ஞாயிறு, 17 மார்ச், 2019

தூறல்: 35 - இன்றைய செய்திகள்

 ஒரு படம்.. ஒரு லட்சம்++ பக்கப் பார்வைகள்..!

ளிப்படங்களுக்கான ஃப்ளிக்கர் தளத்தில் எக்ஸ்ப்ளோர் பக்கம் என்றால் என்னவென்பதை முன்னரே பலமுறைகள் பகிர்ந்திருக்கிறேன். நாளொன்றுக்கு அத்தளத்தில் சுமார் பதினாறு இலட்சம்++ படங்கள் வலையேறுகின்றன. அதிலிருந்து 500 படங்கள் தெரிவு செய்யப்பட்டு ‘எக்ஸ்ப்ளோர்’ பக்கத்தில் வெளியிடப்படும். இதுவரையிலும் அப்பக்கத்தில் தேர்வான எனது படங்களைப் பற்றி பகிர்ந்து வந்திருக்கிறேன். இப்போது அந்த வரிசையில் இம்மாதம் சிவராத்திரியையொட்டி நான் பகிர்ந்த நடராஜர் படமும்:


சென்னை விமானநிலையத்தில் இருக்கும் சிலை இது. இதுவரையிலும் தான் பார்த்த இந்த சிலையின் படங்களில் இதுவே சிறப்பானது என
(PiT) தமிழில் புகைப்படக்கலை தள உறுப்பினர் குழுவில் ஒருவரும் சிறந்த ஒளிப்படக் கலைஞருமான சர்வேசனிடமிருந்து கிடைத்த பாராட்டிலேயே மனம் மகிழ்ச்சி அடைந்திருந்த வேளையில், பதிந்த மறுநாள் எக்ஸ்ப்ளோர் பக்கத்தில் தேர்வானது அடுத்த மகிழ்ச்சி. அதுவும் 500 படங்களில் முதல் 50_க்குள் இடம் பெறும் படங்கள் அதிகமான பக்கப் பார்வைகளைப் பெறும். இந்தப் படம் அவ்வாறாகத் தேர்வாகியிருந்தபடியால் விறுவிறுவென இரண்டு நாட்களில் 98000 பக்கப்பார்வைகளைப் பெற்று, பின் அடுத்த ஒரு வாரத்தில் ஒரு இலட்சத்தையும் தாண்டிச் சென்றபடி உள்ளது. இதற்கு முன்னர் எக்ஸ்ப்ளோர் பக்கத்தில் தேர்வான எனது படங்களில் ஒன்றிற்கு 12500 பக்கப் பார்வைகள் கிடைத்திருந்ததே அதிக பட்சமானதாக இருந்தது. இம்முறை தர வரிசையில் 50_க்குள் வந்தபடியால் கிடைத்த favourites, comments ஆகியனவும் அதிகமே.


என்ன ஒரு சிறு வருத்தம், இதுவே டி.எஸ்.எல்.ஆரில் எடுத்த படமாய் இருந்தால் மனதுக்கு இன்னும் நிறைவாக இருந்திருக்கும்:). நாமே செட் செய்து எடுக்கும் படங்களில் கிடைக்கும் திருப்தியே அலாதியானது. ஆனால் பயணங்களின் போது எல்லா நேரமும் கனமான கேமராவைச் சுமந்து செல்ல முடிவதில்லை. ஆகையால் மனதைக் கவரும் சில காட்சிகளை தவறவிடாமலிருக்க மொபைலைப் பயன்படுத்த வேண்டியதாயிருக்கிறது. இப்படம் ஒன் ப்ளஸ் 6T உபயோகித்து எடுத்ததாகும்.  இதில்  கோணம் அமைத்தது மட்டுமே எனது வேலை. பொதுவாக மொபைல் படங்களை நான் ஃப்ளிக்கரில் பதிவதைத் தவிர்ப்பேன். மிக முக்கியமான லேண்ட் மார்க், மீண்டும் கிடைக்காத காட்சிகள் போன்றனவற்றை மட்டுமே பதிவேன். ஃப்ளிக்கரிலிருக்கும் மூவாயிரத்து முந்நூற்று சொச்சப் படங்களில் 12 படங்கள் மட்டுமே மொபைல் படங்கள் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்:).
*
இன்றைய செய்திகள்
ல்லமை மின்னிதழ் படக் கவிதைப் போட்டிக்காக எட்டாவது முறையாகத் தேர்வாகியுள்ளது ‘இன்றைய செய்திகள்’  என்ற தலைப்பில் நான் ஃப்ளிக்கரில் பகிர்ந்திருந்த இந்தப் படம்:
படத்துக்கு வந்த கவிதைகள் இங்கே
போட்டி முடிவு இங்கே.

வல்லமை ஆசிரியர் குழுவினருக்கு நன்றி! 
கலந்து கொண்ட இருவருக்கும் வெற்றி பெற்றவருக்கும் வாழ்த்துகள்!

*
சந்திப்பு, ஆல்பம்:
னது அபிமான எழுத்தாளர் சுகாவுடன். சென்ற மாதத்தில் இதே நாள் திருநெல்வேலியில் நிறைவேறிய சந்திப்பு. 2011_ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் வெளியான மூங்கில் மூச்சு தொடரில் திருநெல்வேலியைப் பற்றி வாசிக்க வாசிக்க https://tamilamudam.blogspot.com/2011/03/blog-post_31.html யார் இவர் என ஆர்வமான போது நண்பர்கள் மூலமாக அறிமுகம். இவரது ‘தாயார் சன்னதி’ நூலுக்கு நான் எழுதிய மதிப்புரையும் https://tamilamudam.blogspot.com/2011/11/blog-post.html , 2014_ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் எனது ‘அடை மழை’ நூலை இவர் வெளியிட்டுச் சிறப்பித்ததும் முத்துச்சரத்தை தொடரும் நண்பர்கள் அறிவீர்கள். நான் எடுக்கும் ஒளிப்படங்களுக்குத் தொடர்ந்த ஊக்கம் தருபவர்.  சில படங்களைத் தனது கட்டுரைகளுக்குப் பயன்படுத்தியதுண்டு. திருநெல்வேலி குறித்த எனது சில பதிவுகளுக்கு இங்கே பின்னூட்டங்களும் அளித்ததும் உண்டு. என் கணவரது அண்ணன் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தபோது நிறைவேறியது,  அறிமுகமாகி 8 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துப் பேசும் வாய்ப்பு. மிக்க மகிழ்ச்சி.


இவரது தந்தை தமிழ்க் கடல் திரு. நெல்லை கண்ணன் அவர்களும் அதே நாள் காலையில் நடைபெற்ற மறுவீட்டு வைபவத்தில் கலந்து கொண்டு மணமக்களை மலர் தூவி வாழ்த்திச் சிறப்பித்தார். நேரம் எடுத்து அனைவருடனும் அளவளாவி மகிழ்வித்தார். இதற்கு முந்தைய நெல்லைப் பயணத்தின் போது அவரைத் தற்செயலாக வங்கி ஒன்றில் சந்தித்ததையும் அவரது ‘குறுக்குத்துறை இரகசியங்கள்' நூலைப் பற்றிய என் வாசிப்பனுபவத்தையும் தூறல்: 33_ல் பகிர்ந்திருந்தேன்:
 அந்நூலின் பாகம் இரண்டு விரைவில் வெளிவர இருப்பதாகச் சொன்னார்.
*

படத்துளி

பெண் சக்தி!
இம்மாதம் மகளிர் தினத்தன்று ஃப்ளிக்கரில் பதிந்த படம்.

***

16 கருத்துகள்:

  1. பகிர்ந்து கொண்ட படங்களும் தகவல்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. //நாளொன்றுக்கு பதினாறு லட்சம் ப்ளஸ் படங்கள் வலையேறுகின்றன...//

    அடேங்கப்பா.//

    படத்துக்கு வந்த கவிதைகள் சுட்டி திறக்கவில்லை.

    திரு சுகா அவர்களுடனான சந்திப்பு குறித்து மகிழ்ச்சி. அவர் தனது வலைத்தள பக்கத்தைத் தொடர்வது இல்லை போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுட்டியை தற்போது சரி செய்து விட்டேன்:). நன்றி ஸ்ரீராம்.

      அவ்வப்போது அவர் பத்திரிகைகளில் எழுதும் கட்டுரைகள் தொடர்ந்து அவரது வலைத்தளத்தில் பதியப்பட்டு வருகின்றனவே. நேற்றும் கூட ஒரு புதிய பதிவு.

      உங்கள் வலைப் பக்கத்தில் நீங்கள் தொடரும் வலைப்பூக்களின் பட்டியலில் முன்னர் அவரது தளமும் இருந்ததை அறிவேன். அவரது பக்கம் ப்ளாக்ஸ்பாட்டிலிருந்து டாட் காம் என மாறியதில் உங்கள் இணைப்பு இயங்காமல் போனதென நினைவு. மீண்டும் இணைத்திடலாம்:
      http://venuvanam.com/

      நீக்கு
  3. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
    படங்கள் எல்லாம் அழகு.
    உங்கள் பேசுபடங்கள் வெற்றி தொடர வாழ்த்துக்கள்.
    இந்த பதிவில் பகிர்ந்து கொண்ட அனைத்து செய்திகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. முதியவர் படமே ஒரு கவிதை போல் அழகு. திரு.யாழ். பாஸ்கரன் அவர்கள் கவிதையும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  5. படங்கள், அதற்கேற்ற பொருத்தமான செய்திகள் அருமை.

    பதிலளிநீக்கு
  6. நடராஜர் சிலையும் பெரியவர் படமும் ரொம்ப அழகா இருக்கு :-) .

    நான் OnePlus 3T பயன்படுத்துகிறேன். இதில் எனக்கு திருப்தியில்லை. 6T தரத்தை மேம்படுத்தியிருக்கலாம்.

    சாம்சங் கேமரா தரம் தான் மிகச் சிறப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கிரி :).

      நான் 2 வருடங்கள் One Plus 3 உபயோகித்து விட்டு, 6T அறிமுகமான போது வாங்கினேன். 3_யை விடவும் 6T _யின் கேமரா நன்றாகவே உள்ளது. கணவரது சாம்சங் S8 பயன்படுத்தியிருக்கிறேன். ஒன் ப்ளஸை விடவும் சிறப்பாகதான் உள்ளது. ஆனால் என்னதான் மொபைல் ஃபோன்கள் இத்தனை அத்தனை மெகா பிக்ஸல் என சொல்லிக் கொண்டாலும் அவை எல்லாமே நினைவுகளின் சேமிப்புக்கு மட்டுமே. சற்றே படங்களை என்லார்ஜ் செய்து பார்த்தால் டீடெயில்ஸ் இருப்பதில்லை. இதனாலேயே அவற்றை ஃப்ளிக்கரில் பகிர விரும்புவதில்லை.

      நீக்கு