செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

மழை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (17) - சொல்வனம் இதழ்: 252


மழை

பல்லிய இசைக்குழு.
இடியுடன் கூடிய பெருமழை
அவர்கள் வாக்னரின் வரவேற்பிசையை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் மரத்தடி இருக்கைகளை விட்டு எழுந்து
கட்டிட மாடத்துக்குள் ஓடுகிறார்கள்,
பெண்கள் கெக்கலித்துச் சிரிக்க, 
ஆண்கள் அமைதியாக இருப்பது போல நடிக்கிறார்கள்,
ஈரமான சிகரெட்டுகள் வீசியெறியப்படுகின்றன,
வாக்னர் தொடர்ந்து வாசிக்கிறார்,
அவர்கள் அத்தனை பேரும் கட்டிட மாடத்துக்குள் நிற்கிறார்கள்.
பறவைகளும் கூட மரத்தை விட்டுவிட்டு
மாடத்துக்குள் ஒதுங்குகின்றன.
அடுத்து ஹங்கேரிய வீரகாவியத்தின்
இரண்டாம் பாடலை இசைக்கிறார் லிஸிஸ்ட்,
இன்னும் மழை தொடருகிறது, ஆனால் பாருங்கள்,
ஒரு மனிதன் மழையில் தனியாக அமர்ந்து
கேட்டுக் கொண்டிருக்கிறான்.
பார்வையாளர்கள் அவனைக் கவனிக்கின்றனர்.
திரும்பி அவனைப் பார்க்கின்றனர்.
இசைக்குழு தன் வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஒரு மனிதன் இரவில் மழையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறான்.
அவனிடம் ஏதோ ஒரு தவறு இருக்கிறது,
இல்லையா?
அவன் இசை
கேட்க வந்திருக்கிறான்.

*

மூலம்: “Rain” by Charles Bukowski

*


ருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படும் ஹென்ரி சார்லஸ் புக்கோவ்ஸ்கி (1920 – 1994) , நாவலாசரியரும் சிறுகதை எழுத்தாளரும் கூட. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார். கூடப்பிறந்தவர்கள் கிடையாது. குடித்து விட்டுத் தாயையும் தன்னையும் அடிக்கும் வழக்கம் கொண்ட தந்தையை எதிர்க்க, சோகத்தை மறக்க தானும் அதே பழக்கத்தில் விழுந்தவர். லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டி கல்லூரியில் பத்திரிகைத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் பெரும்பாலும் விளிம்பு நிலை வேலைகளையேத் தொடர்ந்து பார்த்திருக்கிறார். இவரது எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. ஆறு நாவல்கள், ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள் யாவும் சுமார் அறுபதுக்கு மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. அனைத்தும் அமெரிக்க விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாகக் கொண்டவை.

வரது கவிதைகள் மழுங்கலானவை என்றொரு கூற்று உண்டு. அன்றைய காலக் கட்டத்தில் கவிஞர்கள் ஒலிநயத்துடனான கவிதைகளை இயற்றுவதையே வழமையாகக் கொண்டிருந்தனர். உருவகங்களுடனும், மறை பொருட்களுடனும் எழுதுவதில் முனைப்பு காட்டி வந்தனர். சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் கவிதைகளோ உரைநடை வடிவைக் கொண்டிருந்தன. ஆரவாரமான அவரது படைப்புகள் கவித்துவமற்றவை என்று ஒரு சிலர் வாதிட, மற்ற சிலர் அதே படைப்புகளை உணர்ச்சி வேகமுடையவை எனக் கொண்டாடினர். 

சார்லஸ் புக்கோவ்ஸ்கி இரண்டு உலகப் போர்கள் மற்றும் வியட்நாம் போர் ஆகியவற்றைத் தன் வாழ்க்கையில் பார்த்திருக்கிறார். அவர் படைப்புகளில் பரவலாக வெளிப்படும் அவநம்பிக்கை, கசப்புணர்வு ஆகியவற்றுக்கு இந்தக் காலக்கட்டங்களே காரண கர்த்தாவாகக் கைகாட்டப் படுகின்றது. 
*

ஆசிரியர் குறிப்பு மற்றும் கவிதைகளின் தமிழாக்கம், படங்கள்: ராமலக்ஷ்மி

**



***

10 கருத்துகள்:

  1. கவிதை தமிழாக்கம் அருமை.
    இங்கு வீதிகளில் பாடுபவர்கள் வாத்தியங்கள் வாசிப்பவர்கள் அதிகம்.
    மழையில் நனைந்து இசை கேட்கும் காட்சி கணில் விரிகிறது.
    அவனிடம் என்ன தவறு இருக்க போகிறது?
    கவலை அல்லது இசையில் ஆழ்ந்து போகும் குணம் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நம் ஊர்ப் பக்கங்களில் வீதியில் வாத்தியங்கள் இசைத்து வருபவர்கள் அதிகம். குறிப்பாகப் பண்டிகை நாட்களில் நிச்சயமாக வருவார்கள்.

      /கவலை அல்லது இசையில் ஆழ்ந்து போகும் குணம் இருக்கும்./ உண்மைதான்.

      கருத்துக்கு மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. மழையில் நனைந்தபடி இசைகேட்கும் ரசிகனின் ரசிப்பு ஆச்சர்யம்.  கவிதையை ரசித்தேன். பெயரைப் பார்த்து ரஷ்யரோ என்று நினைத்தேன்!

    பதிலளிநீக்கு
  3. இந்தக் கதையில்  இரண்டு தவறுகள் உள்ளன.

    ஒன்று இடி மின்னலுடன் சேர்ந்து கலப்பு ஒலியாக இருக்கும் அது ரசிக்கத் தக்கதல்ல. நல்ல இசையின் போது ஒருவர் இருமினால் போலும் நன்றாக இருக்காது. அது போன்றே இதுவும். 

    இரண்டாவது மழையில் இசைக்கருவிகள் கெட்டுவிடும் முக்கியமாக தோல் வாத்தியங்கள். ஆகவே அவர்கள் கருவிகளை பாதுகாக்க கச்சேரியை நிறுத்தியே ஆக வேண்டும். 

    மூன்றாவது அவன் காது கேட்காவதவனாகவும் இருக்கலாம்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த மழையில் இசைத்தவர்களும் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த மனிதருக்குச் சற்றும் சளைத்தவர்களல்ல எனத் தெரிகிறது. இசை மீதான ஈடுபாட்டால் தொடர்ந்து வாசித்திருக்கிறார்கள்.

      /இசைக்கருவிகள் கெட்டுவிடும்/

      கூரை கொண்ட மேடையாக இருக்கலாமே :)!

      காது கேட்காத ஒருவன் கச்சேரிக்கு வந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.



      நீக்கு
  4. தாங்கள் ஈடுபாடுள்ளத் துறையில் மெய்மறந்து பரவசத்துடன் ஒன்றிக் கலந்து விடும் மனிதர்கள், அவர்கள் வாழும் காலத்தில் வெறும் "வேடிக்கை காட்சிப் பொருள்கள் தான்" என்பதை எவ்வளவு எளிமையாக் காட்சிப் படுத்தி இருக்கிறார்.

    Lighter part "giggling" வார்த்தை மொழிபெயர்ப்பு நல்ல ரசனை:).

    நல்ல சிந்தனையைத் தூண்டும் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கக் கொடுப்பதற்காக மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி :).

    பதிலளிநீக்கு