வியாழன், 6 ஜூன், 2019

மாநில மைய நூலகம், தொங்கு பாலம், அசோகா தூண் - பெங்களூர்.. சில Landmarks.. (3)

மாநில மைய நூலகம்:
#1

திவுலகம் நுழைந்த 2008_ஆம் ஆண்டிலிருந்து ஏழெட்டு முறைகளேனும் பதிவர், எழுத்தாளர் மற்றும் புகைப்படக் கலைஞர்களுடனான சந்திப்புகள் கப்பன் பூங்காவில் இந்த நூலகத்தைச் சுற்றி இருக்கும் சிறு தோட்டங்கள், மரத்தடிகளில் நடந்திருக்கின்றன :). அப்படிச் சென்ற பல சமயங்களில் எடுத்த படங்களுடன், தகவல்கள்:

மாநில மைய நூலகம் இயங்கி வரும் சேஷாத்ரி ஐயர் நினைவுக் கூடம் அதனது தனித்துவம் வாய்ந்த கட்டுமானத்திற்காக புகழ் பெற்றிருப்பதோடு, பெங்களூரில் பார்க்க வேண்டிய இடங்களிலும் முன்னணியில் இருக்கிறது. 

#2
பின் பக்கத்தின் அழகிய தோற்றம்


சேஷாத்ரி ஐயர் 1883_லிருந்து 1901 வரையிலும் மைசூரின் திவானாக சேவை ஆற்றியவர். அவரைக் கெளரவப்படுத்தும் விதத்தில் கட்டப்பட்ட இந்த நினைவுக்கூடம் இப்போது ஆடம்பரமான தோற்றத்தைக் கொண்ட, மாநில மைய நூலகமாக, இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவுக்குத் தொன்மையான இலக்கிய நூல்களைக் கொண்டதாக உள்ளது. 1905_ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நூலகம் 0830-1900 ஆண்டுகள் வரையிலான நூல்களின் சேமிப்புக் கூடமாகவும் சரித்திர ஆர்வலர்கள் தவற விடக் கூடாத இடமாகவும் உள்ளது.

#3
பக்கவாட்டுத் தோற்றம்



பசுமை சூழ்ந்த கப்பன் பூங்காவின் உள்ளே சிவப்பு வண்ணத்தில் காண்போரை ஈர்க்கிறது இந்நூலகம்.

#4


ஐரோப்பா பாணியில் குறிப்பாக இத்தாலியின் டஸ்கன் பாணி தூண்களைக் கொண்டு கட்டப்பட்டது. முழுக்கவும் சிவப்பு நிற செங்கற்களாலும் சுண்ணாம்பு காரையாலும் கட்டப்பட்டு பரந்து நிமிர்ந்து நிற்கும் இந்த அழகிய கட்டிடத்தைச் சுற்றி பூந்தோட்டங்கள் உள்ளன. 

***
தொங்கு பாலம்:

பெங்களூரில் “hanging bridge” என அறியப்படும், கம்பிகளால் தாங்கப்பட்ட தொங்கு பாலம் ஓல்ட் மெட்ராஸ் ரோடும் அவுட்டர் ரிங் ரோடும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. பாலத்தின் மொத்த நீளம் 230 மீட்டர் என்றால் அதில் கம்பிகளால் தாங்கப்பட்ட பகுதி சுமார் 180 மீட்டர் இருக்கும். 

#5


இது தென்மேற்கு இரயில்வே துறையினரால் கிருஷ்ணராஜபுரம் ரயில்வே நிலையத்தின் மேல்  செல்லுகிறபடியாகக் கட்டப் பட்டுள்ளது. 2003_ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 2009_ஆம் ஆண்டு இன்டியன் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் பிரிட்ஸ் என்ஜினியர்ஸ் ( Indian Institution of Bridge Engineers) அமைப்பினால் இந்தப் பாலம் தனிச்சிறந்த தேசியப் பாலமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

#6

எப்போதும் பரபரப்பாக பல வாகனங்கள் விரைந்தபடி இருக்கிற பாலத்தை ஒரு ஞாயிறு இப்படிக் காலியாகப் பார்த்தபோது எடுத்த படங்கள் இவை.

ஞாயிறு  மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் மட்டுமே அவுட்டர் ரிங் ரோடை இப்படிப் பார்க்க முடியும்:

#7

***


ஜெயநகர் அசோகா தூண்:

#8
பத்தே நாட்களில் உருவான தூண்

1945_ஆம் ஆண்டு புதிய குடியிருப்புகளுடன் பழைய பெங்களூரை விரிவாக்கம் செய்யவதற்காகவே உருவான அமைப்பு [City Improvement Trust Board (CITB) ] . இந்த நகர வளர்ச்சி அறக்கட்டளை வாரியத்தினால் 1948_ஆம் ஆண்டு பி.எஸ். ரங்கநாதாச்சாரி என்பவர் அசோகா தூணை பத்தே நாட்களில் நிர்மாணிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆகஸ்ட் 21_ஆம் தேதி இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ஆகிய சி. ராஜகோபாலாச்சாரி தென் பெங்களூரில் ஜெயநகரின் பிறப்பைக் குறிக்கும் வகையில் அசோகா தூணுக்கு அடியில் பொறிக்கப்பட்டிருந்த பலகையைத் திறந்து வைக்க வரவிருந்தார். முந்தைய மாலை ஒப்பந்தக்காரர் ரங்கநாதாச்சாரி தூணை எப்படிக் கட்டி முடிக்கப் போகிறோம்  மிகுந்த கவலைக்குள்ளானார். பத்தாவது நாளில் முடித்து விடலாம் என ஆரம்பிக்கப்பட்டு எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்த வேளையில் திடீரெனப் பிரதான சிற்பி தலைமறைவாகி விட்டார். ரங்கநாதச்சாரி அன் கோ இஞ்சனியர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்த ரங்கநாதச்சாரி இதை ஒரு கெளரவப் பிரச்சனையாகவும் சவாலாகவும் எடுத்துக் கொண்டு அருணாச்சலம் எனும் சிற்பியை தமிழ்நாட்டிலிருந்து வரவழைத்து இரவு முழுவது பெட்ரோமாஸ் விளக்கொளியில் கூட்டாக நின்று உழைத்து, பொழுது புலருவதற்குள் திறப்பு விழாவுக்குத் தூணைத் தயார் செய்து விட்டுள்ளார்கள்.

தற்போது 70+ வயதாகும் அவரது மகன் ராமசாமி சமீப ஆண்டுகளில் இதைப் பற்றி பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். அத்தோடு ரங்கநாதச்சாரி ஒரு சிறந்த புகைப்படக் கலைஞர் என்றும் தூண் உருவாக்கத்தையும், உருவாக்கி முடித்த பின்னும் பல படங்கள் அவர் எடுத்திருந்ததை நினைவு கூர்ந்தார். 

அதில் ஒன்று இணையத்திலிருந்து..


திரு. ராமசாமி பத்திரிகையாளர்களுக்கு அளித்த இப்படத்தில் இடப்பக்கம் இருப்பது ஜெயநகர் அசோகா தூண். வலப்பக்கம் இருப்பது 1949_ஆண்டு இவரது தந்தை பெங்களூரின் வடக்கு எல்லையைக் குறிக்கும் விதமாக கிர்லாஸ்கர் கம்பெனி அருகில் நிர்மாணித்த தூண். இரண்டு படங்களுமே திரு ரங்கநாதச்சாரியால் எடுக்கப்பட்டவை.

20 அடி உயரமுள்ள ஜெயநகர் அசோகா தூண் அந்நாளில் 3000 ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. தூணைச் சுற்றி இப்போது காணப்படும் இரும்பு வளையம் அப்போது கிடையாது. வாகனத்தின் உள் இருந்து அலைபேசியில் எடுத்த படங்கள் இவை. சுற்றி எந்நேரமும் இருந்து வரும் போக்குவரத்தில், இறங்கி நின்றோ, அருகே சென்றோ எடுப்பது சற்று சிரமமே.

#9

தூணின் உச்சியில் நம் தேசியச் சின்னமாகிய நான்கு சிங்கங்கள் வீற்றிருக்கின்றன. அத்தோடு தூணில் சிங்கங்களுக்கு அடியில் மைசூரின் ராஜ சின்னமான இரண்டு தலை கொண்ட புராணப் பறவையான கண்டபெருண்டாவும் செதுக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் தூண் கட்டப்பட்ட போது தூணைச் சுற்றி முழுக்கவும் வயல்கள் மட்டுமே இருந்திருக்கின்றன. தென் பெங்களூரின் எல்லையைக் குறிப்பதற்காகவும் இருந்திருக்கிறது. இந்தத் தூணைச் சுற்றி உருவான ஜெயநகர் இன்று ஒன்பது வட்டாரங்களுடன் (blocks) பெங்களூரில் வளர்ச்சி பெற்ற முக்கிய இடங்களுள் ஒன்றாகத் திகழுகிறது.

***

தகவல்கள்: இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்யப்பட்டவை.

14 கருத்துகள்:

  1. தூணுக்குப் பின்னே உள்ள செய்தி வியக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  2. வாய்பாயா வாஜ்பாயா?

    பத்தே நாட்களில் உருவான தூண் ஆச்சர்யம். அதைப்பற்றிய தகவலும் சுவாரஸ்யம்.

    அழகிய படங்களுடன் சுவாரஸ்யமான தகவல்கள்.

    பதிலளிநீக்கு
  3. அழகிய படங்கள். தூண் வியப்பு.

    பதிலளிநீக்கு
  4. அழகிய காட்சிகள் ...

    எத்துனை முறை படம் எடுத்தாலும் அலுக்காத இடம் cuppon park ...ஒவ்வொரு முறையும் ஒரு கோணத்தில் காட்சி அளிக்கும் ...

    பதிலளிநீக்கு