புதன், 24 ஏப்ரல், 2024

முழு நிலவு; காலை மழை; நான் தனித்து நிற்கிறேன் - டு ஃபு சீனக் கவிதைகள் - உதிரிகள் கவிதைச் சிறப்பிதழில்..

டு ஃபு சீனக் கவிதைகள்

முழு நிலவு


கோபுரத்தின் மேல் -- தனித்த, இரு மடங்கிலான நிலவு.
குளிர்ந்த நதியின் மேல் இரவு நிரம்பிய இல்லங்களைக் கடந்து செல்கிறது.
அமைதியற்ற பொன்னிற அலைகளின் குறுக்கே ஒளியைச் சிதறுகிறது.
மிதியடிகளின் மேல், மென்பட்டுத் துணிகளைக் காட்டிலும் செழிப்புடன் மிளிர்கிறது.

வெற்று மலையுச்சிகள், நிசப்தம்: அடர்த்தியற்ற நட்சத்திரங்களுக்கு நடுவே,
இதுவரையில் எந்தக் குறையுமற்றதாக, அது மிதக்கிறது. தேவதாரு மற்றும் இலவங்கப்பட்டை
மணக்கின்றன எனது பழைய தோட்டத்தில்... எங்கும் ஒளி,
பத்தாயிரம் மைல்கள் முழுவதும் ஒரே நேரத்தில் அதன் ஒளியில்!

**

நான் தனித்து நிற்கிறேன்
வானின் விளிம்பில் வட்டமிடுகிறது வல்லூறு
நதியின் மேல் மெதுவாக மிதந்து செல்கின்றன இரு கடற்பறவைகள்

வீசும் காற்றில் பயணிக்கையில் பாதிப்புக்குள்ளாகலாம்,
சறுக்கிச் செல்கின்றன அனாயாசமாக கடலோரத்தில்.

பாரமாக அமர்ந்திருக்கிறது பனித்துளி, கீழிருக்கும் புல்லின் மேல்,
தயாராக உள்ளது சிலந்தியின் வலை.

சொர்க்கத்தின் வழிகள் மனிதனை உள்ளடக்கியுள்ளது:
ஆயிரம் துயரங்களுக்கு நடுவே, நான் தனித்து நிற்கிறேன்.
*


காலை மழை
சிறு மழை வருகிறது, வைகறையொளியில் குளிக்கிறது.
பனி வந்து சேரும் முன்னர், உச்சிமர இலைகளுக்கு நடுவே 
அதை செவிமடுக்கிறேன். விரைவில் மண்ணிலும் தூவுகிறது,
காற்று மேகங்களைப் பின் தொடந்து வீசுகிறது. ஆழ்ந்த
வண்ணங்கள் ஒரு கணம் ஓலை வேய்ந்த வீடுகளுக்கு அழகூட்டுகின்றன.
காட்டினைச் சார்ந்தப் பறவைக் கூட்டங்கள் மற்றும் ஆட்டு மந்தைகளின் பிரகாசம் மங்கத் தொடங்குகிறது. அப்பொழுதில் கஸ்தூரியின் நறுமணம்
பாதி மலை வரைக்கும் பரவுகிறது - - மதியம் தாண்டியும் நீடித்து நிற்கிறது.
*

மூலம்:
"Full Moon", "I stand alone" & "Morning Rain" 
in Chinese 
by Du Fu
**

டு ஃபு (712-770)

வாழ்ந்த காலத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்காது போன எழுத்தாளர்கள் வரிசையில் டு ஃபுவும் ஒருவர். டு ஃபு சீனாவின் லுவோயாங் நகரின் அருகில் பிறந்தவர். அந்நாளின் ஏனைய பலக் கவிஞர்களைப் போல வசதியான குடும்பத்தில் பிறந்தவராயினும் இவரது குடும்பத்தினர் சொத்துக்களை இழந்து வறுமையில் வாழ்ந்தனர். டு ஃபுவின்  இளம் வயதில் அவரது தாயாரும் அண்ணனும் அடுத்தடுத்து காலமாகி விடவும், அத்தை ஒருவரால் வளர்க்கப் பட்டார்.  இவரது தந்தை மறுமணம் செய்து கொண்டதன் மூலமாக மூன்று தம்பிகளும் ஒரு தங்கையும் உண்டு. அவர்களைப் பற்றி பல கவிதைகளில் குறிப்பிட்டிருக்கிறார். 

ஓரளவு அறியப்பட்ட அறிஞரும் அரசு அலுவலரும் ஆன தன் தந்தையைப் போலவே அரசாங்கப் பணியில் சேர விரும்பி, 23 வயதில் தேர்வு எழுதியவர் அதில் தேர்ச்சி பெறவில்லை. வீடு திரும்ப விரும்பாமல் சீனாவின் பல பாகங்களைச் சுற்றித் திரிந்தார். அடுத்த 5 ஆண்டுகளில் தந்தை காலமாகி விட இவரைத் தேடி வந்தது ஆசைப்பட்ட அரசுப் பணி வாய்ப்பு. அதைத் தன் தம்பிக்கு விட்டுக் கொடுத்தார். 40 வயதில் திருமணம் செய்து கொண்டார். 2 மகள்களும் 3 மகன்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் பிறந்தனர். டு ஃபுக்கு ஆஸ்த்மா பிரச்சனையால் உடல் நலம் குன்றியது. வயது ஏறவும் கண் பார்வை மங்கி, காது கேட்கும் திறனும் குறைந்தது.

ஐம்பதாவது வயதில் தன் சொந்த ஊருக்குத் திரும்ப முடிவு செய்தார். குடும்பத்துடன் யாங் நதி வழியாகப் பயணம் மேற்கொண்டார். உடல்நிலை மோசமாகவும் வழியில் இருந்த கொய்ஜோவ் நகரில் இரண்டு வருட காலம் வாழ்ந்தார். அப்போதைய கவர்னரான போ மாவோலின் பொருளாதார ரீதியாக டு ஃபுவுக்கு உதவி இருக்கிறார். அது மட்டுமின்றி  தனிப்பட்ட முறையில் தனது காரியதரிசியாகவும் நியமித்தார்.  நலிவடைந்த கவிஞருக்கு அது பேருதவியாக அமைந்தது. பின்னர் டு ஃபு மீண்டும் தன் சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் 59_ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.

டு ஃபுவின் ஆகச் சிறந்த படைப்புகள்  கொய்ஜோவ் நகரில் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்டவை. 400 கவிதைகள் வரையிலும் எழுதியுள்ளார். பெரும்பாலான கவிதைகள் இயற்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. அற்புதமான கவிதைகளை படைத்தவர். வாழ்ந்த காலத்தில் அதிகம் அறியப்படாமல் போனார். பரவலாகப் படைப்புகளை கொண்டு சேர்க்க இயலாமல் போனதும் ஒரு காரணமாகும். இவர் காலமான பிறகே இவரது கவிதைகள் பிரபலமாகி கொண்டாடப்பட்டன. இன்று வரையிலும் அவரது கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு வருகின்றன. சிறந்த கவிஞர் என்றும், இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்கு மகத்தானது என்றும் உலகம் போற்றுகிறது.
**

ஆங்கிலம் வழித் தமிழில்: ராமலக்ஷ்மி
***

உதிரிகள் கவிதைச் சிறப்பிதழில்..


நன்றி உதிரிகள்!

***

6 கருத்துகள்:

  1. கவிதைகள் அருமை. வாழும் காலத்தில் அவரின் சிறப்புகள் தெரியாமல் போனது வருத்தம். அவர் கவிதைகள் மூலம் இறவா புகழ் பெற்று விட்டார்.
    உதிரிகள் கவிதை சிறப்பிதழில் இடம்பெற்றது மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. டு ஃபு பற்றி அறிந்து கொண்டேன். வித்தியாசமான முறையில் எழுதப் பட்டிருக்கின்றன கவிதைகள். பொதுவான கரு சோகம், துன்பம்தான் போல்.

    பதிலளிநீக்கு
  3. 'தனித்து நிற்கிறேன்" மனதை தொடுகிறது.
    அற்புதமான கவிதைகளை படைத்த ஒருவர் அவர் வாழும்காலத்தில் அறியப்படாமல் இருந்தது கவலை.

    உதிரிகள் கவிதையில் இடம் பெற்றதற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு