ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

மாயக் கோடுகள் - பண்புடன் இணைய இதழில்..

சுவர்கள் எப்போதும் 
செங்கற்களால் எழுப்பப்படுவதில்லை,
சில நேரங்களில் அவை எண்ணங்களை 
சுவாசித்தும் எழுகின்றன.
இயலாதெனும் தயக்கமும் 
வேண்டாமெனும் எச்சரிக்கையும்
ஒரு முடிச்சாகப் பிணைந்து 
காலத்தைக் கட்டிப் போடுகின்றன.

நமது  எல்லைகளால்
ஆகாயம் சுருங்கிப் போகிறது.
நமது சந்தேகங்களால் 
அடிவானம் மறைந்து போகிறது.
நமது தடுமாற்றங்களால்
திசை விளிம்பு குறுகிப் போகிறது.

வெளிப்படுத்தாத வார்த்தைகள் 
மெளனச் சுவர்களாக உயருகின்றன.
மாயக் கோட்டிற்குள் 
அவிழாத புதிர்களாக உலவுகிறோம்.
கதவு திறந்திருந்தும்
சிந்தனையில் சிக்கி நிற்கிறோம்.

சிறை என்பது எப்போதும்
சங்கிலிகளோ கம்பிகளோ அன்று.
வீழ்ந்தால் என்னாவோம் என்கிற 
பாரமும் பயமுமே அது.
என்றோ அடங்கிப் போன 
குரல்களின் எதிரொலி
கண்ணுக்குப் புலப்படாத சுவர்களை 
எழுப்பியபடி உள்ளது.

எண்ணங்கள் சுழலச் சுழல 
சுவர்களை அசைக்கும்
கேள்விகள் கிளம்புகின்றன:
ஒருவேளை அந்தச் சுவர்கள் 
அங்கு இல்லையோ?
அது நமக்குள் நாம் 
சுமந்து திரியும் வரையறைகளால்
உருவான கூண்டோ?
கோட்டிற்கு அருகிலேயே
கூண்டுக்கு உள்ளேயே
நின்று விட வேண்டாமென
நாம் தீர்மானிக்கும் வரை மட்டுமே 
அவற்றின் இருப்பு அன்றோ?

அச்சம் வலியக் கீறிய கோடுகளுக்குள் 
அடங்கி விடுவதில்லை வாழ்க்கை.
நடுக்கத்தின் விளிம்பிற்கு அப்பால் 
அது காத்திருக்கிறது.
ஒவ்வொரு முடிவும் 
புதிய விடியலைப் பெறுமிடத்தில்
நமக்கான பெருவெளி 
கனிந்து நிற்கிறது.
*

படம்: AI உருவாக்கம்.
**
நன்றி பண்புடன்!

***

7 கருத்துகள்:

  1. பண்புடன் இணைய இதழில் வெளியிட்ட கவிதை நன்று.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை.
    பயம் விலகட்டும்
    புத்தாண்டில் புது விடியல் வரட்டும்.
    நமக்காக கனிந்து நிற்கும் பெருவெளி எல்லோருக்கும் நலத்தை தரட்டும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான கவிதை. சுவர்களாக மட்டுமல்லாமல் விலங்குகளாகவும் இருக்கின்றன அவை.

    பதிலளிநீக்கு
  4. முதல் பத்தியில் வரும் வரிகள் அருமை. முழுக்கவிதையுமே அருமை. இந்த பயம் எனும் விஷயம் நம்மைக் கட்டிப் போட்டால் வாழ்க்கை அதன் பின் நகராது...அதற்கும் அப்பால் வாழ்க்கை பெரும் விடியல் இருக்கிறது என்ற அந்த வரிகளும் சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு