
பார்த்துக் கொண்டிருந்தது
மடிப்புக்கலையா அழகுடன்
பிரிக்கப்படாமல் கிடந்த
அன்றைய செய்தித்தாள்.
***

படம்: இணையத்திலிருந்து..

* உரையாடல் கவிதைப் போட்டிக்கு..
* 9 ஆகஸ்ட் 2010 ‘உயிரோசை’ இணைய இதழிலும்..
* ‘பொம்மையம்மா’வாக ஆனந்த விகடனின் சொல்வனத்திலும்..

வியாழன், 3 டிசம்பர், 2009

தேவதையும் முத்துச்சரமும்

தேவதையின் கழுத்தினை அலங்கரித்தபடி இருக்கப் போகிறது 'முத்துச்சரம்', டிசம்பர் 1-15 வரையில் :)!

மாதமிருமுறையாக கடந்த ஜூலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் பெண்களுக்கான பத்திரிகைதான் தேவதை:



தன்னம்பிக்கை மிளிரும் பெண்களையும், சாதித்து வரும் மகளிரையும் ஒருபக்கம் முன் நிறுத்தி வரும் தேவதை [இந்த இதழின் அட்டையில் அறிவிப்பாகியிருக்கும் சாதனைப் பெண்மணி நம் ரம்யா தேவி], சமையல் வீட்டுக்குறிப்புகள் ஆன்மீகம் கோலங்கள் கைவேலை ஷாப்பிங் ஃபேஷன் ஷேர்மார்க்கெட் என எதையும் விட்டு வைக்காமல் எல்லா வயது மற்றும் துறையைச் சேர்ந்த மங்கையரையும் கவருவதாக இருக்கிறது.

வ்வொரு இதழிலும் 'வலையோடு விளையாடு' எனகிற பகுதியில் ஒரு பெண் வலைப்பதிவரை அறிமுகப்படுத்தி வருகிறது. அப்பதிவரின் பல இடுகைகளிலிருந்து தனது வாசகர்களை சுவாரஸ்யப் படுத்தக் கூடியவற்றைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறது. அந்த வரிசையில்தான் இந்த இதழில் நான்:



[கடந்த வருட மெகா PiT போட்டியில் முதல் சுற்றுக்குத் தேர்வான
கடற்கரை சூரியோதம் மேலிரண்டு பக்கங்களுக்கும் பின்னணியாக..]
ல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என அதனைத் திறம்பட நிர்வகித்தபடி, மற்றவர் சாதிக்க உறுதுணையாகவும், நிதி மதி இன்னபிற இலாகா மந்திரிகளாகவும் இயங்கி வருகின்ற இல்லத்தரசிகளுக்கும்..

அலுவலகம் வெளியுலகம் வீடு எனக் கால்களில் கழட்டி வைக்க நேரமே இல்லாத சக்கரங்களுடன் சுழன்றபடி அதை சிரமமாகவும் நினைக்காமல் சவாலாய் அழகாய் பேலன்ஸ் செய்துகொண்டு வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்தவாறே இருக்கும் பெண்களுக்கும்..

தாமும் தமது எண்ணங்களை கருத்துக்களை அனுபவங்களை சுதந்திரமாக முன் வைக்க இப்படி ஒரு களம் இருப்பதைக் கண்டு கொள்ள வைக்கும் முயற்சியாகவும் இருக்கின்றது தேவதையின் 'வலையோடு விளையாடு'. இதனால் பல வலைப்பூக்கள் மலருமென நம்புவோம். வாழ்த்தி அவற்றை வரவேற்போம்.

முத்துச்சர அறிமுகத்துக்கு மனமார்ந்த நன்றிகள் தேவதை!
***