வியாழன், 12 செப்டம்பர், 2019

துருவங்கள் - ‘தென்றல்’ அமெரிக்க மாத இதழில்..

தென்றல் அமெரிக்கப் பத்திரிகையின் 2019 செப்டம்பர் மாத இதழில் நான் எடுத்த படங்களோடு வெளியாகியுள்ள இரு கவிதைகளில் ஒன்று..

துருவங்கள்

நெருப்பாய் அவனும்
நீராய் அவளும்.

எதிர் எதிர்த் துருவங்கள்
ஈர்த்திடும் நியதியில்
வாக்குவாதத்தில் தொடங்கி
அன்பென மயங்கி
வாழ்க்கையில் இணைய
முடிவெடுத்த வேளையில்
சொல்லிக் கொண்டார்கள்
மோதிக் கொண்டது
வலிக்கவில்லை என.

கரங்கள் கோர்த்து
தொடங்கிய பாதையில்
கனலென வார்த்தைகளால்
சுட்டெரிப்பதில் அவனும்
அவமதிப்பின் அடி ஆழத்துக்கு 
அவனை இழுத்து மூழ்கடிப்பதில் 
தீவிரமாய் அவளும்.

சிறிது தூரம் கூட
தாக்குப் பிடிக்க முடியாத
பயணத்தில்
விசும்புகிறாள் தன்னை அவன்
கொல்ல முயல்வதாக.
கூச்சலிடுகிறான் அவன்
தண்ணீருக்கடியில் தான் 
மூச்சுத் திணறுவதாக.
*
தென்றல் இதழின் இணையதளத்தில் கணக்கை உருவாக்கிக் கொண்டு வாசிக்கலாம் இங்கே . 
நன்றி தென்றல்!

**
ஒலி வடிவில் கேட்கலாம் இங்கே . நன்றி திருமதி. சரஸ்வதி தியாகராஜன்!

***

14 கருத்துகள்:

  1. பருவ மயக்கத்தில் இணைந்து உருவ மயக்கத்தில் மூழ்கியபின் மூச்சுத்திணற வைக்கின்றன கிடைத்துவிட்ட பொருளின் சலிப்பும், உண்மை வாழ்வின் நிதர்சனமும்!

    பதிலளிநீக்கு
  2. அழகான படம். சிறப்பான கவிதை. தென்றல் வெளியீடு - வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அமெரிக்கா மாத இதழில் உங்களின் கவிதை இடம்பெற்றதற்கு மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.
    துருவங்கள் இணைந்தால் அது அதிசயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. உணர்வுகள் அடங்கியபின்பே உண்மை அன்பு புரிகிறது. நெருப்பு - கனலென வார்த்தைகள்; பொருத்தமான உருவகம். தென்றல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான வரிகள்
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு