வெள்ளி, 12 அக்டோபர், 2018

யாரோடும் பேசாதவள் - இந்த வார கல்கி இதழில்..


21 அக்டோபர் 2018 இதழில்..


யாரோடும் பேசாதவள்

வள் பேசவே மாட்டாள் 
என்றார்கள்
ஒரு காலத்தில் 
பேசிக் கொண்டிருந்தவள்தாம் 
என்றார்கள்
யாருமற்ற தனிமையில்  
தனக்குத்தானே 
பேசிக் கொள்வாளாய் இருக்கும்
என்றார்கள்
பேசுவது மறந்து விட்டிருக்கலாம் 
என்றார்கள்
பேச விரும்பாதிருக்கலாம் 
என்றார்கள்

வெறித்த கண்கள் 
உலர்ந்த உதடுகள்
வீங்கிய கன்னங்கள் 
புடைத்த நாசி
சுருங்கிய நெற்றி 
நரைத்த கேசம்
இவற்றைத் தாண்டி 
இவளது இளவயது வனப்பை
என்னால் காண முடிந்தது.

ஒன்று மட்டும் உறுதி
இவ்வுலகம் 
எதையுமே இவளுக்கு
கொடுக்க முன் வரவில்லை
ஆனால் 
இவளிடமிருந்து திரும்பத் திரும்ப 
எடுத்துக் கொண்டிருக்கிறது.
இனி எடுக்க எதுவுமே இல்லை 
என்கிற அளவுக்கு வெறுமையாக்கி 
எதற்குமே உபயோகமில்லை என 
முத்திரை குத்தி  வீசி விட்டிருக்கிறது.

நான் விழைந்தாலும்
இறுகிய இவள் முகத்தின் 
எந்தவொரு அவயமும்
இவளுக்காக 
என்னைப் பேசக் கூட 
அனுமதிக்கவில்லை.

மனிதர்களின் முகங்களை 
தேடித் தேடி 
படமாக்கி வந்த என்னால்
இவள் முன் நிற்க முடியவில்லை. 
நடுங்கும் மனதோடு
அவளது இறுக்கத்தை
ஏற்றிக்  கொண்டேன்
என் ஒளிப்படக் கருவியில்.

உயிர் பெற்ற ஒளிப்படத்தின் 
உள்ளிருந்து இப்போது 
யாராலும் பதிலளிக்க முடியாத 
கேள்விகளை 
எழுப்பிக் கொண்டிருக்கிறாள்
என்னிடத்தில்..
யாரோடும் பேசாதவள்!
***

நன்றி கல்கி!

***
எனது சேமிப்புக்காக:
கவிதையை Facebook_ல் பகிர்ந்த போது பாராட்டியிருந்த அனைவருக்கும் நன்றி. 

13 கருத்துகள்:

  1. அடடே... ​கவிஞர் ராமலக்ஷ்மி இஸ் பேக்! அருமையான கவிதையுடன் மீண்டுமொரு அதிரடி வருகை. கவிதையை ரசித்தேன். வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    கதைஞர் ராமலக்ஷ்மி எப்போது முகம் காட்டுவார்?

    பதிலளிநீக்கு
  2. கையறுநிலையில் வாழும் முதியவர்களின் ஒரே எதிர்ப்பு மவுனம். முதியவர்களின் இயலாமையும், ஏமாற்றத்தையும், வலியையும் அழுத்தமாகக் காட்சியிலும் வார்த்தைகளாலும் பதிவு செய்திருக்கிறீர்கள்.

    உங்கள் ஆன்மா உயிர்ப்புடன் இருப்பதால் தான் அந்த மனம் எழுப்பும் கேள்விகளையாவது உங்களால் கேட்கமுடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வாக்கியம் முற்றிலும் உண்மை.

      கவிதை மட்டுமே எனது. கவிதைக்காக நான் இணைத்திருந்த படம் இங்கே உள்ளது: https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/28388253000/ ஆனால் வெளியாகியிருக்கும் படம் வரிகளுக்கு மேலும் பொருத்தமாக இருப்பதாக ஆசிரியர் கருதியிருக்க வேண்டும். அவரது
      தெரிவு நன்றெனக் கருதுகிறேன்.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. உண்மைதான். பிரசுரமானப் படம் பரிதாப உணர்வைத் தருகிறது. Flikker உள்ள படம் கசப்பான வாழ்க்கையின் அவலத்தை பிரதிபலிப்பதை போல் தோற்றமளிக்கிறது.

      நீக்கு
    3. கல்கியில் பிரசுரித்துள்ள படம் நம் மண்ணை நினைவு படுத்துகிறது. நீங்கள் இணைத்திருந்த படம் ஏதோ அந்நிய சாயலாக எனக்கு தோன்றுகிறது. (இது என் பார்வை மட்டுமே.)

      நீக்கு
    4. இருக்கலாம். பெங்களூரில் எடுத்த படம் அது. கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி வாழ்க வளமுடன்.
    ஸ்ரீராம் கேட்டதை கவனத்தில் வைத்து கதையும் எழுதலாம்.
    இவர்களை வைத்தே எழுதலாம்.

    பதிலளிநீக்கு